தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கோ, அந்தக் கட்சியின் மதுரை பாலிடிக்ஸே ஒரு டிசைனாத்தான் இருக்கும். இப்ப ஆளும் கட்சி அ.தி.மு.க. என்பதால், இரண்டு அமைச்சர்கள், ஒரு மா.செ. ஆகிய மூவரின் சடுகுடு ஆட்டமும் மல்லுக்கட்டும் நாளுக்கு நாள் பிரசித்தம் ஆகிவருகிறது.

Advertisment

மதுரை அ.தி.மு.க.வைப் பொறுத்த வரை மாநகர மா.செ.வாக அமைச்சர் செல்லூர் ராஜுவும் புறநகர மா.செ.வாக எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பாவும் இருக்கிறார்கள். ஜெ. இருக்கும் போதே இருவருக்கும் எப்போதுமே ஒத்துவராது. புறநகருக்குட்பட்ட திருமங்கலம் தொகுதியில் வெற்றி பெற்று வருவாய்த்துறை அமைச்சரானவர் ஆர்.பி.உதயகுமார். இவரும் ஜெ. இருக்கும் வரை தான் உண்டு, தனது வருமானம் உண்டு என இருந்தவர்தான்.

ஜெ.மறைவுக்குப் பின் எல்லாமே தலைகீழானது. உதயகுமாரும் புதிதாக உதயமாக ஆரம்பித்தார். தனது தொகுதிக்குள் மட்டுமல்ல, மதுரை நகரம் முழுவதுமே இளைஞர்களை வைத்து அடிக்கடி சைக்கிள் பேரணி, விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, செல்லூராருக்கு போக்கு காட்டினார். செல்லூரார் எரிச்சலாவதை இன்பமாக ரசித்த ராஜன்செல்லப்பாவை கரன்சியால் வளைத்தார்.

madurai-admk

Advertisment

கரன்சி வாசனையில் ராஜன் செல்லப்பா கிறுகிறுத்துப் போய் கிடந்ததால், புறநகருக்குள் செல்லப்பாவிடம் சொல்லாமலேயே கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த ஆரம்பித்தார். ரைட்டு, பார்ட்டி டோட்டல் அவுட் என்ற மூடுக்கு வந்த உதயகுமார், கடந்த வாரம் பண்ணிய காரியம் தான் செல்லப்பாவுக்கு ஹைவோல்டேஜ் அதிர்ச்சி அளித்தது.

எம்.எல்.ஏ.க்கள் சரவணன், பெரியபுள்ளான், மாணிக்கம் (இவர்கள் மூவருமே ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்) ஆகியோரையும் மாநகர், புறநகர் நிர்வாகிகள் பலரையும் அழைத்துக் கொண்டு, கோட்டையில் கஜா புயல் நிவாரண நிதியாக, 67 லட்சத்தை எடப்பாடியிடம் வழங்கினார். மாநகர் சார்பில் 50 லட்சமும் புறநகர் சார்பில் 17 லட்சமும் முதல்வரிடம் நிதி வழங்கப்பட்டதாக, போட்டோவுடன் அரசு செய்திக் குறிப்பு வெளியானது.

செய்திக் குறிப்பால் கொதிப்பில் இருந்த ராஜன்செல்லப்பாவிடம் பேசிய போது, ""மா.செ. என்கிற முறையில் என்னிடம் கேட்டிருக்கணும், அது தான் முறை. இதுக்கு மேல சொல்றதுக்கு ஒண்ணுமில்லை'' என்றார் விரக்தியாக.

அமைச்சர் உதயகுமாரை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது, ""ராஜன்செல்லப்பா தனியாகப் போய் நிதி கொடுத்தார். நான் நிர்வாகிகளுடன் போனேன், அவ்வளவு தான். இதுல எந்த பாலிடிக்சும் இல்லையே'' என்றார் தெளிவாக.

மூன்று தரப்பையும் சாராத ர.ர.க்களோ, “""தினகரனின் ஸ்லீப்பர் செல் தான் செல்லப்பா. கட்சித் தலைமைக்கு சசிகலாதான் தகுதியானவர்னு அடிக்கடி சொல்வார் செல்லூரார். இந்த ரெண்டு பேருக்கும் செக் வைக்கத்தான் இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் கேம் ஆடுகிறார்கள்'' என்கின்றனர். ஓ.பி.எஸ். முதல்வராக இருந்தபோது, சசிகலாவை முதல்வராக்க முதல் குரல் கொடுத்தவர் உதயகுமார். எல்லாமே அரசியல்தான்.

-அண்ணல்