மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
இந்திய அளவில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் என ஸ்டாலினுக்கு திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளாரே?
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் முன்னெடுத்த கூட்டணியாலும் அதன் வெற்றியாலும் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே இந்திய அரசியல் மீது கவனம் செலுத்திவிட்டார். இந்திய அரசியல் களம்தான் இப்போது மு.க.ஸ்டாலின் மீது கவனம் செலுத்த வேண்டும்.
வாசுதேவன், பெங்களூரு
கபடி போட்டியை துவக்கி வைத்து அதில் பங்கு பெற்று விளையாடி கை முறிந்தபோதும் தொடர்ந்து விளையாடி ஊக்குவித்த ஆந்திர பிரதேச சபாநாயகரின் செயல்?
சென்னை 600028 என்ற திரைப்படத்தில் கிரிக்கெட் போட்டியைத் தொடங்கி வைப்பதற்காக டாஸ் போடும் அரசியல்வாதி சண்முகசுந்தரம், ‘பவுலிங்கா? ஃபீல்டிங்கா?’ என்று கேட்பார். இரண்டில் எதைத் தேர்ந்தெடுத்தாலும் ஒன்றுதான். பேட்டிங்கா, ஃபீல்டிங்கா என்பதுதான் சரியான கேள்வியாக இருந்திருக்கும். இதுகூடத் தெரியாதவர்கள்தான் அரசியல்வாதிகள் என்பது போன்ற காட்சி அது. தியேட்டர் அதிர சிரிப்புச் சத்தம் கேட்டது. அதற்கு மாறாக, ஆந்திராவில் கபடி போட்டியைத் தொடங்கி வைத்த அம்மாநில சபாநாயகர், ரைடு சென்றபோது, தடுமாறி விழுந்ததில் கை எலும்பில் முறிவு ஏற்பட்டது. அப்போதும்கூட, விளையாட்டில் இதெல்லாம் சகஜம் என்பதுபோல, தொடர்ந்து விளையாடியிருக்கிறார். தமிழ்நாட்டில் சங்கரன்கோவில் தி.மு.க எம்.எல்.ஏ. ராஜா, துருக்கியில் நடந்த ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். அரசியலை விளையாட்டாகக் கருதுவதோ, விளையாட்டில் அரசியலைப் புகுத்துவதோ தவறானது. அரசியல்வாதிகள் விளையாட்டுத் திறமையைக் காட்டுவது பெருமை. அது, அடுத்த தலைமுறைக்கான ஊக்கம்.
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி, நெல்லை மாவட்டம்
கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதே?
கொல்கத்தா நிச்சயம், டெல்லி இலட்சியம் என்று ஆதரவாளர்கள் ஆரம்பித்துவிடுவார்கள்.
கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு 77.
தொல். திருமா அவர்கள் நடத்திய விருது 6 வழங்கும் நிகழ்சியில் பேசிய நெல்லை கண்ணன் அவர்களின் உணர்ச்சி மிக்க பேச்சினைப் பற்றி?
அரசியலில் பெருந்தலைவர் காமராஜரின் சீடர் நெல்லை கண்ணன். ஒரு காலகட்டம் வரை திராவிட இயக்க அரசியலைக் கடுமையாக விமர்சித்தவர். கலைஞரை எதிர்த்து 1996 தேர்தலில் போட்டியிட்டவர். அவர் பாடுபட்ட காங்கிரஸ் கட்சி காலப்போக்கில் அவரை உணரவில்லை. அவர் சென்ற இடங்களும் அவரது ஆற்றலுக் குரியவையாக இல்லை. அருவி போன்ற தமிழ் அவரது சொத்து. அந்தத் தமிழ் மொழிக்கு-தமிழ் பண்பாட்டுக்கு நேர் எதிரான மதவாத சக்திகளின் அரசாங்கம் மத்தியில் அமைந்ததும் அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இவர்களிடமிருந்து தமிழையும் நாட்டையும் காப்பாற்ற யார் இருக்கிறார்கள் எனத் தேடினார். அவர் ஒருகாலத்தில் எதிர்த்த திராவிட இயக்கத்தின் இன்றைய தளபதியான ஸ்டாலின் கண்ணுக்குத் தெரிந்தார். சனாதனத்தை வேரறுக்கும் அரசியல் தெளிவு கொண்ட திருமாவளவன் கண்ணுக்குத் தெரிந்தார். இருவரும் இணைந்திருந்த மேடையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் காமராஜர் கதிர் விருது நெல்லை கண்ணனுக்கு வழங்கப் பட்டது. அவர் நெகிழ்ந்தார். இரு தலைவர்களும் உடல்நலனைப் பாதுகாத்து, உயிரனைய தமிழையும் தமிழ்நாட்டையும் இனப் பகைவர் களிடமிருந்து காக்க வேண்டும்-மீட்க வேண்டும் என உணர்ச்சி பொங்கப் பேசினார். காலம்தான் களங்களைத் தீர்மானிக்கிறது.
ம.தமிழ்மணி, குப்பம், ஆந்திரா மாநிலம்
சினிமா உலகில் ரசிகர் களிடையே சண்டை போட்டுக் கொள்கிற அளவில் தங்கள் ரசிகர்களை கவர்ந்த எம்.ஜி.ஆர்- சிவாஜி ஜோடி, அதற்குப்பிறகு கமல்- ரஜினி ஜோடி அமைந்தது போல், தற்போது அந்தவழியில் யாரையும் கூறும் அளவில் ஜோடி நடிகர் அமையவில்லையே?
அதற்கு குறைவேயில்லை. விஜய், அஜித் ரசிகர்கள் தல- தளபதினு மோதிக்கொண்டதுகூட அண்மைக்காலம் வரை தொடர்ந்தது. சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தில், ‘நான் அழிக்கிற அசுரன் இல்லை. காக்கிற ஈஸ்வரன்’ என்று போகிற போக்கில் தனுஷ் மீது பஞ்ச் விடப்பட்டது. ரசிகர்கள் கைதட்டினார்கள். நிழல் யுத்தம் நடத்தும் ரசிகர்கள் காலந்தோறும் உண்டு. டி.வி. சீரியல் ஹீரோ-ஹீரோயின்களுக்காகக் கூட சண்டை போட்டுக் கொள்வார்கள்.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45
அரசு உயர் பதவியில் இருந் தவர்கள் ஓய்வுபெற்ற பின்பு அரசியலுக்கு வர தடை விதிக்கலாமா?
பரிசீலிக்கலாம். குறைந்தபட் சம், அரசுப் பணியில் அவர்கள் மேற்கொண்ட செயல்பாடுகள் எந்தக் கட்சிக்கு சாதகமாக இருந்தன என்பதையாவது விசாரிக்கலாம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mavali_150.jpg)
பா.ஜெயப்பிரகாஷ், தேனி
"பக்தி பாடலுக்கு, கவர்ச்சிகரமாக நடனமாடிய நடிகை சன்னிலியோனுக்கு மதுராவைச் சேர்ந்த பூஜாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பற்றி..?
அடடா.. தம் மாரோ தம் என்ற போதை பார்ட்டிக்கான பாடலில் ‘ஹரே கிருஷ்ணா.. ஹரே ராம்’ என்று ஆடிய ஜீனத் அமன் காலத்தில் இருந்த பூசாரிகளுக்கு இது தெரியாமல் போய்விட்டதே!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-01/mavali-t.jpg)