அந்த நாள் அப்படி விடியுமென்று கோவை பனைமரத்தூர் மக்கள் யாரும் நினைக்கவேயில்லை. ஜூன் 7. ஞாயிற்றுக் கிழமை, மாரியம்மன் கோவில் கன்னியாத்தாள் மேடை அருகே ஒரு இளைஞன் ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.
அதைக் கண்ட நாம்... உடனே செல்வபுரம் போலீசாரை தொடர்பு கொண்டு சொன்னோம். விரைந்து வந்த போலீசார்... அந்த இளைஞன் உடலைக் கைப்பற்றி பார்த்த போது... அவன் பெயர் ரமேஷ்.. தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவன் என்பது தெரிந்தது.
தர்மபுரிகாரருக்கு கோவையில் என்ன வேலை? கார் டிரைவராகவும், கட்டிடத் தொழிலாளராகவும் கோவையில் கவுண்டம்பாளையத்தில் தங்கி வேலை செய்வது தெரிய வந்தது. ஆனால் அவனை யார் கொன்று இருப்பார்கள்..? எதற்காக இந்த உயிர்ப்பலி என்கிற கேள்விகள் எழுந்த போது... அவன் திருநங்கைகளுடன் சுற்றுபவன். பனைமரத்தூரில் தங்கி இருக்கும் ரைசா, மஞ்சு என்கிற இரண்டு திருநங்கைகளுடன் தொடர்பில் இருந்து இருக்கிறான்...அவர்களைப் பார்ப்பதற்காகவே இந்த ரமேஷ் வந்திருக்கக் கூடும் என்கிற தகவலை நக்கீரன் கண்டறிந்து போலீசிடம் சொன்னது. உடனே திருநங்கைகள் இருவரையும் விசாரித்தனர் போலீசார்.
திருநங்கை ரைசா, ""ஆமாம். அவன் என்னையும், மஞ்சுவையும் பார்க்கத்தான் வந்தான். அவனுடன் இருவருக்கும் ஏற்கனவே நெருக்கமான பழக்கம் உண்டு. அதில் அவன் என்னை கல்யாணம் செய்தும் கொண்டான். ஆனால் மஞ்சு என்னிடம் இருந்து அவனைப் பறித்துக் கொண்டாள். அதனால் ரமேஷ் என்னை தவிர்ப்பதை வாடிக்கையாகவே வைத்துவிட்டு, மஞ்சுவுடன் மட்டுமே இருக்க ஆரம்பித்து விட்டான். நான் அவனுடன் சண்டையிட்டேன். முத்தண்ணன் குளத்தருகே அவனை வரவைத்து சண்டையிட்ட போது மஞ்சுவுடன் சேர்ந்து அவன் என்னிடம் சண்டையிட்டான். அதற்குப் பிறகு பனைமரத்தூர் சுடுகாட்டுக்குள் மூன்று பேரும் சண்டை யிட்டோம். ஆனால் என்னை தவிர்ப்பதை ரமேஷ் தொடரவே, பனைமரத்தூர் பொதுக் கழிப்பிடம் அருகே மூன்று பேருக்குள்ளும் மோதல் முற்றி விட்டது.
அதற்குப் பிறகு தான் கடந்த சனிக்கிழமை இரவு... ரமேஷ் என்னைப் பார்க்க வருவதாக சொன்னான். குடிப்பதற்கு சரக்கு வாங்கி வருகிறேன் என்றும் சொன்னான். சொன்னபடியே சைக்கிளில் கன்னியாத்தா கோவில் திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்டான். இரவு 11.30 மணி இருக்கும். நானும், மஞ்சுவும் அங்கே போய் உட்கார்ந்தோம்.
சரக்கு ஊற்றி தன் அன்பை சொன்னான். இருவருமே எனக்கு ஒன்றுதான் என்றான். நாம் மட்டுமே அவனுடன் ஒன்றாய் இருக்க வேண்டும் என்றேன். இல்லையென்றால் கொலை செய்யவும் தயங்க மாட்டேன் என்று சொன்னேன்.
என்னைய நீ கொன்னுருவியா? குரைக்கிற நாய் கடிக்காது தெரியுமா? என்றான். எனக்கு கோபம் அதிகம் ஆக ஆக... ரமேஷ் போதையின் உச்சத்திற்கு போயிருந்தான். மஞ்சுவோ...எனக்கு மட்டுமே நீ வேண்டும்... என்று அவளும் அவனுடன் சண்டையிட்டாள். கடைசியில் இருவருமே வேண்டாம் என்று சொல்லி விட்டான்.
இரண்டு குரைக்கிற நாய்களும் கடிக்க ஆயத்தமானது. கையில் மஞ்சு கத்தி வைத்து இருந்தாள். எங்களுக்கே தெரியாது. கத்தியை வாங்கி அவன் இடுப்பில் செருகி னேன். அவன் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க மஞ்சு வாயை பொத்தி விட்டாள். என் துணைக்கு மஞ்சுவும் சேர்ந்து கொடுத்த எங்கள் தாக்குதலை எதிர்பார்க்காத அவன் ரத்தம் வெளியேற கன்னியாத்தாள் கோவில் திண்ணையில் இருந்து கீழே விழுந்தான். ரெண்டு பேரின் கோபமும் ஒன்று சேர அவன் உயிரை விட்டான். அதற்கு பிறகுதான் நாங்கள் செய்த தவறை உணர, பயம் தொற்றிக் கொண்டது.அப்படியே தலையை தூங்குவதைப் போல வைத்து விட்டு ஓடி வந்து விட்டோம்'' என ரைசா சொல்லியிருக்கிறார்.
அனு என்கிற திருநங்கையையும் பிடித்த போலீசார் தீவிரமாக விசாரித்துள்ளனர். ஊரில் இருக்கும் வாலிப பையன்கள் 30க்கும் மேற்பட்டோரை விசாரணைக்கு தூக்கி சென்று இருக்கிறார்கள். எதற்காக வாலிப பசங்களை தூக்கிக் கொண்டு போனீர்கள்? என... காவல்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். அவரோ, ""இந்த ரைசா, மஞ்சு,அனு மூன்று திருநங்கைகளும் சொல்வதில் பொய் இருக்கிறது. என்ன செய்தாலும் அவர்களிடமிருந்து உண்மை வெளியே வரவே மாட்டேங் கிறது. அந்த ரமேஷ் கொலையான இடத் தில் ஊரில் பல பசங்கள் கஞ்சா குடித்துக் கொண்டு நள்ளிரவு வரை அங்கேயே கிடப்பார்களாம். அவர்களும் இந்த திருநங்கைகளுடன் பழக்கமாய் இருந்திருக்கிறார்கள். அதனால் இந்த கொலையை இந்த திருநங்கைகள் மட்டுமே செய்திருக்க வாய்ப்பில்லை. கவின் என்கிறவன் இந்த கொலையில் முக்கியமான ஆளாய் இருந்திருக்கிறான் என எங்களுக்கு தெரிய வந்ததாலயே அந்த கோவில் திண்ணையில் உட்காரும் பசங்களையும், ஊரில் சந்தேகப்படும் நபர்களையும் தூக்கி வந்து விசாரித்துக் கொண்டு இருக்கிறோம்'' என்கிறார் கோபமாய்.
கொலையான ரமேஷ்... கவின் என்கிற ஒருவனுடன் ஓரினச் சேர்க்கை கொண்டு இருந்தான் என்கிறது போலீஸ். அதற்காகத்தான் 2.53 மணிக்கு கன்னியாத்தா கோவிலுக்கு வந்திருக்கிறான். அன்று அவன் அந்த உறவுக்கு ஒத்து வரவில்லை. அதனால் சண்டையிட்டு கத்தியால் ரமேசை குத்தி கொன்று விட்டான் கவின். பக்கத்தில் உள்ள சி.சி.டி.வி கேமராவை வைத்துதான் கண்டு பிடித்தோம் என வழக்கை முடித்து விட்டிருக்கிறது போலீஸ். சி.சி.டி.வி கேமராவில் கவின்தான் கொலை செஞ்சு இருக்கான்னு உறுதியாகியிருந்தால், அதன்பிறகு எதற்காக 20 வயசுல இருந்து 70 வயசு வரைக்கும் உள்ளவங்களை மொத்தமாகத் தூக்கிட்டு போய் விசாரணைங்கிற பேரில் அடிச்சாங்க எனக் கேட்கி றார்கள் சமூக ஆர்வலர்கள்.
சம்பந்தப்பட்ட திருநங்கைகளுடன் இருந்த தொடர்பில்தான் அந்த ரமேஷ் இந்த ஊருக்கு வந்திருக்கிறான். திருநங்கைகளுடன் கும்மாளம் அடித்துக் கொண்டிருந்த அவனிடம், ""நான் தாண்டா மஞ்சுவை வச்சு இருக்கேன். நீ இங்கே வந்தா கஞ்சாவை விக்க மட்டும் வா...'' என சொல்லியிருக்கிறான் கவின். அதனால் ரெண்டு பேருக்குள்ளும் சண்டை ஆகித்தான் ரமேஷை கத்தியால் குத்தி குதறி விட்டான் என்கிறார்கள் ஊர் மக்கள்.
சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்ட ஐஸ் என்கிற திருநங்கை நிறைய இளைஞர்களை வசியப் படுத்தும் டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டி ருக்கிறார்கள். மஞ்சு, அனுவும் இந்த மாதிரி வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்கள். திருநங்கைகளுக்காக தொழிலதிபர்கள் பலர் போலீசிடம் பேசி, விடுவிக்க வைத்துள்ளனர். மஞ்சுவின் நெருங்கிய தோழியான மாசிலா கடைசிவரை விசாரிக்கப்படவில்லையாம்.
பனைமரத்தூர் என்கிற அந்த ஊர் இப்போது தான் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தியது போல் காட்சியளிக்கிறது. யார் இந்த கொலைக்கு உதவியாக இருந்தார்கள்..? எனத் தெரியாமல் பசங்களின் பெற்றோர் செல்வபுரம் காவல் நிலையத்தில் இரவெல்லாம் காத்து கிடக்கிறார்கள். ஆனாலும் இந்த திருநங்கைகளுடன் ரமேஷ் என்கிற அவன் பனைமரத்தூர் முழுக்க நடந்து கொண்டிருந்ததை ஊர் மக்களோடு இரவும் பார்த்து இருக்கிறது.
-அருள்குமார்
______________
திருநங்கைகளின் ரகசிய அறை!
முத்தண்ணன் குளம் அருகே கொலையாகிப் போன ரமேஷ், ரைஸா, மஞ்சு சண்டையிட்ட இடத்தில்தான் திருநங்கைகள் சின்ன சின்ன பசங்களை எல்லாம் ரகசியமாகக் கூட்டிக் கொண்டு போகிறார்கள் என நமக்குத் தெரிய வர அது எந்த இடம் என நாம் களத்தில் இறங்கினோம்.
அது ஒரு மின்மயானம். அந்த மின் மயான அறை கட்டப்பட்டு கிடப்பில் போடப் பட்டு விட்டது. அந்த அறையில் உள்ள ஜன்னலை உடைத்துதான் காமக் களியாட்டங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறிந்து நாம் அந்த ஜன்னல் வழியே குதித்தோம். அந்த இடம் பார்ப்பதற்கு யாருக்கும் பயத்தை ஏற்படுத்தி விடும். உள்ளே போர்வைகள், உள்ளாடைகள் கிடந்தன. அங்கேதான் இந்த திருநங்கை டீம், 1000 ரூபாய்க்கு பசங்களை அழைத்து வருவார்களாம். அதனை நக்கீரன்தான் முதன்முதலில் கண்டுபிடித்துள்ளது. இந்த விவரத்தை எடுத்துக் கூறியும், போலீசார் எதுவுமே தெரியாது என கை விரித்து நிற்கிறார்கள். திருநங்கைகளின் மார்க்கெட்டில் 1000 ரூபாய் என்றால், போலீசின் பாக்கெட்டில் எவ்வளவு என்கிறார்கள் கோவைவாசிகள்.