பழைய வழக்குகளைக் காரணம் காட்டி, "உபா' சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி.
அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், அவர்மீது போடப்பட்ட உபா சட்டத்தை நீக்கக்கோரியும் சென்னை தி.நகரில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. கடந்த 4 மாதங்களாக மே-17 இயக்கத்திற்கு போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி தரப்படவில்லை. இந்நிலையில், திருமுருகன் காந்தி மீதான வழக்குகள், ஸ்டெர்லைட் மற்றும் எட்டுவழிச் சாலை குறித்து எதுவும் பேசக்கூடாது உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளுடன், கடந்த செப்டம்பர் 8-ம் தேதி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில், தமிழ்த்தேசிய, இடதுசாரி அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.
“ஜெயலலிதா எதிர்த்த அனைத்து திட்டங்களுக்கும், மோடி அரசுக்கு அடிபணிந்து அனுமதி வழங்கி மக்களை வஞ்சிக்கிறது எடப்பாடி அரசு. மக்கள் உரிமைப் போராட்டங்களுக்கு தொடர்ச்சியாக அனுமதி மறுத்து, ஜனநாயகமற்ற முறையில் ஆட்சி நடக்கிறது’’ என மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன் பேசினார்.
‘பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்ததற்காக திருமுருகன் கைது’ எனத் தெரிந்ததும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில், வழக்குப் பாய்ந்த ஒன்பது பேரில் ஒருவரான குமரன், பெரியார் தனது கடைசிக்காலத்தில் தி.நகரில் பேசிய வரிகளை பொதுக்கூட்டத்தில் பேச... பெண்கள் உட்பட அனைவரும் எழுந்துநின்று ஆதரவு தெரிவித்தனர்.
""திருமுருகன் மதவாதம், சாதியம் பேசாமல், மானுடம் பேசியதால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை அடக்கிவிட்டால் விடுதலைக் குரலை ஒடுக்கிவிடலாம் என்று மத்திய, மாநில அரசுகள் எண்ணுகின்றன. ஆனால், இன்று சோபியாவைப்போல் பல்லாயிரம் பேர் உருவாகியிருக்கின்றனர்''’என வி.சி.க. ஆளூர் ஷாநவாஸ் பேசினார்.
பொதுக்கூட்டத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருந்ததால், எதை வைத்து வழக்குப்பதிவு செய்யலாம் என ஓட்டைகளைத் தேடியிருக்கிறது போலீஸ் தரப்பு. சட்டவிரோதமாக மின்சாரம் திருடியதாக போலி சாட்சியம் உருவாக்கிய போலீஸ் முயற்சி முறியடிக்கப்பட்டது. பெரியார் வரிகளைப் பேசியதற்காக த.பெ.தி.க. குமரன் மீது வழக்குப்பதிய மேலிடம் அழுத்தம் தந்திருக்கிறது. வெறும் 300 பேர் மட்டுமே வருவார்கள் என்று போலீஸ் தரப்பு நினைத்தது. ஆனால், 1,200 பேர் கலந்துகொண்டனர். இளைஞர்களே அதிகமாகக் காணப்பட்டனர். இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இல்லாமலேயே இத்தகைய கூட்டம் கூடியதை மேடையில் பேசிய பல தலைவர்களும் வியந்து கூறினர்.
-சி.ஜீவாபாரதி
படங்கள்: அசோக்