காதல் விவகாரத்தால் இருவருக்குள் ஏற்பட்ட பிரச்சனையில், தன் நண்பனுக்கு ஆதரவாக சென்ற கல்லூரி மாணவனை கார் ஏற்றிக் கொலை செய்த விவகாரம் சென்னையையே பரபரப்பாக்கியுள்ளது.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் நித்தின்சாய் மற்றும் அவருடைய நண்பன் அபிஷேக். கடந்த 28ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில், நண்பர்கள் இருவரும் திருமங்கலம் பள்ளி சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, சொகுசு கார் ஒன்று வேகமாக வந்து மோதியதில் பலத்த அடிபட்டு, சம்பவ இடத்திலே நித்தின் சாய் பலியானார். அபிஷேக் பலத்த காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதுசம்பந்தமாக முதற்கட்டமாக திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்து வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் விபத்தில் இறந்த கல்லூரி மாணவனின் உறவினர்கள் மற்றும் நண்பர்களோ, நடந்தது விபத்து அல்ல, திட்டமிட்டு காரை ஏற்றிக் கொலை செய்திருக்கிறார்கள் என்று தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதனையடுத்து, விபத்து நடந்த பகுதியிலிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து ஆய்வு செய்தபோது, ரேஞ்ச்ரோவர் சொகுசு கார், இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்து மோதி யதில், நித்தின் சாய் தலையிலும் மார்பிலும் பலத்த அடிபட்டு உயிரிழப்பது அதில் பதிவாகியிருந்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/02/dmkgrandson1-2025-08-02-06-52-52.jpg)
இச்சம்பவத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவனின் நண்பர்கள் மற்றும் பலரிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அதில் பெண் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் கொலை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. பிரணவ் என்ற கல்லூரி மாணவன் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளான். அதே பெண் ணை காதலிப்பதாகக்கூறி வெங்கடேசன் என்பவன் தொடர்ச்சியாக டார்ச்சர் செய்துவந்திருக்கிறான். வெங்கடேசனின் டார்ச்சர் குறித்து தனது காதலனான பிரணவிடம் சொல்ல, ஆத்திரமடைந்த பிரணவோ, வெங்கடேசனை போனில் தொடர்புகொண்டிருக்கிறான். பிரணவ் தொடர்புகொள்ளும் போது, வெங்கடேசனோ, அண்ணா நகரிலுள்ள கோராஃபுட் உணவகத்தில் தன்னுடைய நண்பன் மோகனின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடும் பார்ட்டியில் இருந்துள்ளான்.
அந்த பார்ட்டியில் நித்தின்சாய், கிஷோர், மோகன் எனப் பல நண்பர் களும் உடனிருந்துள்ளனர். அந்த சூழ்நிலையில் வெங்கடேசன் மட்டும் தனியாக சென்று, செல்போனில் ஏதோ ஆத்திரமாக பேசிக்கொண்டு இருப்பதைப் பார்த்த உடனிருந்த நண்பர்கள், வெங்கடேசனிடம் அதுகுறித்து விசாரித் திருக்கிறார்கள். வெங்கடேசனோ, ஒன்றுமில்லை எனக் கூறிவிட்டு, மீண்டும் பிறந்த நாள் பார்ட்டியில் கலந்துகொண்டிருக்கிறான். ஆனால் திரும்பவும் வெங்கடேசனுக்கு பிரணவிடமிருந்து போன் வந்திருக்கிறது. வெங்கடேசனை பிரணவ் தகாத வார்த்தை களால் திட்டிப் பேசியபடியே, "நீ முடிந்தால் நான் அனுப்பும் லொக்கேஷனுக்கு வாடா! அப்போ பார்ப்போம்'' எனப் பேசி மிரட்டியுள்ளான்.
ஆத்திரமடைந்த வெங்கடேசனும் அவரது நண்பர்களும் பிறந்த நாள் பார்ட்டியை முடித்துக்கொண்டு, பிரணவ் குறிப்பிட்ட அந்த இடத்திற்கு சென்றுள்ளனர். அதன்பிறகு பிரணவ், வெங்கடேசன் ஆகிய இருதரப்பு நண்பர்களும் மோதிக்கொண்டதில், பிரணவ் சார்பாக வந்த தி.மு.க. செயற்குழு உறுப்பினரும், மண்டலக்குழு தலைவருமான கே.கே.நகர் தனசேகரனின் பேரன் சந்துரு உள்ளிட்டோர், சொகுசு காரை வைத்து வெங்கடேசன் தரப்பில் வந்த கல்லூரி மாணவர்கள் மீது ஆத்திரத்தில் மோதியது தெரியவந்துள்ளது. நித்தின்சாயின் தந்தை சுரேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் சட்ட ஒழுங்கு காவல் நிலைய போலீசார் விசா ரணை நடத்தியதில், இந்த விவகாரம் முழுக்க வெளி வந்ததும், இதனை கொலை வழக்காகப் பதிவு செய்து, இதில் தொடர்புடைய பிரணவ் மற்றும் சுதன் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், சொகுசு காரை வைத்து மோதிய சந்துரு உள்ளிட்ட சிலர் மீது 109(1) கொலை செய்யும் நோக்கத்துடன் செயல்படுதல், 296 (க்ஷ) ஆபாசமாக பேசுதல், 103(1) கொலை செய்தல், 353(1) மிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/02/dmkgrandson2-2025-08-02-06-53-08.jpg)
நித்தின்சாயின் தந்தை சுரேஷ் கொடுத்த புகாரில், சம்பவம் நடந்த இரவில், நித்தின்சாய் அவரது நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றனர். அப்போது நித்தின்சாயின் நண்பர் வெங்கடேசனையும், அவர்களது நண்பர்களையும், செல்போனில் தொடர்புகொண்ட சந்துரு, பிரணவ் உள்ளிட்ட நபர்கள் ஆபாசமாகப் பேசி சண்டைக்கு இழுத்துள்ளனர். உடனே, நேருக்கு நேர் சண்டையிடுவதற்காக தனியார் பள்ளி அருகே 2 கும்பலை சேர்ந்தவர்களும் சந்தித்து, இருதரப்பும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சொகுசு காரில் வந்த சந்துரு, பிரணவ், சுதன் உள்ளிட்ட ஐந்து பேர், காரிலிருந்துகொண்டே நித்தின்சாய், வெங்கடேசன் மற்றும் அவர்களின் நண்பர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சந்துரு தரப்பினர், சொகுசு காரை வைத்து வேகமாக விரட்டி வெங்க டேசன் என்பவரை மோதிச் சாய்க்க முயன்றுள்ளனர். அதன் பின்பு இதில் யாரேனும் ஒருவரையாவது போட்டுத் தள்ளினால்தான் நாம் யார் என்று தெரிய வரும் என்று ஆத்திரத் துடன், தங்களுக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்களை நோக்கி சொகுசு காரை அதிவேகத்தில் இயக்கி, இரு சக்கர வாகனத்தில் சென்ற அபிஷேக் மற்றும் நித்தின்சாய் மீது மோதியதில் நித்தின்சாய் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக அவரது தந்தை சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இவ்விவகாரம் ஊடகங் களில் பிரேக்கிங் ஆனதில், தி.மு.க. மண்டலக் குழு தலைவர் கே.கே.நகர் தனசேகரனின் பேரன் சந்துருவும் இந்த கொலைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்ததால், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தனசேகரனைத் தொடர்புகொண்டு கண்டித்த தோடு, உடனே பேரனை சரணடையச் சொல் லுங்கள் என்று உத்தரவிட்டார். அதையடுத்து, ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்திற்கு சந்துருவை அழைத்து வந்த தனசேகரன் மற்றும் குடும்பத் தினர், உதவி ஆணையர் பிரம்மானந்தத்திடம் சந்துருவை சரணடையச் செய்தனர். பின்னர், சந்துருவை காவல் துறையினர் கைது செய்தனர்.
கொல்லப்பட்ட நித்தின்சாயின் தாயார் பேசுகையில், "என் மகன் ஒரு அப்பாவி. அவர்களுடன் சென்றதற்கா இந்த நிலை? உயிர் போனது திரும்ப வருமா? என் பிள்ளையை கொன்றுவிட்டு தைரியமாக காவல் நிலை யத்திற்கு சிரித்தபடியே வராங்களே, அதைப் பார்க்கும்போது என் நெஞ்சமெல்லாம் பதறுதே! அவனை கைது செய்து வெளியில் விடக்கூடாது. என் மகன் இல்லாமல் நான் தவிப்பதைப் போன்று அவர்களும் தவிக்க வேண்டும். அரசியல் பின்புலம் இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா?'' எனக்கூறி கதறினார்.
காதல் தொடர்பாக ஏற்பட்ட தகராறு, கொலைச்சம்பவத்தில் கைது செய்யப் பட்டுள்ள சந்துருவின் தாத்தாவான தனசேகரன், கடந்த தேர்தலின்போது, ஒரு வயதான தம்பதியரோடு நிலத்தகராறு பிரச்சனையில் சிக்கிக்கொண்டதால், விருகம்பாக்கம் தொகுதியில் அவருக்கு சீட் கேட்டதை மறுத்திருந்தது தி.மு.க. தலைமை. தற்போது தனது பேரன் கொலைச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருப்பதால், முதல்வரின் கோபத்துக்கு ஆளாகி, மீண்டும் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. காதல் விவகாரத்தில் நண்பருக்கு ஆதரவாக சென்று அதில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/08/02/dmkgrandson-2025-08-02-06-52-21.jpg)