னியார் நிறுவனங் களுக்கு சாதகமாக டெண்டர் விதிகளில் ஆவின் நிர்வாகம் செய்திருக்கும் மாற்றங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. அமைச்சரின் அப்பாவித்தனத்தைப் பயன் படுத்தி புகுந்து விளையாடு கிறார்கள் ஊழல் அதிகாரிகள்.

தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 39 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது ஆவின் நிறுவனம். இதில் கிட்டத்தட்ட 13.5 லட்சம் லிட்டர் சென்னையிலும், 12.5 லட்சம் லிட்டர், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் என மொத்தம் 26 லட்சம் லிட்டர் பாலை பாக்கெட் மூலமாகவும், மொத்த ஏஜெண்டுகள் மூலமாக வும் விற்பனை செய்கிறது ஆவின். இதுதவிர... வெண்ணெய், இனிப்புகள் உள்ளிட்ட பல்வேறு உபபொருட்களை தயாரிப்பதற் காக 2 முதல் 3 லட்சம் லிட்டர் பால் பயன்படுத்தப்படுகிறது.

aa

இத்தகைய பயன்பாடுகளுக்குப் பிறகு சுமார் 12 லட்சம் லிட்டர் பால் உபரியாக இருக்கிறது. அந்த உபரி பாலை பாலாக விற்பனை செய்வதன் மூலம் ஆவினின் இழப்புகள் பெரியளவில் தவிர்க்கப்படுகிறது. ஆனால், பாலை பாலாக விற்பனை செய்வதை பெயரளவுக்கு செய்து விட்டு பவுடராக மாற்றுவதில்தான் அதிகாரிகள் அக்கறை காட்டுகிறார்கள். இதனால் ஆவினுக்கு தேவையற்ற இழப்புகள் ஏற்படுகிறது. தங்களின் லாபத்துக்காக நட்டத்தை ஏற்படுத்தி வரும் ஆவின் அதிகாரிகள், பல உண்மைகளை மறைக்கின்றனர்.

Advertisment

இதுகுறித்து தமிழக பால்வளத்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். நம்மிடம் மனம்திறந்த அவர்கள், "தேசிய கூட்டுறவு பால் இணையத்தின் (என்.சி.டி.எஃப்.ஐ.) வழியாகத்தான் உபரி பால் விற்பனைக்கான டெண்டர் விடப்படுகிறது. இந்த டெண்டரில், கலந்துகொள்ள அரசு தரப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் விதிகள் வலிமையானவை.

குறிப்பாக, பாக்கெட் பால் விற்பனை செய்யும் தனியார் பால் நிறுவனங்கள், ஆவினின் உபரி பால் டெண்டரில் கலந்து கொள்ள முடியாது. நீண்ட வருடங்களாக இருக்கும் அடிப்படை விதி இது. தனியார் பால் நிறுவனங்கள் ஆவின் பாலை வாங்கி ஆவினுக்கே போட்டியாக வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த விதி உருவாக்கப்பட்டது.

avin

Advertisment

அந்த வகையில், அக்டோபர் 11-ந்தேதி முதல் 15 நாட்களுக்கு உபரி பாலை எடுக்கும் டெண்டர், என்.சி.டி.எஃப்.ஐ. மூலம் கடந்த 7-ந்தேதி விடப்பட்டது. சுமார் 7.5 லட்சம் லிட்டர் பாலுக்கு விடப்பட்ட டெண்டரில், 1.14 லட்சம் லிட்டர் பாலை மட்டுமே ஓ.கே. செய்திருக்கிறார் ஆவினின் மார்க்கெட்டிங் பொது மேலாளர் புகழேந்தி. 6.36 லட்சம் லிட்டர் உபரி பால் மீதமானது.

இந்த நிலையில்தான், 6.36 லட்சம் லிட்டர் பாலை தனியார் பால் நிறுவனங்கள் எடுப்பதற்கு வசதியாக அவசரம் அவசரமாக ஆவின் நிர்வாக இயக்குநர் கந்தசாமி ஐ.ஏ.எஸ்.சும், பொது மேலாளர் புகழேந்தியும் இணைந்து ஆவின் டெண்டரில் தனியார் பால் நிறுவனங்கள் நுழைய தடையாக இருக்கும் விதிகளை திருத்தி, தனியார் பால் நிறுவனங்கள் டெண்டரில் கலந்துகொள்ளலாம் என மாற்று கின்றனர்.

மேலும், உபரி பாலை டெண்டர் எடுக்கும் நிறுவனங்கள், அதன் மொத்த கொள்முதலில் 90 சதவீதத்தை டெண்டரின் கால அளவான 15 நாட்களுக்குள் பூர்த்தி செய்திட வேண்டும் என்கிற விதியையும் திருத்துகின்றனர். அதாவது, ஒரு நாளைக்கு எத்தனை ஆயிரம் லிட்டர் பால் டெண்டரில் எடுக்கப்படுகிறதோ, அதனை ஒரே நாளில் எடுத்து விட வேண்டும் அல்லது 75 சதவீதம் பூர்த்தி செய்யவேண்டும். இல்லையெனில், எடுக்காமலிருக்கும் ஒவ்வொரு லிட்டருக்கும் 3 ரூபாய் பெனால்டி போடப்படும் என்று மாற்றியுள்ளனர். இது எப்படி சாத்தியப்படும்? ஏனெனில், பால் ஒன்றியங்களில் உபரி பாலை ஏற்றுவதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இருக்கிறது. கால தாமதமும் ஏற்படும். இந்த விதி ஏற்கனவே இருந்ததுதான். அந்த விதியால் பல பிரச்சனைகள் உருவானதால்தான் அதனை ரத்து செய்துவிட்டு 15 நாள் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த கால அவகாச விதியை தற்போது திருத்தியதில் உள்நோக்கம் இருக்கிறது.

டெண்டர் விதிகள் என்பது அரசின் கொள்கை முடிவு. அதை திருத்தவோ ரத்து செய்யவோ ஆவின் நிர்வாக இயக்குநருக்கோ, பொதுமேலாளருக்கோ அதிகாரமில்லை. அதாவது, ஆவினில் புரோக்ராம் ஆக்ஷன் கமிட்டி, மில்க் மானிட்டரிங் கமிட்டி என 2 இருக்கிறது. விதிகள் திருத்தப்பட வேண்டுமெனில் ப்ரோக்ராம் ஆக்சன் கமிட்டியில் விவாதித்து அங்கு ஒப்புதல் பெற்றபிறகு, மில்க் மானிட்டரிங் கமிட்டியில் விவாதிக்கப்படும். அதன் ஒப்புதலும் பரிந்துரையும் பெற்ற பிறகு நிர்வாக இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்படும். அவரது பார்வைக்கு பிறகு துறையின் கமிஷனருக்குச் செல்லும். அவரது ஒப்புதல் கிடைத்ததும் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அரசு என்பது, துறையின் அமைச்சரும் செயலாளரும்தான். இவர்களுக்கு மட்டுமே விதிகளை திருத்தும் அதிகாரம் உண்டு. ஆனால், இப்போது திருத்தப்பட்ட விதிகள் குறித்து 2 கமிட்டிகளிலும் விவாதிக்கப்படவும் இல்லை; அதன் ஒப்புதலையும் பெறவில்லை. அமைச்சருக்கும் செயலாளருக்கும் தெரியாமல் கந்தசாமி ஐ.ஏ.எஸ்.சும், புகழேந்தியும் விதிகளைத் திருத்தியுள்ளனர். இதன் பின்னணியில் இருப்பது ஊழல்களும் கமிஷனும்தான்''’என்று விரிவாகச் சுட்டிக்காட்டினார்கள்.

avin

டெண்டரை நடத்தும் என்.சி.டி.எஃப்.ஐ. வட்டாரங்களில் விசாரித்தபோது,’"பாலை, பாலாக விற்பனை செய்வதைவிட, பால் பவுடராக விற்பனை செய்வதில்தான் கந்தசாமியும் புகழேந்தியும் அதிக அக்கறை காட்டுகிறார்கள். பாலை பாலாகவே விற்பனை செய்வதை விட பவுடராக விற்பதில் கிலோவுக்கு 40 ரூபாய் நட்டத்தை சந்திக்கிறது ஆவின். பவுடராக விற்பதில் லஞ்சம் விளையாடுவதால் பாலை பாலாக விற்பதில் அதிகாரிகளுக்கு விருப்பமில்லை. ஆனால், பாலை பாலாக லாபமாக விற்க முயற்சியுங்கள் என அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டிருப்பதால், தங்களின் பேரங்களுக்கு சம்மதித்திருக்கும் சில தனியார் பால் நிறுவனங்களிடம் உபரி பாலை மொத்தமாக ஒப்படைக்கவே விதிகள் திருத்தப்பட்டுள்ளன.

ஆவினின் லாபத்துக்காகத்தான் தனியார் பால் நிறுவனத்தை டெண்டருக்குள் கொண்டு வருகிறோம் என ஆவின் நிர்வாகம் சொல்லுமேயானால், டெண்டரில் எதற்கு ஆயிரத்தெட்டு கண்டிஷன்? ஒரு லிட்டருக்கு இவ்வளவு ரூபாய் என ஒரு அடிப்படை விலையை நிர்ணயித்து, அதற்கு மேல் யார் அதிக விலை கேட்கிறார்களோ அவர்களுக்கு உபரி பால் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்து விடுங்கள். போட்டி அதிகரிக்கும். கூடுதல் விலைக்கு டெண்டர் போகும். ஆவினுக்கு லாபம் வரும். ஆக, தனியாரை அனுமதிப்பதுன்னு முடிவு செய்துவிட்டால் டெண்டரை ஃப்ரீயாக ஓப்பன் பண்ணிவிடுங்கள். யார் வேணாலும் கலந்துகொள்ளட்டும். அதில் எதற்கு ஆயிரெத்தெட்டு கண்டிஷன்?'' என்று விவரிக்கிறார்கள்.

மேலும் பாலை, பாலாக விற்பனை செய்ய முயற்சித்தாலும் முழுமையாக விற்கமுடியவில்லை; அதனால் பவுடராக விற்கிறோம் என்ற சூழலை உருவாக்குவதற்காகவே இத்தனை களேபரங் களையும் செய்து கொண்டிருக்கிறார்கள் ஆவின் அதிகாரிகள். பாபா ராம்தேவ் நடத்தும் பதாஞ்சலி நிறுவனத்துக்கு பால் பவுடர்கள் அதிகம் தேவை. அவர்களுக்கு தேவையான பால் பவுடர்களில் அதிக அளவிலான குவான்டிட்டியை ஸ்ரீநிதி புட்ஸ் என்ற நிறுவனம்தான் சப்ளை செய்கிறது. இதற்காகவே வெவ்வேறு பெயர்களில் பல நிறுவனங்களை வைத்திருக்கிறார்கள். அந்த ஸ்ரீநிதிக்கும் ஆவின் அதிகாரிகளுக்கும் அண்டர் டீலிங் உண்டு. அதனால், ஸ்ரீநிதிக்கு சப்ளை செய்வதற்காகவே பாலை பவுடராக உருமாற்றம் செய்வதில் ஆவின் அதிகாரிகள் அதிக அக்கறை காட்டுகின்றனர். பாலை பாலாக விற்பனை செய்வதை முறையாக செய்தால் ஆவினுக்கு நிச்சயம் லாபம் வரும். அதற்கு ஆவின் வளர்ச்சியில் உண்மையாகவே அக்கறையுள்ள அதிகாரிகள் இருக்க வேண்டும் என்பதே நேர்மையான அதிகாரிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து ஆவின் எம்.டி. கந்தசாமி ஐ.ஏ.எஸ்.சிடம் நாம் கேட்டபோது,”"ஆவினில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தைக் குறைக்கத்தான் சிலபல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதிருக்கிறது. அதைத்தான் செய்து வருகிறோம். ஆவின் விதிகள் பிசினெஸ் க்ளாசில் வருபவை. அது கொள்கை முடிவு கிடையாது. அதனால் விதிகளை திருத்தும் அதிகாரம் எங்களுக்கு இருக்கிறது. விதிகள் திருத்தம் செய்யப்பட்டதில் எந்த தவறும் இல்லை; உள்நோக்கமும் இல்லை. ஆவினுக்கு எது நன்மையோ அது மட்டும்தான் எங்கள் குறிக்கோள். ஸ்ரீநிதி ஃபுட்ஸுக்கு பால் பவுடர் தருவ தில்லை''’என்கிறார் அழுத்தமாக.

பால்வளத்துறையின் அமைச்சர் ஆவடி நாசரிடம் இதுகுறித்து கேட்டபோது, "விதிகளை திருத்தியிருக்கிறார்களா? எனக்குத் தெரியாதே! பால் கூட்டுறவு சங்க விதிகள் என்பது அரசின் கொள்கை முடிவு. அதனை திருத்தும் அதிகாரம் ஆவின் அதிகாரிகளுக்கு இல்லை. என்ன நடந்துள்ளது என்பதை விசாரிக்கிறேன். தவறு நடந்திருந்தால் அது சரி செய்யப்படும். பாலை பாலாக விற்றாலும், பாலை பவுடராக விற்றாலும் ஆவினுக்கு நட்டம்தான். ஆனால், பவுடராக விற்பதில்தான் அதிக நட்டம் ஏற்படுகிறது. அதனால் பாலை பாலாக விற்பதில் லாபம் ஈட்டும் முறைகளை ஆராய்ந்து வருகிறோம். விரைவில் ஆவின் லாபத்தில் இயங்கும்''’என்கிறார் அழுத்தமாக.

ஆவினில் அதிகாரிகள் எடுக்கும் அத்தனை முடிவுகளும் ஆவினுக்கு நட்டம்; அதிகாரிகளுக்கு லாபம் என்பதாகத்தான் இருக்கிறது.’