ஏ.எஸ்.பானுமதி, தம்மத்துக்கோணம், நாகர்கோயில்-4
மறைந்த கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே பற்றி...?
கிரிக்கெட்டில் ஸ்பின் பவு-ங்கில் இந்தியாதான் கில்லி. அந்த பவுலிங்கில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள் ளிட்ட இந்திய வீரர்களைத் திணறடித்தவர் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே. "சாவடிக்கிறான்டா' என்று அவருடைய பவுலிங்கை பார்த்து மிரண்டுபோய் சொன்னவர்கள் இந்திய ரசிகர்கள். செத்துட்டாருன்னதும் அவருடைய அந்த "சாவடிச்ச' ஆட்டங்கள்தான் உயிரோட்டமாக மனதில் நிற்கிறது. உலகக் கிரிக்கெட் ரசிகர்களின் இதய விக்கெட்டுகளைக் கவர்ந்தவர்.
வாசுதேவன், பெங்களூரு
சூடு பிடித்து வரும் ஆர்கானிக் விவசாயம்?
வேட்டையாடும் சமூகமாக இருந்த ஆதி மனித இனம் மெல்ல மெல்ல தன் உணவுப் பழக்கத்தை மாற்றி, விவசாயம் செய்யத் தொடங்கியது. அதனால்தான் வேட்டையாடும் பழக்கம் கொண்ட மலைவாழ் மற்றும் சமவெளியில் வாழும் பூர்வகுடிகளை, பழங்குடிகள் என்கிறார்கள். பழங்குடிகளின் நாகரிக வளர்ச்சி, விவசாயத்தையும் அதற்கான நிலத்தையும் நோக்கி நகர்த்தியது. உணவுக்கான நிலம், மனிதனுக்கான உடைமையாக மாறியது. அதுவும் நிலத்தின் உடைமையாளன் ஆண்தான் என்பதால், அதுவரை பெண்களுக்கு இருந்த ஆளுமை தகர்ந்தது. குடும்ப அமைப்புகளில் பெண்கள் வீட்டுக் குள்ளே இருக்க வேண்டியவர்களாகவும், ஆண்கள் வெளியே சுற்றுவதற்கான உரிமையுள்ளவர்களாகவும் ஆனார்கள். நிலத்தை சொந்தம் கொண்டாட ஒரு சாதி, அதில் வேலை செய்வதற்கு இன்னொரு சாதி என ஏற்றத்தாழ்வும் உருவானது. காலம் அறிவியல் வளர்ச்சி யால் மேம்பாடு அடைந்தபோது, நிலங் களில் ரசாயன உரங்கள் புகுந்தன. சமுதாயத்தில் இயற்கையான மாற்றங் கள் நிகழ்ந்தன. சாதிக்கட்டுகளைத் தகர்த்து எல்லாரும் படித்து வேலைக்குச் செல்லவும் உயர்பதவிகளைப் பெறவு மான நிலை உருவானது. வீட்டுக்குள் மட்டுமே இருந்து வந்த பெண்கள் பல துறைகளிலும் பணிக்குச் சென்று தங்கள் ஆளுமையை நிரூபித்தனர். அரசியல் அதிகாரத்தில் பெண்கள் இப்போது மேயர்களாகிறார்கள். ஆண்கள் ஆர்கானிக் விவசாயம் நோக்கிச் செல்கிறார்கள். இரு தரப்புக்கும் நல்லது நடக்கட்டும்.
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி
மிசா கொடுமை பத்தி எழுதிய "உங்களில் ஒருவன்' புத்தகத்தை ராகுல் மூலம் வெளியிட்டது ஒரு வகையில் ராஜதந்திரம் தானே?
என் மகன் ஸ்டாலினை அரசியலுக்கு கொண்டு வந் தது நானல்ல, இந்திராகாந்தி அம்மையார் தான் என்றவர் கலைஞர். 1976க்கு முன்புவரை கோபாலபுரம் பகுதியில் கட்சிப் பணி பார்க்கும் சிறுவனாக-இளைஞனாக இருந்த மு.க.ஸ்டாலினை தி.மு.க.வில் உள்ள மற்ற நிர்வாகிகளுக்கும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் ஆர்வலர்களுக்கும் அடையாளம் காட்டியது, பிரதமர் இந்திராகாந்தி கொண்டு வந்த எமர்ஜென்சி நிலையும், அதன் காரணமாக மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதும்தான். தி.மு.க.வில் 500க்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாடு முழுவதும் இந்த சட்டத்தில் கைதாகி, எந்த சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாத நிலை அப்போது இருந்தது. திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள், தொண்டர்கள் எனப் பலரும் சிறைப்படுத்தப்பட்டனர். அரசியல் கைதிகளுக்குத் தரும் உரிமைகள் கூட சிறையில் மறுக்கப்பட்டன. சென்னை மத்திய சிறையில் முரசொலி மாறன், ஆசிரியர் கி.வீரமணி, ஆற்காடு வீராசாமி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கடுமையான தாக்குதலுக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளானார்கள். நாடு முழுவதுமே எதிர்க்கட்சியினர் ஒடுக்கப்பட்டனர். ஓராண்டு காலம் சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்தார் மு.க. ஸ்டாலின். அதன்பிறகு நடந்த தேர்தலில் இந்திராகாந்தி அம்மையார் படுதோல்வி அடைந்தார். இந்தியாவில் முதன்முறையாக காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைந்தது. அடுத்த இரண்டரை ஆண்டுகளில் மீண்டும் தேர்தல். இந்த முறை, இந்திரா காங்கிரசுடன் தி.மு.க கூட்டணி. மகனையும் மருமகனையும் சிறைப்படுத்தி சித்திரவதை செய்தவருடன் பதவிக்காக கூட்டணி சேர்ந்திருக்கிறார் தி.மு.க தலைவர் என்று கலைஞர் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டது. ஆனால், கலைஞருடன் சென்னை கடற் கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திராகாந்தி, எமர்ஜென்சியைக் கொண்டு வந்ததற்காகவும் அப்போது நடந்த ஜனநாயகப் படுகொலைகளுக்காகவும் பொதுமேடையில் மன்னிப்புக் கேட்டார். மக்கள் அவரை ஆதரித்தனர். மீண்டும் பிரதமர் ஆனார். வரலாறு மாறியது. தேர்தல் களத்தில் பாட்டியை அப்பா பேச வைத்தார். புத்தக வெளியீட்டில் பேரனை மகன் பேச வைத்திருக்கிறார். இது ராஜதந்திரம் மட்டுமல்ல, தற்போதைய நிலையில் தேசநலனும்கூட.
கே.கே.வெங்கடேசன், செங்கல்பட்டு
அரசியல்வாதிகளின் பலம் எது, பலவீனம் எது?
மக்களின் மறதி அவர்களின் பலம். மறுபடியும் மக்களிடம்தான் ஓட்டு கேட்கச் செல்ல வேண்டும் என்பதை மறந்துவிடுவது அவர்களின் பலவீனம்.