மு.முஹம்மது ரபீக் ரஷாதீ விழுப்புரம்

நான் குறுக்கு வழியில் முதல்வரானேன் என்றால் 1969-ல் உங்கள் தந்தை எப்படி முதல்வரானார் என ஸ்டாலினை நோக்கி கேட்கிறாரே எடப்பாடி?

ஒரு முதல்வர் இறந்துவிட்டால், அடுத்து அந்தப் பதவிக்கு வரவேண்டியவர் எந்த முறையில் வரவேண்டுமோ அதன்படி வந்தவர் மு.க.ஸ்டாலினின் அப்பா, கலைஞர். அறிஞர் அண்ணா இறந்தபோது, தி.மு.க.வில் பதவி அடிப்படையில் இரண்டாம் இடத்தில் இருந்தவர் நாவலர் நெடுஞ்செழியன். ஆனால், கட்சி நிர்வாகிகளிடமும், சட்டமன்ற உறுப்பினர்களிடமும், தொண்டர்களிடமும் தனிப்பட்ட செல்வாக்கு கொண்டிருந்தவர் கலைஞர். தொண்டர்களைக் கடந்து, மக்களிடமும் ஆதரவு பெற்றிருந்தவரான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் கலைஞர் பக்கம்தான் அப்போது இருந்தார். தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தலைவர் தந்தை பெரியார் அவர்களும் எதிர்கால நலன் கருதி கலைஞரிடமே கட்சியும் ஆட்சியும் ஒப்படைக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். கூவத்தூர் கூத்துகள் ஏதுமின்றி, கட்சியின் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன், அண்ணா வழியில் மாநில சுயாட்சி வீரராக முதல்வராக இருந்தவர் கலைஞர்.

mavalianswers

Advertisment

பி.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி

ஜல்லிக்கட்டு களமான அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர்... இதில் உங்களுக்கு பிடித்த களம்.?

மூன்றையும் மீட்டுக் கொடுத்த மெரீனா எனும் போராட்டக் களம்.

Advertisment

சி. கார்த்திகேயன், சாத்தூர்.

நாம் தமிழர் கட்சி பெண்களுக்கு ஐம்பது சதவிகிதம் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவது சாதனை தானே?

அதிகாரப்பூர்வமாக பெண்களுக்குரிய இடஒதுக்கீடு வழங்காத நிலையில், ஒரு கட்சி தன்னளவில் பெண்களுக்கு சமஅளவில் இடங்களை ஒதுக்குவது வரவேற்பிற்குரியது.

லி.சீனிராஜ், தொம்பக்குளம்

நீதிபதிகளைப் பற்றிய நீதிபதி கர்ணனின் விமர்சனத்திற்கும் குருமூர்த்தி யின் விமர்சனத்திற்கும் வித்தியாசம் உள்ளதா?

கர்ணன், சிறைத்தண்டனை பெற்றார். குருமூர்த்தி தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து ட்வீட் போட்டார். அவ்வளவுதான் வித்தியாசம்.

தா.விநாயகம் ராணிப்பேட்டை.

டாக்டர் சாந்தாவின் மறைவு?

மருத்துவத் தொண்டே மகேசன் தொண்டு என பல ஆண்டுகள் தொடர்ச்சியாக சேவை செய்தவர். இளம் வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் வாசலுக்கு சென்றவர்களை எமனின் பிடியிலிருந்து மீட்டு பல ஆண்டுகள் வாழ வைத்தவர்.

ம.தமிழ்மணி வெள்ளக்கோவில்

அரசியலில் ஏட்டிக்கு போட்டியாக பேசுவதை நிறுத்திவிட்டு மக்கள் தொண்டே மகத்தான தொண்டு என்று அரசியல்வாதிகள் சிந்தித்து பார்ப் பார்களா?

ஏட்டிக்குப் போட்டியாகப் பேசினால்தான் அரசியல். அதைப் பற்றித்தான் அரசியல்வாதிகள் ஒவ்வொரு நாளும் சிந்திக்கிறார்கள்.

______________

தேர்தல் களம்!

வாசுதேவன், பெங்களூரு

தேர்தலில் போட்டியிட டிபாஸிட் கட்டணம் எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது?

இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடந்த 1952ஆம் ஆண்டிலேயே வேட்பாளர்களுக்கான காப்புத் தொகை எனப்படும் டெபாசிட் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில், நாடாளுமன்ற மக்களவைக்குப் போட்டியிடுபவர்களுக்கான டெபாசிட் என்பது பொதுத் தொகுதியில் 500 ரூபாயாகவும், தனி தொகுதியில் 250 ரூபாயாகவும் இருந்தது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான டெபாசிட் தொகை பொதுத் தொகுதியில் 250 ரூபாயாகவும், தனி தொகுதிகளில் 125 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில் தற்போது நாடாளுமன்ற மக்களவை பொது தொகுதிக்கு 25ஆயிரம் ரூபாய், தனி தொகுதிக்கு 12ஆயிரத்து 500 ரூபாய், சட்டமன்ற பொதுத் தொகுதிக்கு 10ஆயிரம் ரூபாய், தனி தொகுதிக்கு 5ஆயிரம் ரூபாய் எனத் தற்போது வசூலிக்கப்படுகிறது. வேட்பாளர்களுக்கான டெபாசிட் தொகை என்பது தேர்தல் ஜனநாயக நடைமுறை உள்ள பல நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, பல கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் சுயேட்சைகளும் அதிகளவில் போட்டியிடுவதால், அதற்கான ஒரு கட்டுப்பாட்டினைக் கொண்டு வரும் வகையில் இந்த காப்புத் தொகை என்பது நிர்ணயிக்கப்பட்டது. ஒரு தொகுதியில், பதிவாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குக்கு குறையாமல் பெற்றால்தான் டெபாசிட் தொகை திரும்ப கிடைக்கும். அந்தளவு வாக்குகளைப் பெற முடியாத வேட்பாளர்களைத்தான் டெபாசிட் இழந்தவர்கள் என்கிறோம். அந்தத் தொகை தேர்தல் ஆணையத்தின் கணக்கில் சேர்ந்துவிடும். 1952ல் நடந்த முதல் பொதுத் தேர்தலில் போட்டியிட் 1,874 வேட்பாளர்களில் 745 பேர் அதாவது 40% பேர் டெபாசிட் தொகையை இழந்தனர். 1996 தேர்தலில் பல முனைப் போட்டி நிலவிய நிலையில், மொத்தம் போட்டியிட்ட 13ஆயிரத்து 952 வேட்பாளர்களில் 12ஆயிரத்து 688 பேர் அதாவது 91% வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட் தொகையை இழந்தனர். பெரிய கட்சிகளுக்கு குடைச்சல் கொடுப்பதற்காக வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, அதன்பின் பேரம் நடத்தி டெபாசிட் தொகையைப் போல பல மடங்கு தொகையை தேர்தலுக்கு முன்பே பெற்றுக்கொண்டு ஒதுங்குவோரும், ஒரு கட்சியிடம் நிதி வாங்கி, இன்னொரு கட்சியின் ஓட்டுகளைப் பிரிப்பதற்காக வேட்பாளராக நின்று டெபாசிட் தொகையைப் பறிகொடுப்போரும் இந்திய தேர்தல் ஜனநாயகத்தின் விசித்திரங்கள்.