"பிரிக்க முடியாதது... அரசியலும் சினிமாவும்' -இது தமிழகத்துக்குப் பொருந்தும். ஆனால் கேரளத்தில் இந்த வாசகம் பொருந்தாது. அங்கு சினிமாக்காரர்கள் பெரிதாக அரசியல் பேசுவதில்லை, அரசியலில் நுழைந்தாலும் பெரிய வெற்றி பெறுவதில்லை. ஆனால், சினிமாவில் பேசப்படும் அரசியல், அரசியல் பேசும் சினிமாக்கள் என்னும் தலைப்பை எடுத்தால் தமிழகம், கேரளம் இரண்டிலுமே தொடர்ந்து பல படங்கள் இந்த வகையில் வெளியாகின்றன. ஆனால், பேசப்படும் விதம் என்பது இரண்டு மொழிகளிலும் மாறுபடு கின்றன. அந்தந்த மாநிலங்களின் அரசியல் தன்மை, சூழலுக்கு ஏற்றாற்போல மாறுவது இயற்கைதான்.
தமிழ் திரைப்படங்களில் ஆரம்பத்தில் தேசிய அரசியல், பிறகு திராவிட அரசியல், பொதுவுடைமை அரசியல் என காலம்தோறும் படங்களில் அரசியல் பரிணமித்து வந்தது. தொண்ணூறுகளில் அரசியல் படங்கள் என்றாலே லஞ்ச ஊழலுக்கு எதிரான காட்சிகளை வைத்து நடுத்தர மக்கள் பார்வையிலிருந்து வசனங்களை வைத்து மேலோட்டமான அரசியலைப் பேசும் படங்கள் என்றாகின. சாதி அரசியல் பேசும் படங்கள் அவ்வப் போது வந்தாலும், அவை ஒரு பக்கத்தி லிருந்து எழுதப்பட்டு எடுக்கப்பட்ட படங்களாக பெரும்பாலும் இருந்தன. ஈழ அரசியல் பேசிய பல படங்கள், சரியாகப் பேசாததால் எதிர்ப்பை சம்பாதித்தன. ஆனால், கடந்த பத்தாண்டுகளாக மீண்டும் தமிழ் படங்களில் ஆழமான அரசியல் பேசும் படங்களும் அரசியல் சரித்தன்மையுடன் பேசும் படங்களும் வரத் தொடங்கியுள்ளன. முக்கியமாக ஜனநாதன், ராஜு முருகன், பா.ரஞ்சித், வெற்றிமாறன் போன்றவர்களின் வருகைக்குப் பிறகு இது நடந்துள்ளது. அதே நேரம் அரசியல் சரித்தன்மையை காக்கவேண்டியும் விமர்சனங்களை தவிர்க்கவேண்டியும் தமிழ்த் திரையுலகால் தொடப்படாத சில இடங்கள் உள்ளன. அந்த இடங்களை எளிதாகத் தொட்டுப் பேசி, விளையாடி அதை விவாதமாக்குவது மலையாள சினிமாவின் வழக்கம். அப்படி ஒரு படமாக சமீபத்தில் வெளியாகியிருக்கிறது "நாயாட்டு'.
"வேட்டை' என்று அர்த்தப்படும் "நாயாட்டு' என்ற டைட்டிலுடன் வந்திருக்கும் இந்தப் படத்தில் அரசியல் -அதிகார கூட்டணியால் வேட்டையாடப்படுவது மூன்று போலீஸ்காரர்கள். இந்த கதைக்கருவே நமக்கு முரணாக இருக்கிறதல்லவா? அதிகாரமே அவர்களிடம்தான் இருக்கிறது? அவர்களை யார் வேட்டையாடுவது என்று கேட்கிறோமல்லவா? அவர்களை வேட்டையாடும் அரசியல் எது என்று தெரிந்தால் இந்த முரண் இன்னும் அதிகமாகும். படத்தின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான பெண் போலீசை அவரது உறவினரான இளைஞன் தொல்லை செய்கிறான். இதற்காக கைது செய்யப்படும் அவன், தான் சார்ந்த தலித் அரசியல் இயக்கத்தின் அதிகாரத்தால் உடனே வெளியே வருகிறான். அவனுக்கும் இன்னும் இரண்டு போலீஸ் பாத் திரங்களாக வரும் ஜோஜு ஜார்ஜ், குஞ்சாக்கோ போபன் இருவருக்கும் நடக்கும் பிரச்சினை விபரீதமாக முடிய... பெண் போலீ ஸான நிமிஷா உள்பட மூன்று போலீஸ்காரர்களும் தலைமறைவாகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். படத்தில் தலித் அரசியல் இயக்கங்களின் செயல்பாடு, வாக்கு வங்கி தவறாகப் பயன்படுத்தப்படுவது போன்றவை சார்ந்து அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள், சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம் ஆகியவைதான் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கின்றன. விமர்சனங்கள், விவாதங்கள் எழுந்திருப்பது தமிழ் சமூக ஊடக சூழலில்தான். கேரளத்தில் "இது நடக்காததா? இப்படியும் நடக்கத்தானே செய்கிறது? அதையும் பேசலாம்...' என்று கேஸுவலாக எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர் சேட்டன்கள்.
தலித் அமைப்புகள், ஒடுக்கப்பட்டவர்களுக்காக உருவாகிய கட்சிகள் மெல்ல வளர்ந்து அரசியலில் முன்வரிசைக்கு வரும் இந்த காலகட்டத்தில் இப்படிப்பட்ட படங்கள் உண்டாக்கக்கூடிய விளைவு என்பது கண்டிப்பாக கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்று. அதேநேரம்... "இந்தப் படம் கேரள அரசியல் சூழலுக்கு எழுதப்பட்ட ஒன்று, அதை நமது அரசியல் பார்வையில் பார்த்து விமர்சிக்க வேண்டியதில்லை' என்கின்றனர் சில சினிமா, அரசியல் பார்வையாளர்கள். உண்மைதான், மலையாளத்தில் எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழில் எடுக்கப்பட சாத்தியமில்லாதவை. ஃபகத் ஃபாசில் நடித்த "ட்ரான்ஸ்', கடந்த ஆண்டு வெளியான திரைப்படம். கிறிஸ்தவ மத பிரச்சாரத்தை ஒரு மிகப்பெரிய தொழிலாக, ஏமாற்று வேலையாக ஒரு அமைப்பு செய்வதையும், அதனால் பலர் ஏமாறுவதையும் பாதிக்கப்படுவதையும் மிக விரிவாக, வெளிப்படையாகக் காட்டியிருந்தது "ட்ரான்ஸ்'. இந்தப் படம் வெளிவந்தபோது கேரளத்திலேயே எதிர்ப்புகள், விமர்சனங்கள் வந்தாலும் வெளியீட்டில் தடை, போராட்டம் என்று பெரிதாகவில்லை. கடந்த ஆண்டு வெளியான இன்னொரு மலையாள படமான "பிரியாணி', மத அடிப்படைவாத, தீவிரவாத இயக்கங்களின் மூளைச்சலவைக்கு பலியாகி, தனது குடும்பத்தை விட்டு வெளியேறும் ஒரு இசுலாமிய இளைஞனின் செயலால் அந்தக் குடும்பத்துக்கு ஏற்படும் நிலை, எதிர்கொள்ளும் சவால்கள், முக்கியமாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பேசியிருந்தது. இதுவும் கொஞ்சம் பிசகினாலும் தவறாக எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்புள்ள ஒரு கதைக் கரு. இந்தப் படம் வெகுவாகப் பாராட்டப்பட்டு பல விருதுகளையும் பெற்றது. முக்கிய பாத்திரத்தில் நடித்த பெண்ணான கனி குஸ்ருதி அங்கு கொண்டாடப்படுகிறார்.
மலையாளத்தில் நமது "சர்கார்', "முதல்வன்', "மக்களாட்சி' ஸ்டைல் நாயகத்தன்மை நிறைந்த கமர்ஷியல் அரசியல் படங்களும் வருகின்றன. மோகன்லால் நடித்து மாபெரும் வெற்றியை பெற்ற "லூசிஃபர்' அப்படியொரு படம்தான். தமிழகத்தில் 2016-17-ல் நிலவிய அரசியல் சூழலை பிரதிபலிப்பதுபோல இருந்தது இப்படம். ஒரு பெரிய அரசியல் தலைவர் மறைய அவரது இடத்துக்கு நடக்கும் போட்டி, அரசியல் சதுரங்கம்தான் கதை. விறுவிறுப்பும் சுவாரசியமும் நிறைந் திருந்தது லூசிஃபர். சமீபத்தில் மம்மூட்டி நடித்திருந்த "ஒன்' திரைப்படத்தில் "சரியாகப் பணி யாற்றாத மக் கள் பிரதிநிதி களை திரும்பப்பெறும் சட்டம் கொண்டுவர வேண்டும்' என்பது தான் மையம். அவர் களின் ஃபேவரிட்டான இடதுசாரி நாயகனைக் கொண்ட படங்கள் அவ்வப்போது வருகின் றன. இப்படி மலை யாளத்தில் பலவிதமான அரசியல் படங்கள் வெளியாகின்றன. ஒரே விசயம் கொண்டாடப் படுவதும் கிண்டல் செய்யப்படுவதும் அங்கு சாதாரணமாக நிகழ் கின்றன. அதற்கான வெளி அங்கு இருப்பது நேர்மறையான விஷயம். பேசாப் பொருள்கள் அனைத்தும் பேசப் படவேண்டும் என்பது முக்கியம், அது தவ றாகப் பேசப்பட்டுவிடக் கூடாது என்பதும் மிக முக்கியம்.
-வசந்த்