ஜெ. மரணத்துக்குப் பிறகு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கள்ள லாட்டரி விற்பனை புத்துயிர் பெற ஆரம்பித்துள்ளது.

திருச்சியில் கள்ள லாட்டரி விற்பனையில் முக்கியப் புள்ளியான எஸ்.வி.ஆர். மனோகரை கடந்த ஆண்டு திருச்சியின் சட்டம்-ஒழுங்கு டி.சி.யாக இருந்த மயில்வாகனன் தலைமையிலான போலீசார் கைதுசெய்தனர். மனோகர்மீது ஏற்கெனவே 43 வழக்குகள் இருந்ததாலும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கள்ள லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுவந்ததாலும், அவரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய உத்தரவிட்டார் போலீஸ் கமிஷனர் அருண்.

lottery

Advertisment

மனோகர் கைதான அன்றே கல்லாங்காடு சிவா, காந்தி மார்க்கெட் கண்ணன், அரியமங்கலம் பாபு, பாலக்கரை கார்த்தி, காந்தி மார்க்கெட் கணேசன், மலைக்கோட்டை ரெங்கராஜன், சின்ன சௌராஷ்டிரா தெருவைச் சேர்ந்த தேசிகாச்சாரி, பாலக்கரை கண்ணன், மன்னர்பிள்ளைத் தெரு பாஸ்கர், கள்ளர் தெரு வெங்கடாசலம் உட்பட மொத்தம் 12 லாட்டரி விற்பனையாளர்களுக்கு விலங்கு மாட்டியது காவல்துறை.

உறையூர், கண்டோண்ட்மெண்ட், மேலப்புதூர், கல்லுக்குழி பகுதிகளில் மட்டும் ஒரு நாளைக்கு 80 லட்ச ரூபாய்க்கு லாட்டரி வியாபாரம் ஆகுமென்கிறார்கள். எஸ்.வி.ஆர். மனோகர் கைது என்ற தகவல் வெளியானவுடன் அரசியல்வாதிகள் முதல் காவல்துறை அதிகாரிகள் வரை பலரும் முகம் வெளிறிப்போனார்கள். காவல்துறையினர் மூலம் லாட்டரி விற்பனையாளர்களைக் கூண்டோடு கைதுசெய்யத் திட்டமிடுவதையறிந்த பல லாட்டரி விற்பனையாளர்கள் இரவோடு இரவாக வேறு ஊருக்கு ஓடி தலைமறைவாகினர்.

அடுத்த அதிரடியாக லாட்டரி வியாபாரி மனோகர் குரூப், பாதுகாப்பாக லாட்டரி விற்பனைசெய்ய உறுதுணையாக இருந்த திருச்சி காவல்துறை அதிகாரிகளின் பட்டியலைத் தயார்செய்து, லாட்டரிச் சீட்டு விற்பனையைத் தடுக்கத் தவறிய 3 ஆய்வாளர்கள், 2 உதவி ஆய்வாளர்கள் உள்பட 11 பேரை ஆயுதப்படைக்கு மாற்றம்செய்தார் கமிஷனர் அருண்.

Advertisment

lottery

இதற்கிடையில் சிறைசென்ற மனோகர், "நான் குண்டாஸிலிருந்து வெளிவருவதற்குள் திருச்சி கமிஷனர் அருண், டி.சி. மயில்வாகனன் ஆகியோரை திருச்சியிலிருந்து மாற்றிவிடுகிறேன்' என சபதம்போட்டு, சொன்னபடியே செய்தும் காட்டினார். அதன்பிறகு சகல மரியாதையோடு வெளியேவந்த லாட்டரி அதிபர் மனோகர், புதிய டீமை உருவாக்கி மீண்டும் லாட்டரி வியாபாரத்தை சூடுபிடிக்கவைத்தார்.

மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்தது லாட்டரி வியாபாரம். டி.சி. மயில்வாகனன் டிரான்ஸ்பரான இடத்துக்கு புதிய டி.சி.யாக நிஷா பொறுப்பேற்றார். மாநகர உளவுத்துறை அதிகாரியின் துணையுடன், டி.சி.க்கு அழுத்தம் தந்து, தனது லாட்டரி விற்பனைக்கு நெருக்கடிவராமல் பார்த்துக்கொண்டார் மனோகர். அதேநேரம் மயில்வாகனன் திருச்சி குற்றப்பிரிவுக்கு டி.சி.யாக வந்தார். சட்டம்-ஒழுங்கு தொடர்புடைய லாட்டரி வியாபாரத்தை முன்போல் அதிரடியாகத் தடுக்கமுடியவில்லை அவரால்.

லாட்டரி வியாபாரிக்கு துணைபோனதாக டிரான்ஸ்பர் செய்யப்பட்ட அதிகாரிகளின் மீதான குற்றச்சாட்டை விசாரணை செய்த ஏ.டி.எஸ்.பி. மந்திரமூர்த்தி யாரும் குற்றம் செய்யவில்லையென விசாரணையை முடித்துவைத்தார். டிரான்ஸ்பராகிப் போனவர்களில் சிலரும் திருச்சிக்கே வர மீண்டும் மனோகரின் கொடி பட்டொளி வீசி பறக்க ஆரம்பித்தது.

இந்நிலையில்தான் அக்டோபர் கடைசிவாரம், திருச்சி, ஸ்ரீரங்கம் என கள்ள லாட்டரி விற்பனை கனஜோராக நடக்கும் பகுதிகளில் தனிப்படைப் பிரிவினர் அதிரடியாக நுழைந்து 15 லாட்டரி வியாபாரிகளைக் கைதுசெய்திருக்கின்றனர்.

எல்லா அதிகாரிகளுக்கும் பணம் சரியாகப் போகும் நிலையில் நடந்திருக்கும் இந்தக் கைது லாட்டரி வியாபாரிகளை அதிரவும் குழம்பவும் வைத்திருக்கிறது. சட்டம்-ஒழுங்கு டி.சி. நிஷா பயிற்சிக்காக வெளியூர் சென்ற நேரத்தில், பொறுப்பு டி.சி.யாக பொறுப்பேற்ற மயில்வாகனன் அதிரடியாக பதுங்கிப் பாய்ந்திருக்கிறார் என்கிறார்கள். மெல்லவும் விழுங்கவும் முடியாமலிருக்கும் லாட்டரி வியாபாரத்துக்கு ஆதரவான காவல்துறையினர், இந்த அதிரடி நடவடிக்கைக்கு பிரஸ் ரீலிஸ்கூட அனுப்பாமல் தவிர்த்திருக்கிறார்களாம்.

-ஜெ.டி.ஆர்.