மதுரை தி.மு.க.வில் ஏகப்பட்ட கலாட்டாக்கள் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இது குறித்து தி.மு,க. மாவட்ட நிர்வாகி ஒருவரிடமே நாம் கேட்டபோது...
"உண்மைதான். மதுரை மாநகராட்சித் தேர்தலில் கட்சிக்காரர்களுக்கு சீட்டு கொடுப்பதில் ஏகத்துக்கும் பணம் விளையாடியது. இந்தப் பிரச் சினை ஓய்வதற்குள், மேயரைத் தேர்ந்தெடுப்பதில் நகர் மாவட்டச் செயலாளர்களைக் கேட்காமல் தலைமை முடிவெடுக்கிறது என்று கூறி, மேயர் பதவி ஏற்புவிழாவை மா.செ.க்கள் புறக்கணித்து விட்டார்கள். அதற்கு அடுத்ததாக இப்போது, மாநகராட்சி மண்டலத் தலைவர்களைத் தேர்வு செய்யும் விவகாரத்தில், அமைச்சர்கள் மற்றும் மா.செ.க்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் சச்சரவு ஏற்பட்டு, அந்தக் கூட்டம் பாதியிலேயே முடிந்துவிட்டது. இதுதான் இப்ப மதுரை தி.மு.க.வில் நடந்துக்கிட்டு இருக்கு. அதனால் சபரீசன், உதயநிதி ஆகியோர் அடங்கிய டீம், மதுரை தி.மு.க.வை கெய்ட் பண்ணப் போறாங் களாம்'' என்றார் வருத்தத்திலும் தெம்பாக.
என்னதான் நடக்கிறது மதுரை தி.மு.க.வில்? என விரிவான விசாரணை யில் இறங்கினோம்.
புறநகர் மாவட்டச் செயலாள ரும் அமைச்சருமான மூர்த்தி, "தனது தொகுதியில் கணிசமாக உள்ள கோனார் சமூதாயத்தை திருப்திப்படுத்தும் விதமாக, தன் ஆதரவாளரான வாசுகி சசிகுமாரை மேயராக்க முயற்சி செய்தார். அதேபோல் நகர் மாவட்ட பொறுப்பாளரும் கட்சியின் சீனியரு மான பொன் முத்து, தன் மருமகளை எப்படியாவது மேயர் ஆக்கியே தீரவேண்டும் என்று தீவிரமாகக் களமிறங்கினார். இவர்களுக்கிடையில் நகர் மாவட்ட செயலாளர் தளபதியோ, தனது சகோதரியை மேயராக்கிப் பார்க்கவேண்டும் என்று இன்னொரு பக்கம் வரிந்துகட்டினார்.
அதேவேளையில் தி.மு.க.வில் அதிக ஓட்டு வாங்கி வெற்றிபெற்ற, பாரம்பரிய தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் அணி ஜெயராமனுக்குத்தான் துணைமேயர் பதவி கிடைக்கும் என்று எல்லோரும் காத்திருக்க… எல்லோர் கணிப்பையும் பொய்யாக்கிவிட்டு, பி.டி.ஆர் பழனிவேல் தியாக ராஜன் கைகாட்டும் நபருக்கே தி.மு.க.வில் மேயர் சீட் கொடுக்க வேண்டும் என்றும், துணைமேயர் பதவியை கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கவேண்டும் என்றும் அறிவாலயம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அமைச்சர் தியாகராஜனின் ஆதரவாளரான இந்திராணி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனால் கட்சிப் பிரமுகர்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அமைச்சர் மூர்த்தியும், பொன்முத்துவும் மேயர் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துவிட்டனர்'' என்கிறார்கள் அங்குள்ள தி.மு.க. உடன்பிறப்புகள்.
சச்சரவு காரணமாக தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் பாதியிலேயே நின்றது குறித்து நாம் விசாரித்த போது, அந்த தி.மு.க. பிரமுகர், அன்று நடந்ததை நம் முன் விவரிக்கத் தொடங்கினார்.
"கடந்த 20-ஆம் தேதி, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் நியமனம் தொடர்பாக ஆலோசிக்க தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் நகர் மாவட்ட செயலாளர்களான பொன்முத்து, தளபதி, புறநகர் செயலாளர் மணிமாறன் மற்றும் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தனது "மத்திய தொகுதிக்கு உட்பட்ட இரண்டு மண்டலத் தலைவர் களை நானே நியமித்து கொள்கிறேன்' என்றார்.
உடனே இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொன்முத்து, "நீங்கள் எங்களிடம் எதுவும் ஆலோசனை செய்யாமலேயே மேயரை தேர்ந்தெடுத்தீர்கள். இங்கு மாவட்டச் செயலாளர்கள் எதற்கு இருக்கிறோம்? இந்தமுறை யாரும் தலையிடவேண் டாம்''’என்றார். இதனால் சலசலப்பு ஏற்பட் டது. அப்போது அமைச்சர் தியாகராஜ னின் ஆதரவாளர்கள் சிலர் எழுந்து, "நீங்கள் நடத்திய வேட்பாளர் தேர்வில், பல்வேறு குளறுபடி நடந்தது தெரியாதா? இப்ப தான் மதுரை ஒழுங்கான பாதையில் போகிறது. இதற்கு முட்டுக் கட்டை போடாதீர்கள்' என்று எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். அங்கே பெரும் பான்மையானவர்கள் பி.டி. ஆர். பக்கம் இருந்ததால், அப்செட்டான தளபதி எழுந்து, "நானும் பெயரள விற்குதான் மாவட்டச் செயலாளராக இருக்கேன். என் பேச்சை யார் மதிக் கிறார்கள்?'’என்று ஆதங் கப்பட்டார். அப்போதும் சலசலப்பு எழுந்தது.
பொன்முத்துவின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைப் பார்த்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், "நான் கிளம்புகிறேன். எனக்கு கட்சியை வைத்து, பதவியை வைத்து சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான் கட்சியை ஆரோக்கியமாக எடுத்துச் செல்ல விரும்புகிறேன். நீங்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் செய்கிறேன். இல்லை எனில் நடப்பது நடக்கட்டும்' என்றபடி பாதியில் கிளம்பிவிட்டார். அவருடன் வந்தவர்களும் "அய்யாவே கிளம்பிட்டார். இனி நமக்கு என்ன இருக்கு? தலைமை முடிவெடுக்கட்டும்'’என்றபடி கிளம்ப, இடமே வெறிச் என்று ஆகிவிட்டதாம் என்றார் அந்த நிர்வாகி.
இதுகுறித்து தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளிடம் நாம் கேட்டபோது, "இங்கே ஒரு தலைமை இல்லாததுதான் இதற்கெல்லாம் காரணம். இங்கு எல்லோரும் சம்பாதிக்க வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்கள். 10 வருசம் காய்ந்து கிடந்தார்கள். ஆட்சி வரவும் தங்க முட்டையிடும் வாத்தை அறுக்க நினைக்கிறார்கள். கட்சிக்கு புதிய எழுச்சியோடு, ஒருவர் வந்தால் பிழைக்க முடியாது என்று நினைக்கிறார்கள். அதனால் மண்டலத் தலைவர் பதவிக்கு மண்டையை உடைத்துக் கொள்கிறார்கள். இதற்கெல் லாம் ஒரு தீர்வை, கட்சித் தலைமைதான் ஏற்படுத்த வேண்டும். அதுவும் நடக்கத் தொடங்கியிருப்பதாகவே படுகிறது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்'' என்றார்கள்.
மற்றொரு உடன்பிறப்போ, "மாநகராட்சி வேட்பாளர்களைத் தேர்வு செய்ததில், பணம் விளையாடியதாக பொன்முத்து, தளபதி ஆகியோர் மீது அதிக அளவில் குற்றச்சாட்டுக் கள் எழுந்தது. குறிப்பாக பொன்முத்தைக் கண்டித்து கட்சிக்காரர்களே போஸ்டர் ஒட்டும் அளவுக்கு நிலைமை போனதைக் கட்சித் தலைமை ரசிக்கவில்லை. ஏற்கனவே மதுரை தி.மு.க. என்றாலே அடிதடி... ரவுடி யிஸம் என்ற இமேஜே இருக்கிறது. அதை முதலில் மாற்றவேண்டும். அதே சமயம் ஆளாளுக்கு நாட் டாமை செய்து கட்சியின் பெயரைக் கெடுப்பதையும் தடுக்கவேண்டும். எனவே மதுரை தி.மு.க. அதிகாரம் மிக்க ஒற்றைத் தலைமையின் கீழ் இருக்கவேண்டும் என்று எங்கள் கட்சியினரே நினைக் கிறார்கள். எப்படி புறநகரில் அமைச்சர் மூர்த்தி, கட்சியை வலுப்படுத்திக் கட்டுக்கோப்பாக வைத் திருக்கிறாரோ, அதுபோல் மதுரை நகர் மாவட்டச் செயலாளராக தளபதியின் செயல் இல்லை என்பது பெரும்பான்மையான கட்சிக் காரர்களின் கருத்தாக உள்ளது'' என்றார்.
மற்றொரு தி.மு.க. நிர்வாகி யோ, "தமிழகம் முழுவதும் இளைஞர் அணியை சேர்ந்த வர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்சியைச் சீரமைக்கும் பணியினை சபரீசன், உதயநிதி ஸ்டா லின், மகேஷ் பொய்யா மொழி, ஐ.பெரியசாமி மகன் செந்தில், அமைச்சர் பி.டி.ஆர்.தியாகராசன் என ஒரு இளைஞர் பட்டாளம் களத்தில் இறங்கி வேலை செய்வதாகத் தெரிகிறது. அதன்படி மதுரை நகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பை துணை மேயராக எதிர்பார்க்கப்பட்ட மா.ஜெய ராமனுக்கு கொடுப்பது என்றும், அழகிரிக்கு வலதுகரமாக இருந்த மன்னன் மற்றும் இந்தமுறை தேர்தலில் வெற்றிபெற்ற முபாரக் மந்திரி, மற்றும் இசக்கிமுத்து ஆகியோரை கழகத்தில் இணைக்கும் வேலையும் நடக்கிறது. மேலும் போனமுறை முதல் வர் ஸ்டாலின் மதுரை வந்தபோது, மன்னன் பை-பாஸில் உள்ள கருப்பு சாமிக் கோயில் அருகில் அவரை சந்தித்திருக்கிறார். "சரி... இணைந்து பணியாற் றுங்கள்' என்று முதல்வரும் சம்மதம் சொல்லியிருக் கிறார். மேலும், மதுரைக்கு அழகிரி இருந்த இடத்தில் திரா விட பாரம்பரியக் குடும்பத்தின் வாரிசான அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை நியமிக்கும் முடிவுக்கு தலைமை வந்துவிட்டதாகவே படுகிறது''’என்றார் உறுதியான குரலில்.
நாம் அழகிரியின் வலதுகரமான மன்னனிடம் இதுபற்றி கேட்டோம். அப்போது அவர், "ஏங்க நான் எப்பவும் தி.மு.க.தாங்க. தலைவரை சந்தித்தது உண்மைதான். நேரம் காலம் கூடி வந்துவிட்டது. எப்பவும் போல கட்சிவேலை செய்ய ஆரம்பித்து விடுவேன்''’என்றார் புன்னகையோடு. முபாரக் மந்திரியோ, "நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் நாங்கள் அக்மார்க் தி.மு.க.காரர்கள். இன்றளவும் இந்த தி.மு.க. கரைவேட்டியை கழற்றியதே இல்லை. எங்கள் உடம்பில் ஓடுவது தி.மு.க. இரத்தம். உயிரே போனாலும் தி.மு.க.வுக்கு துரோகம் செய்ய மாட்டோம். அழகிரி அண்ணனும் ஸ்டாலின் அண்ணனும் எங்களுக்கு இரு கண்கள். அழகிரி அண்ணனும், போய் கட்சிக்கு வேலை செய்ங்கப்பான்னு சொல்லிவிட்டார். இனி தலைவரும் முதல்வருமான அண்ணன் ஸ்டாலின் அவர்கள் ஆசியை வாங்கிவிட்டால் போதும். கழகத்தில் எந்தவித எதிர்பார்ப்புமின்றி வேலை செய்ய ஆரம்பித்துவிடுவோம்''’என்றார் துடிப்பாக.
இசக்கிமுத்துவோ, "தம்பி எனக்கு 78 வயதாகி விட்டது. இன்னமும் தி.மு.க. கரைவேட்டிதான் கட்டுகிறேன். இந்த கையில் உதயசூரியனை பச்சை குத்தி 60 வருசம் ஆகிவிட்டது. அண்ணா காலத்தி லிருந்து நான் கலைஞர் வெறியன். இந்தி எதிர்ப்பில் கட்சிக்காக ஜெயிலுக்குப் போக ஆரம்பித்த நான், இதுவரை 36 முறை சிறையில் இருந்திருக்கேன். 50 வருசத்திற்கு முன்பே மூன்று கார் வைத்திருந்தேன். கலைஞரைக் கூட என் காரில் கூட்டத்திற்கு கூட்டி வந்திருக்கேன். இப்ப எதுவும் இல்லை. ஆனால் தி.மு.க.காரன் என்ற கர்வம் இருக்கு. அதே கொள்கைப் பிடிப்பு இருக்கு. நான் செத்தால் தி.மு.க. கொடியைப் போர்த்தி என்னை வழி அனுப்பி வைக்கவேண்டும். கட்சியில் எங்களையும் சேர்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கு''’என்று கண்கலங்கி அழுதேவிட்டார்.
மற்றொரு மூத்த நிர்வாகியோ, "இளைஞர் களுக்கு பொறுப்பு கொடுப்பதும், கட்சிக்குப் புதிய இரத்தம் பாய்ச்சுவதும் வரவேற்கதக்கதே. ஆட்சி யையும் கட்சியையும் ஒரு சேரக் கொண்டு சென்று மக்களிடம் நல்லபெயர் வாங்க வேண்டும் என்றால், அதிகாரிகளையும் கட்சியினரையும் மேய்க்கும் நல்ல மேய்ப்பாளர் வரவேண்டும். மதுரையில் புதிய வேகத்தில் தி.மு.க. வளரும்''’என்றார் அழுத்தமாக.
மதுரை தி.மு.க. ஒரு புதிய பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது போலவே தோன்றுகிறது.