மதுரை பகுதி முழுக்க, வெவ்வேறு தலைப்புகளில் ஒட்டப்பட்ட நாடார் சமூக அமைப்புகளின் கண்டன போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்... ஒருங்கிணைந்த நாடார் மாஹாஜன சங்கத்தைச் சேர்ந்த பெரிய பெரிய தொழிலதிபர்கள், மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
60 ஆயிரத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தமிழ்நாடு நாடார் மஹாஜன சங்கம், மிகப்பெரிய சமூக அமைப்பாகும். இதில்தான் இப்போது பிரச்சினையாம்.
இந்த அமைப்பு 1910-ல் ராவ்பகதூர் இரத்தின சாமி நாடார் என்பவரால் தோற்றுவிக்கபட்டது. இதன்கீழ் 25-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன. இதன் தொடர்ச்சியாக வந்ததுதான் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி.
இது குறித்து, இதன் நிர்வாகிகளில் ஒருவரான ஆர்.வி.டி.ராமையாவிடம் நாம் கேட்ட போது...”"இந்த நாடார் மஹாஜன சங்கத்திற்கு தமிழகத்தில் 25 -க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. பல ஆயிரம் கோடி சொத்துக்கள் உள்ளன. 1999-ல் அறிவானந்த பாண்டியன் மறைவுக்குப் பிறகு என்.ஆர்.தனபாலன், பெரிஸ் மகேந்திரவேல், ஜோசப் வாசுதேவ ஜவகர், மாயாண்டி, மற்றும் என்னைப் போன்றவர்களால் தற்காலிகத் தலைவராக கரிக்கோல்ராஜ் கொண்டு வரப்பட்டார். அதன்பின் இந்த 22 வருடத்தில் முதல் மூன்று வருடம் சரியாக இருந்த சங்கம், அதன்பின் எத்தனையோ முறை பொதுக்குழு கூடியபோதும், அதில் ஒருமுறை கூட பொதுக் கணக்கை அவர் சமர்ப்பிக்கவே இல்லை. இது குறித்துக் கேட்டால், தனிப்பட்ட முறையில் யாருக்கு சந்தேகமிருக்கோ, அவர்கள் நேரில் வந்து கேட்கலாம். அவர்களுக்கு கணக்கு முழுதையும் காண்பிக் கிறேன் என்று சொல்லி, தட்டிக் கழித்துக் கொண்டே வந்தார். இதுவரை மூன்று கட்டமாக நடந்துவந்த தேர்தலை, ஒரே கட்டமாக 160 பதவிகளுக்கு ஒரே முறையாக தேர்தலை அறிவித்து, அனைத்து உறுப்பினர்களுக்கும் முறையாக சுற்றறிக்கை அனுப் பாமல் தனக்கு வேண்டப்பட்ட வர்களை மட்டும் வைத்து, தேர்தல் நடத்தி, தானே மறுபடியும் மறுபடியும் தலைவராக வருவது போல் செய்துகொண்டிருக் கிறார். பல கோடி ரூபாய் வசூல் வேறு. எதற்கும் ரசீது தரவில்லை. எந்த திட்டத்தையும் ஆரம்பிக்க வில்லை. இதை யாராவது பொதுக்குழுவில் கேட்டால் சங்க விதிகளுக்கு அப்பாற்பட்டு செயல் படுகிறீர்கள் என்று நோட்டீஸ் அனுப்பி, அவர்களை மிரட்டுகிறார். சங்கத்தின் தலைவரும் சங்கத்தைத் தோற்றுவித்த இரத்தனசாமி நாடாரின் வாரிசுமான முத்து சாமியின் மைக்கை பிடுங்கி அவரைக் கரிக்கோல்ராஜ், கூட்டத்திலிருந்தே வெளியேற்றினார்'' என்றார்.
நாடார் மஹாஜன சங்கத்தின் தலைவர் முத்துசாமியோ, "எங்களது கோரிக்கை எல்லாம், தேர்தலை தனி அதிகாரியை கொண்டு நேர்மையாக நடத்தவேண்டும் என்பதுதான். கடந்த 20 வருடமாக ஒழுங்காக வரவு செலவுகளை தணிக்கைக்கு அனுப்பவில்லை. இதையெல்லாம் வெளியிடவேண்டும். உப்பு தின்ன வன் தண்ணீர் குடித்தே ஆகவேண் டும்'' என்றார் அழுத்தமாக.
இதற்கெல்லாம் பதில் கேட்க, நாடார் மஹாஜன சங்கப் பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜைத் தொடர்புகொண்டோம். அவரோ, "இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணம் கண்ணன் ஆதித்தனார் தான். சங்கத்தில் பிளவு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அனைவரையும் எனக்கு எதிராகத் திருப்பி, அவரின் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் 700 கோடிக்கான கணக்கைக் கேட்டதைத் திசை திருப்பப் பார்க்கிறார். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மற்றபடி தேர்தலை முறையாக நடத்திக் கொண்டுதான் இருகிறோம். தனி அதிகாரியிடம் சங்கத்தை ஒப்படைத்தால், கல்வி நிறுவனங்கள் அனைத்துமே அவர்கள் கைக்குப் போய் விடும். இது தெரியாமல் அவர்கள் பேசிக்கொண்டிருக் கிறார்கள்''’என்றார் கூலாக.
கரிக்கோல்ராஜுவின் பேச்சுக்கு பதில் சொல்லும் விதமாக கண்ணன் ஆதித்தனே முன்வந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், "இந்தப் பிரச்சினையை கரிக்கோல்ராஜ் தேவை யில்லாமல் என் பக்கம் திசை திருப்புகிறார். நாடார் மஹா ஜன சங்கத்திற்கும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிக்கும் சம்பந்தமில்லை.
ஒருகட்டத்தில் பங்கு விற்பனைகளில் 32% மட்டும் நாடார் சமுதாயத்திடம் இருந்த நிலையில்... இதை மீட்டெடுக்க எனது தந்தையார் இராமச்சந்திர ஆதித்தனார், நாடார்களிடமிருந்து பணம் பெற்று, வங்கியை எங்கள் சமூதாயத்தினரிடையே ஒப்படைக்கவேண்டும் என்று முனைந்தார். 96,000 பங்குகள், பணம் கொடுத்தவர்கள் பெயரில் மாற்றப்பட்டது. இதில் என் தந்தை பா.இராமசந்திர ஆதித்தனார் வாங்கிய பங்குகள் 10,800 மட்டுமே. இந்த பரிவர்த்தனை அவருக்கும் ஸ்டெர்லிங் சிவசங்கரனுக்கும் ஏற்பட்ட ஒன்று. இதில் மூன்றாவது மனிதனான கரிக்கோல் ராஜுவுக்கு எந்தவித தொடர்பும் இல்லை. இந்தப் பரிவர்த்தனைக்கும் நாடார் மஹாஜன சங்கத்திற்கும் தொடர்பு கிடையாது. தற்போது டி.எம்.பி. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கையில் இருக்க முக்கிய காரணம், இந்த கரிகோல்ராஜ்தான். இவர் போட்டுள்ள இந்த வழக்கால்தான் 4,600 பங்குகளுக்குப் பணம் செலுத்திய நாடார்களுக்கு அவற்றைக் கொடுக்க முடியவில்லை. நான் தூண்டுவதாகச் சொல்லி, தான் செய்யும் தவறுகளில் இருந்து தப்பிக்கப் பார்க்கிறார்'' என்று தெரிவித்திருக்கிறார்.
இரு பக்கமும் சாராத உறுப்பினரும் வழக்கறிஞருமான ஓம் சேர்ம பிரபு நம்மிடம், "புதிய இளைஞர்கள் கையில் சங்கத்தைத் தேர்தல் மூலம் ஒப்படைத்து, இவர்கள் ஊழல் செய்த பல்லாயிரம் கோடி சொத்துக்களையும் மீட்டு எடுத்து, அதை மக்களுக்குச் சென்றடையும்படி செய்தால்.. என்ன நோக்கத்திற்காக சமுதாய முன்னோர்கள் சங்கத்தைத் தொடங்கினார்களோ... அது உரிய வகையில் சென்றடையும்'' என்கிறார்.
நாடார் மஹாஜன சங்கத்தின் சிக்கல்கள் தீருமா?