Advertisment

மங்காத்தா பட ஸ்டைலில் மதுரை மாஜியின் 200 சி கொள்ளை!

புதுப்பிக்கப்பட்டது
sellurraju-t

sellur raj

"மங்காத்தா' சினிமா பாணியில் மதுரையில் மூன்று வக்கீல்கள், இரண்டு அரசியல்வாதிகள், ஒரு ரவுடி டீம் ஆகியோர் போட்ட பக்கா ஸ்கெட்சில்  அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரின் 200 கோடி கறுப்புப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment


செல்லூர் ராஜு சில இடங்களை விற்று கையில் இருப்புப் பணமாக  வைத்திருந்த 200 கோடியை, மதுரை விளாங்குடி அருகிலுள்ள ஐந்து மாடி அபார்ட்மெண்டின் ஐந்தாவது தளத்திலுள்ள வீட்டில் பதுக்கி வைத்திருந்தாராம். 

Advertisment


இதன் சாவியை அவ்வப்போது தனது மருமகன் ஜெய்கணேஷிடம் கொடுத்து பார்த்துவரச் செய்திருக்கிறார். இந்நிலையில் தான் ஜூன் 22 அன்று மொத்த பணமும் கொள்ளைபோயிருக்கிறது. 


இந்து முன்னணி நடத்திய முருக பக்த மாநாட்டில் இருக்கும்போது மருமகன்  இந்தத் தகவலை செல்லூர் ராஜுவிடம் போன் போட்டுச் சொல்ல, பதறிப்போய் அங்கிருந்து வேகமாக சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று பார்வையிட்டுவிட்டு சென்னையிலுள்ள தி.மு.க. அமைச்சரொருவருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். "எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள். என் கையிலிருந்த  மொத்த பணமும் அதுதான். வெளியில் தெரியாமல் பணத்தைப் பறிமுதல் செய்யவேண்டும்'' என்று சொல்ல அவர் தலைமைக்கு தகவல் சொல்லியிருக்கிறார். 


அடுத்த நொடி மதுரை சிட்டி காவல்துறை கமிஷனருக்கு தகவல் பறக்க, மதுரை கமிஷனர் அலுவலகத்தில் செல்லூர் ராஜுவின் வழக்கறிஞர் டீம், செல்லூர் ராஜு சார்பில் நடந்த சம்பவம் தொடர்பாக 2.5 கோடி பணத்தைக் கண்டுபிடித்துத் தருமாறு புகார் கொடுத்திருக்கிறது. அந்த புகாரின் பேரில் போலீஸார் களத்திலிறங்கினர்.


அன்றைய தினமே பா.ஜ.க.வின் முக்கிய புள்ளியான மதுரையைச் சேர்ந்த பா.ஜ.க. ஆதரவாளரான ரவிக்குமார் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளி யிட்டிருந்தார். அதில், "மதுரை மாநகர் பா.ஜ.க. வழக்கறிஞர்களில் சிலர் கட்டப்பஞ்சாயத்துகள் செய்வதும் சட்டத்துக்குப் புறம்பான செயல்களைச் செய்வதும் வாடிக்கையாக உள்ளது. இதை சில பா.ஜ.க. தலைவர்கள் ஆதரிக்கிறார்கள். மதுரையின் முக்கிய அரசியல் புள்ளி ஒருவரின் பல கோடி பணத்தை ரவுடிகளை வைத்து பறித்துச்சென்றுள்ளனர் இவர்கள். இதனால் பா.ஜ.க.வுக்கும் ஆர்.எஸ். எஸ்.ஸுக்கும் தான் கெட்ட பெயர்' என்று கூறியிருந்தார். 


இந்த பதிவு அ.தி.மு.க., பா.ஜ.க.வில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்த, காவல்துறை பா.ஜ.க. பிரமுகர் ரவிக்குமாரிட மிருந்தே விசாரணையை ஆரம்பித்தது. ஒவ்வொரு நிகழ்வும் அஜித்தின் மங்காத்தா படத்தை மிஞ்சுமளவுக்கு பல்வேறு டிவிஸ்ட்களோடு இருக்க, என்ன நடந்தது என்று நாம் விசாரணையில் இறங்கினோம்..

sellurraju1

சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விசா ரணையை முடுக்கிவிட்டதில், ஆர்.எஸ்.எஸ் வழக்கறிஞராக தன்னை சொல்லிக்கொள்ளும் கேரளாவின் பிரபல சாமி பெயரை வைத் திருக்கும் வழக்கறிஞர் ஒருவரும், தமிழ்க்    கடவுள் பெயரை தாங்கிய ஒருவருமாக இருவரின் மாஸ்டர் ஸ்கெட்ச்தான் இந்த ஸ்கேம் என்பது தெரியவந்திருக்கிறது. அந்த வழக்கறிஞரின் ஜூனியர்களைப் பிடித்து விசாரிக்க, அவர்கள் கையைக் காட்டியது பிரகாஷ் என்ற புது ரவுடியை. அவர் சமீபத்தில்தான் வாடிப்பட்டியில் ஒரு ரவுடியை ஓட ஓட வெட்டிய கொலைவழக்கில் கைதாகி ஜாமீனில் வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவரைப் பிடித்து விசாரித்ததில் மேலும் இருவர் கைதாக, அவர்களிடமிருந்து 40 லட்சம்வரை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.


இந்த நபர்களிடம் நடந்த டீப்பான விசாரணையில் புது டுவிஸ்டாக இந்த 200 கோடி கொள்ளை ஸ்கேமிற்கு சூத்ரதாரியாக இருந்தது அமைச்சரின் மருமகன் ஜெய் கணேஷ்தான் என்று போலீஸ் வட்டாரத்துக்குத் தெரியவந்திருக்கிறது. 


வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கும் செல்லூர்ராஜுவின் மருமகன் ஜெய்கணேஷ் சில மனக்கசப்பில் இருந்துவந்துள்ளார். செல்லூர் ராஜு செல்லூரிலுள்ள வீட்டில் இருப்பதைவிட மதுரை துவரிமானிலுள்ள பண்ணை வீட்டில்தான் அதிக நேரம் செலவிடுகிறார். கடந்த மாதம்தான் விளாங்குடியிலுள்ள 5 மாடி அபார்ட்மெண்டில் ஐந்தாவது மாடியிலுள்ள வீட்டில் பணத்தைப்  பதுக்கிவைத்துள்ளார். அப்போது தனது மருமகனையும் அழைத்துச்சென்றுள்ளார். 


இந்நிலையில் மருமகன் ஜெய்கணேஷ் வீட்டில் தனக்கு நடந்த சில அவமானங்களை மனதில்வைத்து, நம்மிடம் கையில் பணமிருந்தால்தான் கவுரவமாக இருக்க   முடியும். இந்தப் பணத்தை எடுத்தால் செல்லூராரால் ஒன்றும் செய்யமுடியாது. கறுப்புப்பணம் என்பதால் திருடனுக்கு தேள்கொட்டியது போன்ற கதையாக வெளியில் சொல்லமுடியாது என்று திட்டமிட்டிருக்கிறார். தனது நண்பரும் செல்லூர் ராஜுவிடம் 10 வருடங்களுக்கு முன் கூடவே இருந்த வழக்கறிஞரிடம் விசயத்தை கசியவிட, அவர் அந்த பா.ஜ.க. வழக்கறிஞர் பிரமுகரிடம் விசயத்தை பாஸ் செய்ய... மூவரும் சேர்ந்து பக்கா ஸ்கேமுக்கு தயாராகினர். 


அதற்கு சரியான நேரத்திற்கு காத்திருக்க, வந்தது முருக பக்த மாநாடு. சிட்டிக்குள் இருக்கும் அனைத்து காவல்துறையின் கவனமும் மாநாட்டில் குவிந்திருக்க, செல்லூராரும் அங்கு சென்றார். இதுதான் சரியான நேரமென்று முடிவெடுத்து யாருக்கும் சந்தேகம் வராதபடி சில ஜூனியர்களும், பிரகாசமான ரவுடியின் ஆட்களும் கதவை உடைக்காமல் சாவி போட்டுத் திறந்து பணத்தை கொண்டுசென்றிருக்கிறார்கள். பணம் கொள்ளைபோனதை, செக்யூரிட்டி ஜெய் கணேஷுக்கு தகவல் கொடுக்க, தனது மாமாவிடம் உடனே சொல்லாமல் இருந்தால் விசாரணையில் ஏன் உடனே சொல்லவில்லை என்று கேள்வி வருமென்று செல்லூராரிடம் தகவலைச் சொன்னார். 


அடுத்த நாள் சென்னையில் எடப்பாடி தலைமையில் நடந்த மாவட்டச் செயலா     ளர்கள், பொறுப்பாளர்கள் கூட்டத்தில்         இருந்த ராஜுவுக்கு, "சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைப் பிடித்தாகிவிட்டது. சிறிய அளவில் பணமும் ரெக்கவரி ஆகிவிட்டது' என்றதும், பதறியடித்துக்கொண்டு பாதியிலேயே வெளியேறிய செல்லூர் ராஜு நேராக வந்து மதுரை கமிஷனர் லோகநாதனைப் பார்த்திருக்கிறார். "கவலைப்படாதீர்கள், கொள்ளையர்கள் தப்பித்துப் போகாதபடி பாஸ்போர்ட், விசா முடக்கப்பட்டிருக்கிறது. தேடுதலை தீவிரப்படுத்தியுள்ளோம்' என்றிருக்கிறார். விசாரித்தவரையில் கொள்ளை சம்பந்தமாக எஃப்.ஐ.ஆர். ஆகியிருக்கிறது என்றே சொல்லப் படுகிறது.


செல்லூர் ராஜுவிடம், தி.மு.க. சில டீலிங்குகள் மேற்கொள்வதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஸ்கேமில் வேறு யார், யார் ஈடுபட்டிருக்கிறர்கள்? யார் அவர்களுக்கு மறைமுக உதவிகள் செய்தது என்று விசாரணை நடக்கிறது. அந்த அபார்ட்மெண்டிலுள்ள சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் கடந்த 10 நாட்களாக அங்கு யார் யாரெல்லாம் சென்றார்கள் என்ற விவரமும் எடுக்கப் பட்டிருக்கிறதாம். 


இந்த கொள்ளை சம்பவத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்புண்டு என ரவிக்குமார் கூறியுள்ளதால். மாநில தலைவர் நயினார் மூலம் தேசிய தலைமையின் கவனத்திற்கும் சென்றுள்ளது என்கின்றனர்.


இது எல்லாமே மக்களிடமிருந்தும், அரசை ஏமாற்றியும் கொள்ளையடித்த பணம். இத்தனைக்குப் பின் ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை அவரது மூன்று வீடுகளிலும் சோதனை போட வருவார்களா? சம்பந்தப்பட்ட பா.ஜ.க. வழக்கறிஞர்களை காவல்துறை கைதுசெய்யுமா? இல்லை வேறு ஏதாவது அன்டர்கிரவுண்ட் டீலிங் நடந்து மொத்த விவகாரமும் பொதுமக்கள் பார்வையிலிருந்தே மறைக் கப்பட்டு, மறக்கடிக்கப்படுமா என்று மதுரை மக்கள் விவாதத்தில் இறங்கியுள்ளனர். 

_____________________
இறுதிச்சுற்று!

பாடம் புகட்டுங்கள்! -முதல்வர் வேண்டுகோள்!

finalround

வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு அரசுமுறை பயணமாக ஜூன் 25ஆம் தேதி வேலூர் வந்த முதல்வர் ஸ்டாலின், வேலூர் மாநகரத்தில் 197 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையான பென்ட்லேண்ட் மருத்துவமனையைத் திறந்துவைத்தார். மாலை அணைக்கட்டில் கலைஞர் அறிவாலயம், கலைஞர் சிலையைத் திறந்துவைத்தார். அரசு நலத் திட்டங்களால் பயன்பெற்ற பயனானிகளைச் சந்தித்தார். திருப்பத்தூர் மாவட்டத்துக்கு பயணம் செய்தவர் வழியில் ஆம்பூர், வாணியம்பாடி நகரத்தில் நடைபயணம் செய்து மக்களைச் சந்தித்து குறைகள் கேட்டார். இரவு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையை திறந்துவைத்தார். 


ஜூன் 26-ஆம் தேதி காலை திருப்பத்தூர் மாவட்டத்தில் 517 கோடி மதிப்பில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புறப்படும் முன்பு பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு, மா.செ தேவராஜ் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகளிடம் மாவட்டத்துக்கு என்ன தேவை, மக்களின் எதிர்பார்ப்பு என்ன எனக் கேட்டறிந்தார். மேடையில் பேசுகையில், “"முருகன் மாநாடு என்கிற பெயரில் பெரியார், அண்ணாவை கொச்சைப் படுத்தி வீடியோ வெளியிடுகிறார்கள் அண்ணா பெயரில் கட்சி நடத்துபவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை, அண்ணாவை அடமானம் வைத்துவிட்டார்கள். அவர் களுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டவேண்டும்''’என்றார்.


-து. ராஜா

"ஸ்டாலின் போல் அன்புமணி''-ராமதாஸ்

finalround1

பா.ம.க.வில் நடந்துகொண்டிருக்கும் அதிகார யுத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், வியாழக்கிழமை (26/06/2025) தைலாபுரம் தோட்டத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ், "பா.ம.க.வில் என்னால் நியமிக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புதான்  நிரந்தரமானது. அன்புமணியுடனான பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர பேசுகிறோம்; பேசிக்கொண்டேயிருக்கிறோம். அவர் (அன்புமணி)  மன்னிப்பு கேட்பது இங்குப் பிரச் சினை இல்லை. நான் தொடங்கிய கட்சியில்  நான் சொல்கிறபடிதான் அன்புமணி செயல்பட வேண்டும். அது இல்லைங்கிறபோதுதான் பிரச்சினை. எல்லாத்துக்கும் ஒரு முடிவு உண்டு. இந்தப் பிரச் சினைக்கு இன்னமும் முடிவு வரவில்லை.  என் மூச்சு இருக்கும் வரை பா.ம.க.விற்கு நான்தான் தலைவர். தி.மு.க.வில் கலைஞர் போல, பா.ம.க.விற்கு கடைசிவரை நான்தான் தலைவர். ஸ்டாலினைப் போல, அன்புமணி செயல்தலைவர் மட்டும்தான்.  இதில் எந்த மாற்றமும் இல்லை. 5 பேர் பிடியில் அன்புமணி சிக்கியிருப்பதாக அருள் கூறும் புகாருக்கு இப்போது பதில் இல்லை. எனது 60-ஆவது திருமணநாள் விழாவிற்கு அன்புமணி வராதது எனக்கு வருத்தம்தான். தேர்தல் நெருக்கத்தில் பா.ம.க. பொதுக்குழு கூடும்'' என்றார் டாக்டர் ராமதாஸ். 


-இளையர்

nkn280625
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe