த்தரப்பிரதேசத்தில் நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில், ஆளுங்கட்சியான பா.ஜ.க.வைவிட எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்று, அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. 2022-ல் உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் இருக்கும் நிலையில், ஆளுங்கட்சிக்கு எதிரான இந்த மனநிலை பா.ஜ.க. தலைவர்களை கவலையடையச் செய்துள்ளது.

up

இந்திய மாநிலங்களிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் நான்கு கட்டமாக நடத்தப்பட்டது. மே-2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான இடங்களில் சமாஜ்வாதி கட்சி வெற்றிபெற்று, ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சியளித்துள்ளது. பா.ஜ.க.வின் வலுவான பிடியிலிருக்கும் பிரதமரின் தொகுதியான வாரணாசி, பா.ஜ.க.வின் வெற்றிக்கு அடித்தளமான ராமர் கோவில் பிரச்சனை எழுந்த அயோத்தி, உத்தரப்பிர தேசத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூர் தொகுதிகளிலும் பா.ஜ.க.வுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது கண்கூடாக வெளிப்பட்டுள்ளது.

வாரணாசியில் மொத்தமுள்ள 40 இடங்களில் சமாஜ்வாதி கட்சி 15 இடங்களை வெல்ல, பா.ஜ.க. 8 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. அதேபோல அயோத்தியில் மொத்தமுள்ள 40 இடங்களில் 24 இடங்களை சமாஜ்வாதியும், பா.ஜ.க. ஆறு இடங்களையும் பிடித்துள்ளன. மாயாவதியின் பகுஜன் சமாஜ் 5 இடங்களை வென்றுள்ளது. உ.பி.யின் தலைநகரான லக்னோவில் மொத்தமுள்ள இருபத்தைந்து இடங்களில் சமாஜ்வாதிக்கு 10 இடங்களும், பா.ஜ.க.வுக்கு ஆறு இடங்களும் கிடைத்துள்ளன. முதல்வரின் தொகுதியான கோரக்பூரில் மொத்தமுள்ள 60 இடங்களில் பா.ஜ.க.வுக்கு 20 கிடைத்துள்ளது. சமாஜ்வாதி கிட்டத்தட்ட சரிக்குச் சரியாக 19 இடங்களைப் பிடிக்க, பிற இடங்கள் மற்ற கட்சிகளுக்கும் சுயேச்சைகளுக்கும் கிடைத்துள்ளன.

Advertisment

உத்தரப்பிரதேசத்தில் மாவட்ட அளவிலான உள்ளாட்சித் தேர்தல் பதவிகள் 3050 இடங்கள் உள்ளன. இவற்றில் சமாஜ்வாதி கட்சி 760 இடங்களையும், பா.ஜ.க. 719 இடங்களையும் வென்றுள்ளன. மாயாவதியின் பகுஜன் சமாஜ் 381 இடங்களையும் காங்கிரஸ் 76 இடங்களையும் வென்றுள்ளன. சுயேட்சைகளே அதிகபட்சமாக 1114 இடங்களை வென்றுள்ளனர். எனவே மாநகராட்சி, நகராட்சிகளைக் கைப்பற்ற பல இடங்களில் சுயேட்சைகளின் தயவு தேவையாவதால், பெரிய கட்சிகள் சுயேட்சைகளை வளைக்க மும்முரம் காட்டிவருகின்றன.

கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலில் பா.ஜ.க. முன்னணியில் இருந்தாலும், அதன் வெற்றியில் பா.ஜ.க. நிறைய அத்துமீறல் களை மேற்கொண்டதாக அகிலேஷ் யாதவ் குறைகூறியுள்ளார்.

2022-ல் உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும், கொரோனா மரணங்களும், மருத்துவமனையில் படுக்கை, ஆக்ஸிஜனுக்கான தட்டுப்பாடுகளும் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்துமெனத் தெரிகிறது.

Advertisment