ம.ரம்யாமணி, வெள்ளக்கோவில் -திருப்பூர் மாவட்டம்

கொரோனா தொற்றால் நாடே மயானக் காடாக மாறிக்கொண்டு இருப்பதில் இருந்து விடுபடும் காலம் எப்போது?

ஒரு முதியவர், கொரோனாவால் இறந்த தன் மனைவியின் உடலை சைக்கிளில் வைத்து எடுத்துச் செல்கிறார். வழியில், மனைவியின் உடல் கீழே விழுந்து விடுகிறது. மீண்டும் சைக்கிளில் ஏற்றுகின்ற அளவுக்கு முதியவருக்கு உடல் வலிமை இல்லை. கொரோனா வால் இறந்தவர் என்பதால் மற்றவர்களும் உதவு வதற்கும் தயங்குகின்றனர். தலையில் கை வைத்து உட்கார்ந்துவிடுகிறார் அந்த முதியவர். இன்னொரு முதியவர், தன் மனைவி மூச்சுத்திணறுவதைப் பார்த்து பதற்றமாகிறார். மருத்துவமனைக்குள் சென்றாக வேண்டும். எங்கு பார்த்தாலும் நோயாளிகள். யாரைக் கூப்பிடுவது? அவரே தன் மனைவியை இருகைகளிலும் ஏந்திச் செல்கிறார். 80 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். 40 வயதுக்காரருக்கு பெட் இல்லை. தனது இடத்தை அவருக்குக் கொடுத்துவிட்டு, வீட்டுக்கு வந்து தனிமைப்படுத்திக்கொள்கிறார் முதியவர். ஒருசில நாட்களில் இறந்தும்போகிறார். இப்படி எத்தனையோ அவலங்களைப் பார்த்துக்கொண்டே தாடி வளர்த்துவரும் முதியவரின் செயல்பாடு மாறினால்தான் நிலைமை மாறும்.

பி.மணி, குப்பம் -ஆந்திரா

Advertisment

தமிழ்நாடு முழுவதும் ஆக்சிஜனை பிரதமர் மோடி பொறுப்பேற்று வினியோகம் செய்யவேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கூறியிருப்பது?

ஸ்டெர்லைட் ஆலை தயாரிக்கும் ஆக்சிஜன் (எத்தனை மாதம் கழித்தோ!) தமிழகத்தின் தேவையை நிறைவேற்றிவிட்டே பிற மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் அனைத்துக் கட்சித் தீர்மானம். உச்சநீதிமன்றமோ, ஸ்டெர்லைட் தயாரிக்கும் ஆக்சிஜனை மத்திய அரசிடம் ஒப்படைத்து விட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆக்சிஜனுக்காகத்தான் ஸ்டெர்லைட்டைத் திறக்க மத்திய அரசு வலியுறுத்தியது என்பது உண்மை என்றால், தமிழகத்தின் தேவையை முதலில் நிறைவேற்றும் பொறுப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொள்வதுதானே சரியான அணுகுமுறை!

m

Advertisment

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு-77

கொரோனா கொள்ளைத் தொற்று நோய் 2-ஆம் அலை. துவங்கிய நிலையில் தேர்தலை. நடத்தியும், தேர்தல் பரப்புரையில் மக்கள், கூட்டம் கூட்டமாக கலந்துகொண் டதுமே இப்போதைய நோய்த்தொற்று பரவியதற்கும், ஏற்படும் மரணங்களுக்கும் காரணம் என்று சுட்டிக்காட்டிய சென்னை உயர்நீதிமன்றம், "இந்த நிலைக்கு காரணமான தேர்தல் கமிஷன் மீது கொலைக் குற்றமே சாட்டலாம்' என்று கூறியுள்ளது குறித்து?

எத்தனையோ வழக்குகளை தன்னிச்சை யாக (சூ மோட்டோ) விசாரணைக்கு எடுத்து, மக்கள் நலன் காக்கும் தீர்ப்பினை வழங்கி யிருக்கின்றன நீதிமன்றங்கள். தேர்தல் நேரப் பரப்புரைகளையும் அதில் மக்கள் கூடுவதையும் பார்த்தபோதே, தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தால், கட்டுப்பாட்டுக்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கலாம். பொதுவாக, தேர்தல் ஆணையம் சார்ந்த உத்தரவுகளைப் பிறப்பிப்பதில் நீதிமன்றங்கள் நீண்ட ஆலோசனைகளை மேற்கொள்வது வழக்கம். 2016 தேர்தலில் ராதாபுரம் தொகுதியின் தபால் ஓட்டுகள் தொடர்பான மறு வாக்கு எண்ணிக்கையும், அதன் முடிவுகளும் இன்னும் வெளியாகவில்லை. அடுத்த தேர்தலும் முடிந்துவிட்டது. இரண்டு பெரிய கட்சி களின் அதே வேட்பாளர்கள்தான் மீண்டும் களத்தில் நின்றனர். இந்திய நாட்டின் தேர்தல் ஜனநாயக விசித்திரங்களில் இது போல எத்தனையோ உண்டு.

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

மே 2-ந் தேதி அன்று ஆச்சரியப்படப்போவது யார், ஏமாறப்போவது யார்?

தேர்தல் ஜனநாயகம் எனும் நீதிமன்றத்தில் நீதிபதிகளாகிய மக்களே தங்கள் தீர்ப்பு என்னவென்று அறிவதற்கு ஆர்வத்துடன் இருப்பது ஆச்சரியம். அவர் களே பின்னர் ஏமாளிகளாகவும் ஆக்கப்படுகிறார்கள்.

மு. முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

புதிய கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்கவேண்டும் என, பல மாநில முதல்வர்களுக்கு வைகோ எழுதியுள்ள ஆழமான விரிவான கடிதத்தை படித்தீரா?

வைகோவின் கருத்துகள் எப்போதுமே ஆழமாகவும் விரிவாகவும் இருக்கும். புதிய கல்விக் கொள்கை என்பது தமிழ்நாடு பெற்றுவந்துள்ள கல்வி முன்னேற்றத்திற்கும் -சமத்துவத்திற்கும் நேர் எதிரானது. மொழி ஆதிக்கம் உள்ளிட்ட பலவகை ஏற்றத்தாழ்வுக்கும் வழிவகுப்பது. அதனால்தான் அதனை எதிர்க்கின்ற கட்சிகள் -அமைப்புகளின் எண்ணிக்கை இங்கே அதிகமாக இருக்கிறது. வைகோவின் குரலும் அதில் வலிமையாக ஒலிக்கிறது.

சி.கார்த்திகேயன், சாத்தூர்

"இந்த தருணத்தில் ஐ.பி.எல். தேவையா?' என சில கிரிக்கெட் வீரர்கள் கேள்வி கேட்கிறார்களே?

சினிமா தேவையா, பார் தேவையா, திருவிழாக் கள் தேவையா, தேர்தல் தேவையா, கறிக்கடையில் இவ்வளவு கூட்டம் தேவையா எனக் கேள்விகள் ஏராளமாக இருக்கின்றன. அதில், ஐ.பி.எல். போட்டிகள் தேவையா என்பதும் அடங்கும். ஆடி அடங்கும் வாழ்க்கை என்பதை அறிந்திருந்தும், அடுத்த நொடி மரணம் நேரலாம் எனத் தெரிந்திருந்தும் அந்தந்த நொடியை வாழ்ந்து மகிழ நினைக்கிறார்கள் மனிதர்கள்.