வாசுதேவன், பெங்களூரு

எத்தனை முறை சென்றாலும் அலுக்காத சுற்றுலாத் தலம்?

வெளியூர்களில், வெளி நாடுகளில் வேலை பார்ப்பவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்லும்போது அதுதான் அவர்களுக்கு சுற்றுலாத்தலம், புனிதத்தலம். எத்தனை முறை அங்கு சென்றாலும், அடுத்து எப்போது போவோம் என்ற ஆவலை ஏற்படுத்தும் அலுக்கவே அலுக்காத இடம்.

லட்சுமிகாந்தம், வேலூர் (நாமக்கல்)

Advertisment

பூரண மதுவிலக்கே கொள்கை என்கிறார் அமைச்சர் தங்கமணி. ஆனால், புத்தாண்டுப் பரிசாக டாஸ்மாக் மதுவின் விலையை உயர்த்தியிருக்கிறதே எடப்பாடி பழனிசாமி அரசு?

வள்ளலார் இராமலிங்க அடிகள் நினைவுநாளான (பிப்ரவரி 8) தைப்பூசத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். லீவு நாள் என்றால் முதல்நாளே குடி மக்கள் தேவையான சரக்கை வாங்கி வைத்துக் கொள்வார்கள். அதனால், 7-ந் தேதி முதல் விலையை உயர்த்தி வள்ளலாரின் நினைவைப் போற்றி(!) இருக்கிறது எடப்பாடி அரசு. அதுமட்டுமல்ல, படிப்படியாக மதுவிலக்கு என்பதுதான் 2016-ல் ஜெ. அளித்த தேர்தல் வாக்குறுதி. ஆட்சிக்கு வந்ததும் முதற்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளை மூடி, வேலை நேரத்தையும் கொஞ்சம் குறைத்தார். ஆனால், எடப்பாடி ஆட்சியில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளதுடன், வேலை நேரத்தையும் மீறி மறைமுக விற்பனையும் தொடர்கிறது. நான்கரை லட்சம் கோடி நேரடி கடனில் தமிழ்நாடு தவிக்கும் நிலையில், மது விற்பனையால் 30 ஆயி ரம் கோடி வருமானம் வருகிறதே, விட்டுவைப்பார்களா? சொல்லும் செயலும் வேறு வேறு.

mm

Advertisment

நித்திலா, தேவதானப்பட்டி

இந்தியா வரும் டிரம்புக்கு காந்தி யின் புத்தகமும் ராட்டையும் நினைவுப் பரிசாக வழங்கப்படுகிறதாமே?

காந்தி உண்மையை மறைக்க விரும்பாதவர். ஆனால், டிரம்ப் வருகைக் காக குஜராத்தின் முக்கிய நகரமான அகமதாபாத்தில் உள்ள குடிசைப் பகுதிகள், அவர் பார்வைக்குத் தெரியாதபடி உயரமான சுவர் எடுத்து மறைக்கப்படுகிறது. அதன் மூலமாக, அகமதாபாத் அழகான நகரம் என்று டிரம்ப் நம்பிவிடுவார் என்று மத்திய அரசும் குஜராத் அரசும் நம்புகிறது. உலகத்தின் மூலை முடுக்குகளை தனது சேட்டிலைட் கண்களால் அளந்துவிடும் அமெரிக்காவுக்கும் அதன் அதிபருக்கும் உண்மை தெரியாமல் இருக்குமா என்ன? எதற்காக இந்த ஆடம்பர வேடம்?

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

ரஜினி கட்சி ஆரம்பிப்பது குறித்து தமிழருவி மணியன் அறிவிப்பு வெளி யிடுவது பற்றி?

பசியோடு இருப்பவர்கள்தான் ஹோட்டல் எப்போது திறக்கும் என்று எதிர்பார்த்து கிடப்பார்கள்.

ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி

2021 தேர்தலில் தே.மு.தி.க. வலிமை பெற்று, விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமைப்பதுதான் நோக்கம் என்கிறாரே பிரேமலதா?

மனிதர்கள் சில நேரங்களில் தமக்குத் தாமே பேசிக்கொள்வார்கள்.

___________

தமிழி

அ.யாழினி பர்வதம், சென்னை-78

கல்வெட்டு, ஓலைச்சுவடி ஆய்வு, அகழ்வாராய்ச்சி என தொல்லியல் துறையை நமக்கு ஆங்கிலேயர்கள்தான் சொல்லிக் கொடுத்தனரா?

புதிய உலகத்தைக் காண்பதும், அதில் பழைய, அரிய செய்திகளைத் தேடுவதும் பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. "திரை கடலோடியும் திரவியம் தேடு' என்ற வார்த்தைகளுக்கேற்ப தமிழர்கள் சங்க காலத்திலேயே கடல் வழியே கலன் செலுத்தி வாணிகத்தில் ஈடுபட்டிருப்பதை தமிழ்ச் செய்யுள்கள் வாயிலாக அறிய முடிகிறது. அதுபோல கிரேக்கம், ரோமாபுரி, சீனம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த வணிகர்கள் பற்றியும் "சிலப்பதிகாரம்', "பட்டினப்பாலை', "மணிமேகலை' போன்ற பழந்தமிழ் நூல்களில் காணமுடிகிறது. பின்னர், "நாவாய்' எனப்படும் பாய்மரக் கப்பல்படையை அமைத்து அதன் மூலமாக இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது கரிகாலச் சோழன், ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் போன்ற சோழ மன்னர்கள் படையெடுத்து, ஆளுமை செலுத்தியதை வரலாறு சுட்டிக்காட்டுகிறது. தமிழ் மன்னர்களும் வணிகர்களும் மேற்கொண்ட பயணங்களில் ஆய்வு நோக்கம் நேரடியாக இல்லாவிட்டாலும் உள்நாட்டு, வெளிநாட்டு படையெடுப்புகள் வாணிகத்தில் பண்பாட்டுரீதியான தகவல்களை நிறையவே சேகரித்தனர். அவற்றை ஓலைச்சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் பதிவு செய்தனர். இந்தியாவுக்கு வந்த சீன யாத்திரிகர்கள் பாஹியான், யுவான்சுவாங் போன்றோரும் பல தகவல்களைப் பதிவு செய்துள்ளனர். அகழ்வாராய்ச்சி என்பது ஐரோப்பியர்களின் கடல் வழி கண்டுபிடிப்பிற்கான கப்பல் பயணத்திற்குப் பிறகு முக்கியத்துவம் பெற்றது. தங்களின் வணிகத்தலங்களை அமைத்த நாடுகளிலும், தங்களின் ஆட்சிக்குட்படுத்தப்பட்ட நாடுகளிலும் ஐரோப்பியர்கள் இதனை மேற்கொண்டனர். இந்தியாவின் பன்முகத்தன்மையையும் பழமையையும் கண்ட ஆங்கிலேயர்கள் அகழாய்வில் ஆர்வம் காட்டினர். அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்பவர் இந்திய அகழாய்வில் முன்னோடியாக விளங்கினார். ஆங்கிலேயர்களைப் போலவே இந்தியாவில் கால் பதித்த பிரெஞ்சுக்காரர்கள், போர்த்துகீசியர்கள் உள்ளிட்டோரும் ஆய்வுகளை மேற்கொண்டனர். பல கல்வெட்டுகளைக் கண்டுபிடித்தனர். அதில் இருந்த பிராமி எழுத்துகளைப் படித்தறிந்தனர். தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு உள்ளிட்ட பகுதிகள் அகழாய்வுக்குட்படுத்தப்பட்டன. பல அரிய செய்திகள் கிடைத்தன. தேடல்தான், இத்தகைய ஆய்வுகளுக்கு அடிப்படை. அந்த வகையில், சிதம்பரம் நடராசர் கோவிலில் சமஸ்கிருதம் முதன்மை பெற்று, தமிழ்ப் பதிகங்கள் கறையான்களுக்கு இரையாகிக்கொண்டிருந்த நிலையில், ஓலைச்சுவடிகள் நிரம்பியிருந்த கோவில் அறையிலிருந்து தேவாரத் திருப்பதிகங்களை மீட்ட ராஜராஜசோழனின் துணிச்சலான செயலும் அகழாய்வுக்கு இணையானதுதான்.