கல்லிடை சிவா, கல்லிடைக்குறிச்சி.

இந்த நாட்டில் நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்று கேட்கிறாரே கபில்சிபல்...?

உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைப் பார்த்தால் மசூதிகளை உடைக்க கிளம்பிக்கொண்டிருக்கிறோம் போலிருக்கிறது.

ஜி. அர்ஜுனன், செங்கல்பட்டு

மக்களவை முடக்கம் எப்போது முடிவுக்கு வரும்?

எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு ஆளும் கட்சி முறையாகப் பதிலளித்தால் ஏன் மக்களவை முடங்கப்போகிறது?

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

"தேர்தல் ஆணையம் மோடியின் பங்களா வெளியே அமர்ந்திருக்கும் நாய்போல செயல்படுகிறது' என்ற காங்கிரஸ் எம்.எல்.சி. ஜக்தாப் கூறியிருப்பது?

கொஞ்சம் கடுமையான வார்த்தைப் பிரயோகம்தான். மகாராஷ்டிராவின் டால்னர் கிராமத்தில் மொத்த வாக்காளர்கள் 396 பேர். அதில் பதிவான வாக்குகள் 312. ஆனால் உத்தவ் தாக்கரே சிவசேனா 194, ஷிண்டே சிவசேனா 326, சுயேட்சை வேட்பாளர் ஹர்ஷவர்தன் ஜாதவ் 104 வாக்குகள் என்று வாக்கு எண்ணிக்கை யின்போது அறிவிக்கப்பட்டிருக்கிறதாம். இதன் மொத்த எண்ணிக்கை 624. பதிவான வாக்குகளைவிட, வேட்பாளர்கள் இரு மடங்கு வாக்குகள் பெற்றதாக சர்ச்சை கிளம்பும்போது வேறெப்படி ஆத்திரம் வெளிப்படும்?

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

எனக்கு அரசியலில் பயங்கர ஈடுபாடு உண்டு. நானும் ஒருநாள் கட்சி ஆரம்பிப்பேன் என்கிறாரே பார்த்திபன்?

அப்ப சினிமா என்கிற பழைய பாதையிலிருந்து, அரசியல் என்கிற புதிய பாதைக்கு வரப்போகிறார். வரட்டும் பார்க்கலாம்!

mm

எச்.மோகன், மன்னார்குடி

மாநாட்டிற்கு இடமளித்த விவசாயிகளுக்கு நடிகர் விஜய் விருந்தளித்தது சினிமா ஷூட்டிங்கா என்று தமிழிசை சௌந்தர்ராஜன் கேட்டிருக் கிறாரே...?

அரசியல்வாதிகள் தலித்துகளின் வீட்டில் நுழைந்து விருந்துண்டும், கிழவிகளை கட்டியணைத் தும் புகைப்படம் போடும்போது, சினிமாவிலிருந்து வந்த நடிகர் விஜய் மட்டும் விவசாயிகளுக்கு விருந்தளித்து செய்தி வெளியிடக்கூடாது என்று சட்டமிருக்கிறதா என்ன!

ப. தனசேகர், சங்கரன்கோவில்

சூடானில் என்னதான் நடக்கிறது?

2019-ல் சூடானில் ஒரு புரட்சிவந்து, அதன் சர்வாதிகாரி பஷீரின் ஆட்சியைக் கவிழ்த்தது. ஆனால் அது முழுமையாக நடக்கவில்லை. இப்போதும் புரட்சிப் படைகளுக்கும் பஷீரின் படைகளுக்கும் போர் தொடர்கிறது. இரு படைகளின் கொடுமை தாங்காமல் 82 லட்சம் சூடான் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 22,000 பேர் இறந்துவிட்டனர். ஒரு தரப்புக்கு ரஷ்யா ஆதரவு. இன்னொரு தரப்புக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு. உலகிலேயே மிக அதிகளவு தங்கம் அகழ்ந்தெடுக்கும் நாடு சூடான். இந்த தங்கம் அகழ்ந்தெடுக்கும் பணம் ஆயுதம் வாங்குவதிலேயே செலவழிந்துவிடுகிறது. பஷீரின் படைகள் அண்டை நாட்டு சர்வாதிகார நாடுகளின் ஆதரவுடன் சொந்த நாட்டுப் பெண்களையே கற்பழிப்பதாகப் புகார். படைகளின் பாலியல் கொடுமை தாளாமல் சமீபத்தில் 130 பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக செய்தி.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

மகாராஷ்டிராவில் புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்க ஏன் இத்தனை தாமதம்?

முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும் என்பார் கள். உத்தவ் தாக்கரே என்னும் முள்ளை, அதே கட்சியைச் சேர்ந்த ஷிண்டேவை வளர்த்தெடுத்து ஆட்சியிலிருந்து சிவசேனாவை அகற்றினார்கள். புதிதாக உருவாக்கிய கூட்டணியின் மூலம் ஆட்சியமைத்தபோது முதல்வர் பதவியையும் அவருக்குத் தாரைவார்த்தார்கள். முதல்வர் நாற்காலியின் ருசி கண்ட பூனையாகிவிட்டார் ஷிண்டே. பெரும்பான்மை இடங்கள் பா.ஜ.க. வசம்தான் என்பது தெரிந்தாலும், முடிந்தவரை பா.ஜ.க.விடம் எவ்வளவு பேரம் பேசமுடியும் என்பதை முயற்சி செய்து கொண்டிருக்கிறார். என்ன இருந்தாலும் ஷிண்டேயும் இன்னொரு முள்தானே! விரலிலோ, பாதத்திலோ தைக்காதவரைக்கும் ஷிண்டேவுக்கு ஆபத்தில்லை. தைக்கும்பட்சத்தில், ஷிண்டேவை அகற்ற இன்னொரு முள்ளை ஆயத்தம் செய்வார்கள்.

மா.கார்த்திகேயன், பெருங்களத்தூர்

புஷ்பாவில் சமந்தாவின் ஆட்டம் அழகா? லீலாவின் ஆட்டம் அழகா?

இரண்டுமே அழகுதான். இருந்தாலும் சமந்தாவின் பாட்டு ஹிட்டானதாலும் "புஷ்பா-2' படப் பாடல் இன்னும் ரீச்சாகாததாலும் சமந்தாவே இப்போதைக்கு முன்னிலை வகிக்கிறார். ஆனால் தனிப்பட்ட விதத்தில், சமந்தாவின் டான்ஸைவிட, லீலாவின் ஆட்டம்தான் டாப்!