ஜி. அர்ஜுனன், செங்கல்பட்டு
அரசு ஊழியர்கள் பழைய பென்சன் தரா விட்டால் முதல்வரை எதிர்க்கட்சித் தலைவர் ஆக்கிவிடுவோம் என்கிறார்களே?
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பழைய பென்ஷன் தருவதாக தி.மு.க. சார்பில் உத்தரவாத மளிக்கப்பட்டது. அது நிறைவேறாத பட்சத்தில், அதுகுறித்து கேள்விகேட்கும் உரிமை அரசு ஊழியர்களுக்கு இருக்கிறது. இந்த தேர்தலில் பழைய பென்ஷன் முறையை நடைமுறைக்குக் கொண்டுவருவதாக வாக்குறுதியளிக்கும் வசதி அ.தி.மு.க., த.வெ.க. கட்சிகளுக்கு இருக்கிறது. அரசு ஊழியர்கள் வீசும் இந்த பாலை, ஸ்டாலின் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கல்லிடை சிவா, கல்லிடைக்குறிச்சி
அமெரிக்கா ஒரு சென்ட் நாணயம் தயாரிப்பதை நிறுத்தியுள்ளதே?
கிட்டத்தட்ட 18 சென்ட் என்பது இந்தியாவின் ஒரு ரூபாய்க்குச் சமம். அதாவது 1 சென்ட் என்பது ஐந்து பைசாவுக்கும் சற்று அதிக மதிப்புடையது. இந்தியாவிலேயே ஐந்து பைசா, இருபத்தைந்து பைசா, ஐம்பது பைசாவை தயாரிப்பதை நிறுத்தும் போது அமெரிக்கா 1 சென்ட் தயாரிப்பதை நிறுத்தக்கூடாதா என்ன?
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
வடமாநில இளைஞர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்று தொழில் தொடங்கவேண்டும் என தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளாரே...?
நல்ல விஷயம்தான். அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களில் தொழில் தொடங்குமளவு வசதியிருந்தால் இங்கே ஏன் அடிமட்ட வேலைகளைப் பார்க்க வரப்போகிறார் கள். மாநில அரசுடன் மல்லுக்கட்டும் நேரத்தில், டபுள் என்ஜின் இயக்கத்திலிருக்கும் பா.ஜ.க. ஆளும் வடமாநில அரசுகளுடன் கலந்துபேசி, இப்படி வேலைகளுக்குச் செல்லும் இளைஞர்களுக்கு தாராள கடன்வசதி அளித்து தொழில் தொடங்க ஊக்குவிப்பதற்கான வசதிகளைச் செய்ய வேண்டும். இதனால் வடமாநிலங்களும் முன்னேறும். தமிழ்நாடும் தொந்தரவில்லாமல் இருக்கும்.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்
அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள 7 லட்சம் இந்தியர்களுக்கு இந்தியாவில் மறுவாழ்வு அளிக்கப்படுமா?
"வாழ நினைத்தால் வாழலாம்... வழியா இல்லை பூமியில்'’என்பது சினிமா பாட்டு. இங்கிருந்து அமெரிக்கா வுக்கு சட்டவிரோதமாகச் செல்வதற்கு அவர்களில் பலரும் 50 லட்சம் முதல் 75 லட்சம் வரை செலவழித்துள்ளார்கள். அமெரிக்காவுக்குள் திருட்டுத்தனமாக நுழைவதற்கான சிரமம் கற்பனையே செய்துபார்க்க முடியாதது. அமெரிக்கா குறித்த பேராசைக் கனவே அவர்களை இந்த இக்கட்டுக்கு ஆளாக்கியுள்ளது. இந்தத் தொகை இருந்தால் இந்தியாவில் பலர் நிம்மதியாக வாழ்க்கையை நடத்திவிடமுடியும். நடந்ததை மாற்றிவிடமுடியாது. இந்தியாவில்தான் தங்கள் முன்னேற்றம் என நினைத்து உழைத்தால், இந்தியாவும் உயரும். அவர்களும் முன்னேறுவார்கள். அதற்கான அடிப்படையான ஆதரவை வழங்கவேண்டியது அரசின் கடமை.
வி.பாலசுப்ரமணியன், மன்னார்குடி
சில தமிழ் தொலைக்காட்சி ஊடகங்கள் மத்திய அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டத் தயங்குவதைப்போல தெரிகின்றதே?
உங்கள் கேள்வியில் "சில' என்பதை "பெரும்பாலான' என்று மாற்றிக்கொண்டு, தமிழ் என்ற வார்த்தையை நீக்கிவிட்டால் உங்கள் கேள்வி மிகச் சரி!
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
20% வாக்குகளை 2026 தேர்தலில் த.வெ.க. கைப்பற்றும் என்கிறாரே பிரசாந்த் கிஷோர்?
புதியதொரு கட்சியுடன் சந்திப்பு அமைகிறது. அருமையான ஒரு வியாபார வாய்ப்பு. வியாபாரம் தகையவேண்டுமென்றால், "நீங்கள் என்னமாய் தொழில் செய்கிறீர்கள், உங்களின் திறமை சந்தையில் எவரிடமும் கிடையாது. மார்க்கெட்டில் அடுத்து நீங்கள்தான் நம்பர் 1' என்று கொஞ்சம் சொக்குப்பொடி போடத்தான் வேண்டும். பிரசாந்த் கிஷோர் 20% வாக்குகள் என்று சொல்லியிருக்கிறார். வியாபாரம் புக்கானால் 250-லிருந்து 300 கோடி ஆதாயம் இருக்கிறதல்லவா!
வண்ணை கணேசன், கொளத்தூர்
பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கியது தொடர்பாக பா.ஜ.க. பொய்யான பட்டி யலை வெளியிட்டிருப்பதாக தமிழக அரசு விளக்கமளித் திருக்கிறதே?
நெல்லை சென்ற தமிழக முதல்வர் ஸ்டா லின், “மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் இப்போ பேமஸ்” என பட்ஜெட்டில் சரிவர நிதியொதுக்காத மத்திய அரசுக்கு ஆப்பு செருகினார். இதையடுத்து பா.ஜ.க. ஐ.டி. விங் தமிழக அரசுக்கு மத்திய அரசு 14,200 கோடி அளவுக்கு நிதியொதுக் கியதாக ஒரு பட்டியலை சமூக வலைத் தளங்களில் பரவவிட்டது. அதற்கு தமிழக அரசின் சரிபார்ப்புக் குழு, உலக வங்கி, வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து தமிழக அரசு கடன்வாங்கி செயல்படுத்தும் திட்டங்களை பா.ஜ.க., மத்திய அரசின் திட்டங்களாகக் காட்டி ஏய்க்கப்பார்க்கிறது என விளக்கமளித்துள்ளது.