அமெரிக்கா கண்டத்தின் ஒருபகுதியாக அட்லாண்டிக் பெருங் கடலில் சிதறியிருக்கும் தீவுகளே மேற்கிந்திய தீவுகள் எனப்படும் கரீபியன் தீவுத் தொடர். இதில் உள்ள ஒரு நாடு ஹைதி. கரீபியன் தீவில் க்யூபா, டொமினிக் குடியரசுக்கு அடுத்து மூன்றாவது பெரிய நாடு ஹைதி. 27750 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்தநாட்டுக்கு ஆண்டுக்கு 13 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகையின் மூலம் 200 மில்லியன் அமெரிக்கா டாலர்கள் வருவாய் பெருகிறது. தொடக்கத்தில் பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தது, பிரான்ஸ் சுதந்திரம் வழங்கியபின் மன்னராட்சி நடந்தது.
பின்னர், அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஹைதி தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அதிபரை கொண்ட குடியரசு நாடு. இதன் மக்கள் தொகை சுமார் 1 கோடியே 10 லட்சம் சொச்சம். ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்க கண்டத்திற்கு அடிமைகளாகக் கொண்டு வரப்பட்டிருந்த கறுப்பின மக்களின் முதல் குடியரசு நாடு ஹைதி.
கடந்த 25 ஆண்டுகளில் புயல்மழை, பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவால் லட்ச கணக்கில் மக்கள் இறந்து போயுள்ளனர். 2010 ஜனவரியில் ஏற்பட்ட பூகம்பத்தில் 2.5 லட்சம் மக்கள் இறந்தனர், பல லட்சம் மக்கள் வீடுகளற்றவர்களாகினர். 2017-ல் புயல்மழையால் 10 ஆயிரம் மக்கள் இறந்தனர். அதற்கு அடுத்ததாக ஏற்பட்ட காலராவால் 4 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். அடிக்கடி பெரும் புயல்கள் இந்த தீவை தாக்கிக்கொண்டே இருக்கும். பெரியளவில் உயிரிழப்பு ஏற்படும்போதெல்லாம் உலகமே கவலைப்பட்டு நிவாரணமாக ஆயிரக்கணக்கான கோடிகள் பணம், மருந்து பொருட்கள் வழங்குகின்றன. அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் அதிகளவு நிதியுதவி வழங்குகின்றன. ஹைதியின் அதிபராக இருப்பவர்கள் இழப்புகளின்போது கடமைக்கு வருத்தம் தெரிவித்துவிட்டு நிதிகளை கொள்ளை யடிப்பது எப்படி என்பதிலேயே கவனமாக இருக்கின்றனர்.
ஆட்சியாளர்களின் கொள்ளை, அந்நாட்டு மக்களை பெரும் கோபத்துக்கு ஆளாக்கியது, இதனால் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன எதிர்க் கட்சிகள். வறுமை தாண்டவ மாடும் இந்த நாட்டின் அதிபராக இருந்த அதிபர் மார்டெல்லி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்த தால் 2015-ல் ராஜினாமா செய்தார், இதனால் 2015-ல் அதிபருக்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதில் டெட் கேல் கட்சித் தலைவர் ஜோவ்னால் மொய்சே வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. வரலாறு காணாத அளவில் மோசடிகள் நடைபெற்றதாக கூறி போராட்டம் நடத்தினார்கள். அதனால் அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டு 2016 இறுதியில் மீண்டும் அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் 26 சதவித மக்களே வாக்களித்தனர். அதில் பெரும் பான்மை வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜோவ்னல் மொய்சே வெற்றிபெற்று அதிபரானார்.
நாட்டில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணய் விலை அதிகமாகிவிட்டன, அதற்கு காரணம் கச்சா எண்ணெய் இறக்குமதியில் பெரியளவில் ஊழல்கள் நடந்துள்ளன. இந்த ஊழலில் அதிபருக்கும் தொடர்பு என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஹைதிக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்ததற்கான தொகை வரவில்லையென 2018-ல் வெனிசுலா ஏற்றுமதியை நிறுத்திவிட்டது. பற்றாக்குறை ஏற்பட்டதால் பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டது. பொதுமக்கள் எரிபொருளை பயன்படுத்தாமல் இருக்க அதன் மீதான வரிகளை உயர்த்தியதால் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் மக்கள் சமூகவலைத்தளங்களில் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் சாலைகளில் வந்து போராடினர். காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப் பட்டனர். இதனால் போராட்டம் இன்னும் வீரியமடைந்தது, இதில் எதிர்க்கட்சிகளும் கலந்துகொண்டன.
2018 ஜூலை 7-ஆம் தேதி மக்கள் போராட்டம் ஹைதி தலைநகரில் தொடங்கியது, நாடு முழுவதும் போராட்டம் பரவியது. ஆட்சிக்கு எதிராக ரேடியோ வாயிலாக போராட்டத்தை தூண்டுகிறார்கள் எனக் குற்றம்சாட்டப் பட்ட ஹைதியின் பிரபல பத்திரிகை யாளர்கள் ரோஸ் பைட், நெகிம்மீ ஜோசப் என அடுத் தடுத்து காரில் பயணமாகும்போது அடையாளம் தெரி யாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 2019 நவம்பர் மாதம் தேசம் முடக்கம் என்கிற பெயரில். (அதிபரே பதவி விலகு) என எதிர்ப்புக் குரல்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் 187 போராட்டக்காரர்கள், 44 காவல்துறையினர், 2 பத்திரிகையாளர்கள் என கொல்லப்பட்டும் போராட்டம் நிற்கவில்லை.
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை, பாதுகாப்பு சபையை சேர்ந்தவர்கள் ஹைதிக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினர். போராட்டம் முடிவுக்கு வரவில்லை, கொரோனா பரவல்கூட போராட்டத்தை நிறுத்தவில்லை. இந்த போராட்டத்துக்கு தலைமை வகித்தவர் எதிர்க்கட்சியை சேர்ந்த ஜீன் சார்லஸ் மோயிஸ். மேயராக, செனட்டராக இருந்தவர். 2016-ல் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தவர்.
2019-ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடை பெற்றிருக்க வேண்டும். ஆனால் நாட்டில் அமைதியற்ற நிலையால் தேர்தலை நடத்தாமல் ஒத்தி வைத்தார். கொரோனா உருவானதால் தேர்தலை நடத்தாமல் இன்னும் ஓராண்டுக்கு பதவி நீட்டிப்பை அவராகவே செய்து கொண்டார் ஜோவ்னல் மொய்சே. இதனால் கடந்த 2021 பிப்ரவரி மாதத்தில் போராட்டங்கள் இன்னும் தீவிரமாகின. 2018 ஜூலை 7-ஆம் தேதி தொடங்கிய போராட்டம் சரியாக மூன்றாண்டுகள் முடிந்து 2021 ஜூலை 7-ஆம் தேதி இரவு அதிபர் ஜோவ்னல் மொய்சே அவரது வீட்டின் படுக்கையறையில் 12 குண்டுகள் பாய்ந்து படுகொலை செய்யப்பட்டார். அருகில் அவரது காதல் மனைவி குண்டடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
"இது திட்டமிட்ட படுகொலை'' என்கிறார் ஹைத் அரசின் இடைக்காலப் பிரதமர் க்ளவுட் ஜோசப். அதிபர் கொலை செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே நாட்டின் எல்லைகள் சீல் வைக்கப்பட்டது. விமானங்கள் பறக்க தடை விதிக் கப்பட்டது. நாடு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தியதில் தலைநகரில் ஆயுதம் தாங்கிய ஒருக்குழுவோடு நடந்த துப்பாக்கி சண்டையில் 4 பேர் கொல்லப்பட்டனர். இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் தந்த தகவலின் அடிப்படையில் 17 பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளது போலீஸ். அதில் 15 பேர் கொலம்பியாவை சேர்ந்தவர்கள், அதில் 6 பேர் கொலம்பியா இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். அதோடு அமெரிக்காவை சேர்ந்த ஜேம்ஸ், ஜோசப் வின்சென்ட் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து நவீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதிபர் கொலையில் 28 பேர் கொண்ட டீம் ஈடு பட்டுள்ளது. அதில் 26 பேர் கொலம்பியர்கள் என தெரியவந்துள்ளது.
கொலைக்கான காரணத்தை கண்டறிய தீவிரம் காட்டிவருகிறது ஹைதி காவல்துறை. பனானா மேன் என ஹைதியில் அழைக்கப்படும் அளவுக்கு பிரபலான வாழைப்பழம் ஏற்றுமதி வியாபாரியாக இருந்தவர் கொல்லப்பட்ட அதிபர். வாழைப்பழத்தோடு ஹவாலா பணப் பரிமாற்றம் செய்யும் இல்லீகல் தொழில் செய்கிறார் என்கிற குற்றச்சாட்டு, அதிபராக பதவியேற்ற சில மாதங்களிலேயே அதாவது 2017-ல் அவர்மீதும் அவரது மனைவிமீதும் வைக்கப்பட்டது. அதோடு கஞ்சா, அபின் கடத்தல் கும்பலோடு தொடர்புள் ளது எனவும் குற்றம்சாட்டப்பட்டது. விலைவாசி உயர்வு நடந்துகொண்டேயிருந்தது. விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை யென கடந்த 5 ஆண்டுகளில் 7 பிரதமர் களை மாற்றியுள்ளார். இறுதியாக புதிய பிரதமராக ஏரியல் ஹென்ரியை நியமிக்க முடிவு செய்திருந்தார்.
அதிபரை சுற்றி 30-க்கும் அதிகமான பாதுகாப்பு வீரர்கள் இருப்பர். 12 வாகனங்களில் பாதுகாப்பு வீரர்கள் பயணம் செய்வர். அவரது வீட்டுக்கும் பாதுகாப்பு உண்டு. அப்படியிருக்க பாதுகாப்பு படையினரை மீறி உள்ளே சென்று கூலிப்படையினர் எப்படி சுட்டுக்கொன்றார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது. "பாதுகாப்பு வீரர்களை பணயக் கைதிகளாக பிடித்துக்கொண்டதோடு, சுட்டுக் கொன்ற பின் அவர்களையும் கடத்தி சென்றுவிட் டார்கள். கொலைகாரர்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியே பாதுகாப்புப் படையினரை மீட்டோம்'' என்கிறது ஹைதி காவல்துறை. இது உலகளவில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிபரின் படுகொலைக்கு காரணம் ஆட்சியா? அரசியலா? மாபியா கும்பலா? வெளிநாட்டு சதியா? என பல கோணங்களில் ஹைதி விசாரணை நடத்திவருகிறது.