தமிழகத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்களை ஆணவப் படுகொலை செய்வது தொடர்கதையாகவே இருக்கிறது. அப்படி நடப் பதற்கான காரணங்களில், காவல்துறைக்கும் குறிப்பிடத் தக்க பங்கிருக்கிறது. சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள், பாதுகாப்பு கோரி வரும்போது அவர்களுக்கு சரியான பாதுகாப்பை வழங்கியிருந்தாலே நிறைய ஆணவக் கொலைகளைத் தடுத்திருக்க முடியும். அப்படியானதொரு இக்கட்டான சூழல் திருவள்ளூர் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு நேர்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், வீரங்கிவேடு கிராமத்தில், பாலாஜி நகர் முதல் தெருவில் வசித்துவரும் கோகுல்ராஜுக்கு, அதே பகுதியில் மூன்றாவது தெருவில் வசித்துவரும் நந்தினி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி, நான்கு ஆண்டு காலமாகக் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், வீட்டில் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்ற புரிதலோடு, நாமே திருமணம் செய்துகொண்டு, அதன்பின்னர் வீட்டில் தெரிவித்தால் ஒப்புக்கொள்வார்கள் என்று முடிவெடுத்து, கடந்த 2019-ம் ஆண்டு, மார்ச் 24-ம் தேதி, ஊத்துக்கோட்டை நாட்டாச்சியம்மன் கோவிலில் திருமணம் செய்துக்கொண்டு, 27-ம் தேதி, ஊத்துக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.
இருவரும் வெளியில் கணவன் மனைவியாக வும், அவரவர் வீட்டிற்குள், திருமணமாகாத மகன், மகளாக நடித்தபடி வாழ்ந்து வந்துள்ளனர். அதன்பிறகு நந்தினி வீட்டில் நந்தினிக்கு திருமணத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இருவரும் என்ன செய்ய லாம் என்று பேசிக்கொள்ளும்போது, வீட்டில் சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்து, இருவரும் அவரது வீட்டில் சொல்லியுள்ளனர். இந்த நிலையில், நந்தினியின் வீட்டில் ஒப்புக்கொள்ளாத நிலையில்... பிரச்சினை வெடித்துள்ளது.
இதன்பிறகு நந்தினி தன்னுடைய வீட்டை விட்டு கணவனின் வீட்டிற்கு வந்து, இரண்டு மாதம் கோகுல்ராஜ் வீட்டில் இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர். அதன்பிறகு இரு வீட்டுத் தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி, மீண்டும் சொந்தபந்தம் அனைவரையும் வரவழைத்து ரிசப்ஷன் நடத்தி நாங்களே நந்தினியை அனுப்பி வைக்கிறோம் என்று கூறி அழைத்துத் சென்றுள்ளனர்.
அந்த நாளிலிருந்து நந்தினியின் முகத்தைக் கூட பார்க்கவும் விடாமல் வைத்திருந்தனர். மனமுடைந்த கோகுல்ராஜ், நந்தினியின் வீட்டிற்குச் சென்று கேட்டுள்ளார். அதற்கு நந்தினியின் தந்தை, "உனக்கும் என்னுடைய மகளுக்கும் எந்த தொடர் பும் இல்லை. என் மகளுக்கு ஒழுங்கு மரியாதையாக டைவர்ஸ் கொடுத்துவிடு. இல்லையென்றால் நீயும் உன் குடும்பமும் இருக்காது'' என்றுகூறி மிரட்டி யிருக்கிறார். ஆனால் அவரது மிரட்டலுக்கு அஞ்சா மல், நந்தினியைத் தொடர்புகொள்ளும் முயற்சியில் கோகுல்ராஜ் ஈடுபட்டுள் ளார்.
இதனைத் தொ டர்ந்து அடுத்துகட்டமாக, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் நந்தினியின் அண்ணன் ஜெகன் மூலமாக ரவுடிகளையும், போலீசையும் வைத்து மிரட்டியிருக்கிறார். போலீஸ் தரப்பினர் மூலம், கோகுல்ராஜை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்து மிரட்டி, உன்னுடன் வாழ்வதற்கு உன் மனைவிக்கு விருப்பமில்லை என்றும், அவளுடன் இருந்த புகைப்படம் எதையுமே முகநூல் மற்றும் ஆன்லைனில் போடக்கூடாது என்றும் மிரட்டி எழுதி வாங்கியுள்ளனர். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், "என்னுடைய மனைவிக்கு எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். என்னையும், என்னுடைய மனைவியையும் காப்பாற்றுங்கள்'' என்று மனுவைக் கொடுத்துள்ளார் கோகுல்ராஜ்.
இது தொடர்பாகப் பேசிய கோகுல்ராஜ், "என்னுடைய மனைவியை நிச்சயம் மிரட்டி எங்கேயோ மறைத்து வைத்துள்ளனர். நான் கேட்பதெல்லாம், என் மனைவி என்னிடம் தனியாக அரை மணிநேரம் பேசியதற்குப் பிறகு, காவல்துறை யின் முன்பாக என் மனைவி, "என்னுடன் வாழ விருப்பம் இல்லை' என்றால், நானே அப்போதே டைவர்ஸ் செய்வதற்கு சம்மதமென்று எழுதிக் கொடுத்துவிடுகிறேன். ஆனால் அதை ஏன் செய்ய மறுக்கிறார்கள்? அப்படியென்றால் இவர்கள்தானே மிரட்டி கட்டாயப்படுத்தி வைத்திருக்கிறார்கள்? இதற்கு காவல்துறையும் உடந்தையாக இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் இதை உடனடியாக மாவட்ட எஸ்.பி.க்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப் போவ தாகச் சொன்னார். இன்னும் எதுவும் நடக்கவில்லை, அதேபோல என்னைக் கொலை செய்யவும் திட்டம் தீட்டி வருகிறார்கள். எனக்கும் பாதுகாப்பு வேண்டும்'' என்றார்.
இது குறித்து திருவள்ளுர் எஸ்.பி. வருண் குமாரிடம் கேட்டபோது, "இருவரும் மேஜர் என்ற நிலையில் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது எங்களின் கடமை. கோகுல்ராஜ் மற்றும் நந்தினியை காவல்துறை விசாரணை செய்து, அவர்களின் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்'' என்றார். இதுபற்றி நந்தினியின் அண்ணன் ஜெகனிடம் தொடர்பு கொண்டபோது, பதிலளிக்க மறுத்துவிட்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் சென்ற மாதத்தில், கௌதமன் அமுல் -இருவரும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டதால், ஆணவக் கொலை நடந்துள்ளது. சாதி மறுப்புத் திருமணத்தைச் செய்துகொண்டவர்களின் பாதுகாப்புக்கு காவல்துறையும் அரசாங்கமும் துணை நிற்கவேண்டியது, அரசியல் சாசனத்தின் அடிப்படையிலான கடமை.