ம.ரம்யா ராகவ், வெள்ளக்கோவில்
இந்திய அளவில் பா.ஜ.க. கட்சிக்கு கண்ணுக்கு எட்டியவரை எதிரி களோ... அல்லது எதிர்கட்சிகளே தெரியாத அளவில் ராஜநடை போடுகிறதே?
பள்ளிக்கூடத்திலோ கல்லூரியிலோ வேதியியல் பாடம் பயிலும் மாணவர்கள், டைட்ரேஷன் என்ற செய்முறைப் பயிற்சியை மேற்கொள்வார்கள். இரண்டு வேதிக் கலவைகளைக் கொண்டு மூன்றாவதாக ஒன்றை உருவாக்கும் பயிற்சி அது. சொட்டு சொட்டாக ஒன்றில் ஒன்றைக் கலக்க வேண்டும். நீண்ட நேரம் சொட்டிக்கொண்டே இருந்தாலும் இரண்டும் வெள்ளையாகவே இருக்கும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில், அடுத்தடுத்து விழும் இரண்டு மூன்று சொட்டுகளில், குடுவையில் உள்ள வேதிக்கலவை மொத்தமாக ஊதா நிறத்திற்கு மாறிவிடும். அரசியலும் அப்படித்தான். சரியான வேதிக் கலவையுடன் பொறுமையாகவும் தொடர்ச்சியாகவும் முனைப்புடன் செயல்பட்டால் தேர்தலில் இத்தகைய வேதிவினை நிகழும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரியே இல்லை என்று எகத்தாளமாக சொன்னவர்கள் என்ன ஆனார்கள் என்பதை வரலாறு வரவு வைத்திருக்கிறது.
டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்
"வாரிசு அரசியல் ஆபத்தானது. அதை எதிர்த்துப் போராட முன்வாருங்கள்' என்கிறாரே பிரதமர் மோடி?
நேரு குடும்பம், ஷேக் அப்துல்லா குடும்பம், முலாயம்சிங் யாதவ் குடும்பம், லாலு பிரசாத் யாதவ் குடும்பம், கலைஞர் குடும்பம் என அரசியலில் தலைமுறைகளாகத் தாக்குப் பிடிப்பது மோடிக்கும் அவரைச் சேர்ந்தவர்களுக்கும் கண்களை உறுத்துகிறது. வாரிசு என்பது ஜனநாயக அரசியலில் இயல்பு அல்ல. ஆனாலும், தேர்தலில் மக்கள் ஆதரித்தால் மட்டுமே அரசியல் வாரிசுகள் வெற்றிபெற முடியும். ஆனால், அதிகாரத்தில் இருப்பதாலேயே அமித்ஷாவின் வாரிசு தொடங்கிய பிசினஸ், கொரோனாவிலும் கோடிகளில் அள்ளிக் குவித்தது போன்ற நிகழ்வு கள்தான் வாரிசு அரசியலைவிட அதிக -அதீத ஆபத்தானது.
சி.கார்த்திகேயன், சாத்தூர்
ஐ.நா. சபை என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதுபோல தெரிகிறதே?
ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தான் என்று அலட்சியத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் உதாரணமாக சொல்வார்கள். தமிழ் இலக்கியமோ, கையில் ஊமன் கண்ணில் காக்கும் வெண்ணெய் உணங்கல் போல என்று சொல்கிறது. அதாவது, நல்ல வெயில் நேரத்தில் பாறை மீது வைக்கப்பட்ட வெண்ணெய் உருகி வழிகிறது. அதை ஒருவன் பார்த்துக்கொண்டிருக் கிறான். அவனுக்கு கைகள் இல்லை. அதனால் உருகுகிற வெண்ணெய்யை பத்திரமாக எடுத்து வைக்க முடிய வில்லை. அத்துடன் அவனுக்கு வாய் பேசவும் வராது. அதனால், யாரிடமும் இந்த அவலத்தைச் சொல்லித் தடுக்க முடியவில்லை. ஐ.நா.சபை பல நேரங்களில் இப்படித்தான். கையும் வாயும் கட்டப்பட்ட நிலையில் பரிதாபமாக இருக்கும். காரணம், வல்லரசு நாடுகளை ஆளும் இன்றைய நீரோ மன்னர்கள்தான்.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
"செஸ் ஒலிம்பியாட் 2022' தொடருக்கான ஏலத்தில் தமிழ்நாடு எடுத்ததால் என்ன பலன்?
இந்தியாவில் விளையாட்டு என்பது திறன் மேம்பாடாகவும், வேலை வாய்ப்பாகவும் அமையாமல் அரசியலாக இருக்கிறது. அதிலும், உயர்சாதியினரின் அரசியலுக்கான விளையாட்டாக கிரிக்கெட் உள்பட பல விளையாட்டுகள் உள்ளன. இந்நிலையில், அரசியல்வாதியின் தலைமையில் நடைபெறும் ஆட்சியில், அரசாங்கமே ஒரு விளையாட்டுப் போட்டியை நடத்த முன்வருவது என்பது இளைஞர்களுக்கான நம்பிக்கையை உருவாக்கும். அவர் களின் திறன் மேம்படும். விளை யாட்டுக்கான கட்டமைப்பு வசதிகள் பெருகும். 1991-96 ஜெயலலிதா ஆட்சியில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டபோது, சென்னையில் நேரு ஸ்டேடியம் புதுப்பிக்கப்பட்டதுடன், சர்வதேச தரத்திலான பல விளையாட்டு அரங்குகள், நீச்சல் குளங்கள் உருவாகின. இப்போதும் அவை பயன் தருகின்றன. மு.க.ஸ்டாலின் அரசு செஸ் ஒலிம்பியாட்டுடன் தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்கத் தேடல் என்ற திட்டத்தையும் கொண்டு வந்திருப்பது விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி
முதல்வர் பதவிக்கு நேரடி தேர்தல் என அமித்ஷா கூறி வருகிறாரே?
அது உடனடியாக நடைபெறப் போவதில்லை என்றாலும், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா போன்ற பல மாநிலங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எந்தக் கட்சிக்கு வாக்களித் தால் யார் முதல்வராக வருவார் என்று தெரிந்தே மக்கள் வாக்களிக்கிறார் கள். மாநிலத் தலைவர்களே இல்லாமல் தடுமாறும் காங்கிரஸ் கட்சிதான் விழிப்புணர்வுடனும் தொலைநோக்குப் பார்வையுடனும் செயல்படவேண்டும். அத்துடன், அமித்ஷாவின் திட்டம், பா.ஜ.க.வுக்கே பல இடங்களில் ஆப்பு செருகிவிடும் ஆபத்தும் உள்ளது.
தே.மாதவராஜ், கோயமுத்தூர் 45
அண்ணாமலை 20,000 புத்த கங்களை படித்ததாக சொல்கிறாரே?
காமெடி பீசு என்று கேள்விப் பட்டிருப்போம். தமிழ்நாட்டு அரசிய லில் ஒரு காமெடி ஐ.பி.எஸ்.சு!