மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் மும்பை உயர்நீதிமன்றம் சமீபத்தில் விடுவித்த நிலையில், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் ஜூலை 31-ஆம் தேதி, பிரக்யாசிங் தாக்கூர் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்குகளில் பல சந்தேகங்கள் இருப்பதாகவும், பா.ஜ.க. அரசு வந்தபின் மாலேகான் வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்கள் திட்டமிட்டு விடுதலையை நோக்கிக் கொண்டுசெல்லப்பட்டனர் என்றொரு தரப்பினர் பேசிவருகின்றனர். அவர்கள் என்ன சொல் கின்றனர்?
முஸ்லிம் தீவிரவாதிகள் குண்டு வைத்து இந்துக்களை அழிப்பதற்குப் போட்டியாக, முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்து குண்டுகள் வைத்து அழிப்பதற்காகக் குறிவைக்கப்பட்டது நாசிக் மாவட்டத்தின் மாலேகான் நகரின் பள்ளி வாசல். இங்கே 2006-ல் நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழக்க, 100 பேர் காயமடைந்தனர். இரண்டு வருட இடைவெளியில் மாலேகானில் நான்கு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 31 பேர் இறந்ததுடன் 312 பேர் காயமடைந்தனர்.
முதலில் இந்த வழக்கை மகாராஷ்டிரா பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரித்தனர். அபினவ் பாரத் எனும் இந்து அமைப்பின் பெயர் இவ்வழக்கில் அடிபட்டது. தொடக்கத்தில் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14. வழக்கின் பிரதான குற்றவாளிகள் பட்டியலில் பிரக்யாசிங் தாக்கூர் பெயர் இருந்தது. சம்பவ இடத்திலிருந்த எல்.எம்.எல். ப்ரீடம் பைக்கில்தான் குண்டு மறைத்துவைத்து வெடிக்கப்பட்டிருந்தது.
ஏ.டி.எஸ். அமைப்பின் விசாரணையின்படி, வெடிகுண்டு தயாரிக்க பயிற்சியளித்தவர் புனேவைச் சேர்ந்த ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற மேஜர் ரமேஷ் உபத்யாயா. சமீர் குல்கர்னி, வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருட்களைத் திரட்டியளித் திருந்தார். ராஜா ரஹிர்கார், குற்றச்செயல்களை நிகழ்த்தியவர்களுக்கு அடைக்கலம் அளித்திருந்தார். லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித், ஆர்.டி.எக்ஸ். கிடைப்பதற்கு உதவியாக இருந்தவர். சுவாமி தேவ்தீர்த்தா சதித்திட்டத்தைத் தீட்டியவர்.
மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு விசாரித்துவந்த நிலையில், வழக்கு தீவிரவாதச் செயல்களை விசாரிக்கும் என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. 2008-ல் பிரக்யா தாக்கூருக்கு மரண தண்டனை தரவேண்டும் என குரல் கொடுத்த என்.ஐ.ஏ., 2014-ல் காங்கிரஸ் ஆட்சியை இழந்து பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபின் தனது அணுகுமுறை யை மாற்றிக்கொண்டது. 2008-ல் கைது செய்யப்பட்ட அவர் 2017-ல் உடல்நிலையைக் காரணம் காட்டி விடுதலை செய்யப்பட்டார்.
அதை உறுதி செய்வதுபோல் என்.ஐ.ஏ.வுக்கு சிறப்பு அரசு வழக்கறிஞராகப் பணியாற்றிய ரோகிணி சாலியன், அரசின் தலையீடு வழக்கில் இருப்பதாக குற்றம்சாட்டினார். 2015-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில், சாலியன், "என்.ஐ.ஏ. அதிகாரிகளில் ஒருவரிட மிருந்து கடந்த வருடம் என்னிடம் பேசவருவதாக எனக்கொரு அழைப்புவந்தது. அவர் அதனை போனில் பேச விரும்பவில்லை. அவர் என்னிடம், "வழக்கில் நான் மென்மையாகப் போகவேண்டும்'' எனத் தெரிவித்தார். அதே வருடம் ஜூன் 12-ல், அதே அதிகாரி என்னைச் சந்தித்து, இந்த வழக்கில் எனக்குப் பதில் வேறு ஒரு அதிகாரி நியமிக்கப்பட உள்ளதாக வாய்ப்பேச்சில் தெரிவித்தார்.” மூன்று மாதங்களுக்குப் பின், சாலியன் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் அவருடன் பேசிய, காவல் அதிகாரியின் பெயரைக் குறிப்பிட்டு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார், “நீதி நிர்வாகத்தில் தலையிட “முயற்சிசெய்ததாக” அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். அதனால் எந்தப் பயனும் விளையவில்லை. சுருக்கமாக, பா.ஜ.க. அதிகாரத்துக்கு வந்ததும் வழக்கின் போக்கு முற்றிலும் மாறியிருந்தது.
கர்னல் புரோஹித்துக்கும் மேஜர் ரமேஷுக்கும் இடையிலான உரையாடல்களை எல்லாம் ஏ.டி.எஸ். கைப்பற்றியிருந்தது. அதில் பிரக்யாசிங் தாக்கூரைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன. அதாவது, தொடக்கத்தில் வலுவாக இருந்த வழக்கு படிப்படியாக வலுவிழக்கச் செய்யப்பட்டது. 2011-ல் குற்றப்பத்திரிகையில் 14 பேர் இடம்பெற்றிருந்தனர். 2016-ல் என்.ஐ.ஏ. இறுதி அறிக்கை தாக்கல்செய்தபோது 10 பேராக மாறிவிட்டனர். தவிரவும், இந்த அறிக்கையில் பிரக்யாசிங் தாக்கூர் நிரபராதி என்ற முடிவுக்கு என்.ஐ.ஏ. வந்துவிட்டது.
குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட பைக்கில் போலி பதிவெண் பயன்படுத்தப் பட்டிருந்தது. இஞ்ஜின் எண், சேஸிங் எண் அழிக்கப்பட்டிருந்தன. இருந்தபோதும் ஏ.டி.எஸ். தீவிர முயற்சியெடுத்து அது பிரக்யாசிங்கின் பைக் என கண்டறிந்து முதல் தகவலறிக்கையில் அவரையும் பிரதான குற்றவாளியாகச் சேர்த்தனர். ஆனால் என்.ஐ.ஏ.வின் விசாரணையில் பைக் பிரக்யாசிங் உடையதென்றாலும், அதை கடைசி இரண்டு ஆண்டுகள் பயன்படுத்தியது கல்சங்க ராதான் என்று கூறி அவரை நிரபராதியாக்கியது.
கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக நீடித்த விசாரணைக்குப் பின் என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி லஹோட்டி, குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் குண்டுவெடிப்பு தாக்குதலை நிகழ்த்தியதற்கு போதிய ஆதாரமில்லையெனத் தெரிவித்து 7 பேரையும் விடுவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையில் 37 பேர் முதலில் அளித்த தங்கள் வாக்குமூலத்தைத் திரும்பப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குண்டுவெடிப்பில் உயிரிழந்த வர்களின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அகமது அன்சாரி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளார்.