மெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் இருசக்கர வாகன நிறுவனமான ஹார்ட்லி டேவிட்சன் ஆகியவை இந்தியாவிலிருந்து கழன்றுகொண்டதைப்போல, தற்போது ஃபோர்டு நிறுவனமும் அதே முடிவெடுத்துள்ளது. பிரேசில், ஆஸ்திரேலியா நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள ஃபோர்டு கார் தொழிற்சாலை இந்த முடிவுக்கு வந்துள்ளது.

ford

கடந்த 1995-ம் ஆண்டில் இந்தியாவில் கால்பதித்த ஃபோர்டு நிறுவனத்தின் தலைமையகம், சென்னை சோழிங்கநல்லூரில் உள்ளது. தொடக்கத் தில் நல்ல நிலையில் இயங்கிவந்த இந்நிறுவனம், கடந்த பத்தாண்டுகளாக மந்தமாகச் செயல்பட்டது. கார் உற்பத்தித்துறை இந்தியாவில் தடுமாறத் தொடங்கியதற்கு, மத்திய அரசு திடீரெனக் கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கமும், அதீத வரிவிதிப்பின் தாக்கமும் முக்கிய காரணமாக இருந்தது. இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு, ஆடம்பரப் பொருள்களுக் கான 28% வரி விதிக்கப்பட்டதால், வாகனங்களின் விலை வெகுவாக அதிகரித்தது. இதன்காரணமாக, வாகனக்கடன் மூலமாக வாங்க விருப்பப்படும் நடுத்தர வர்க்கம் சற்றே பின்வாங்கியதால் இவற்றின் விற்பனையும் அடிவாங்கியது.

ஃபோர்டு நிறுவனம், தனது தொழில் போட்டி யாளர்களான மாருதி, ஹூண்டாய் நிறுவனங் களுக்கு ஈடுகொடுத்து இந்தியாவில் தன்னை நிலை நிறுத்துவதில் மிகவும் திணறியது. இந்தியாவிலுள்ள மாருதி கார் தயாரிப்பு நிறுவனத்தின் கார்கள், ஒரு மாதத்துக்கு சராசரியாக 1 லட்சம் என்ற எண்ணிக் கையில் விற்பனையாகின்றன. ஹூண்டாய் நிறு வனத்துக்கு சராசரியாக 45,000 முதல் 50,000 கார்கள் வரை விற்பனையாகின்றன. அதேவேளை, ஃபோர்டு நிறுவனத்தின் கார்கள், சராசரியாக 3,000 முதல் 4,000 வரைதான் விற்பனையாவதாக இத்துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். ஃபோர்டு நிறுவனத்தின் உதிரி பாகங்கள் கிடைப்பதில் இருக்கும் சிக்கல்கள், அதிக விலை மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்நிறுவனத்தின் தயாரிப்பு களுக்கு வரவேற்பு குறை வாகவே இருக்கிறது.

Advertisment

கடந்த பத்தாண்டுகளாக, சுமார் 200 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்ததால், குஜராத்திலும், சென்னையிலும் இயங்கிவரும் அந்நிறுவனத்தின் தயாரிப்புத் தொழிற்சாலைகளை மூட முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 4,000 தொழிலாளர்கள் வேலையிழப்பைச் சந்திக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா விலுள்ள இந்நிறுவனத்தின் 400 விற்பனை ஷோ ரூம்களில் பணியாற்றும் சுமார் 40 ஆயிரம் தொழி லாளர்களும் மறைமுகமாக வேலையிழப்பைச் சந்திக்கும் அபாயம் உள்ளது.

அதோடு, இந்நிறுவனத்துக்கான உதிரி பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் பெருத்த நஷ்டம் ஏற்படக்கூடும். இந்நிறுவனத்தை மூடுவதால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பணி இழப்புக்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்து இன்னமும் திட்டவட்டமான முடிவேதும் எடுக்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கு ஓராண்டுக்கான சம்பளத்தை இழப்பீடாக வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகச் செய்தி கசிகிறது.

ford

Advertisment

உலகமயமாக்கலுக்குப்பின், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு தனியார் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் சிவப்புக் கம்பள வரவேற்புடன் கால்பதித்தன. ஒவ்வொரு நிறுவனம் கால் பதிக்கும்போதும், எத்தனை ஆயி ரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது மட்டுமே பெரிதாக விளம்பரப்படுத்தப்படும். ஆனால் அந்நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசு கள் சார்பில், மிகக்குறைந்த விலையில் இலவசமாக நிலம், குறைந்த விலையில் மின்சாரம், குடிநீர், வரிச் சலுகைகள் குறித்தெல்லாம் பெரிதாக வெளியே சொல்லப்படுவதில்லை. இந்த நிறுவனங்களுக்காகத் தான் இந்தியாவெங்கும் பல்லாயிரம் கிலோ மீட்டர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டன. பல புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டன, விரிவாக்கப்பட்டன.

அந்நிறுவனங்களுக்காகத்தான் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று நிதி திரட்டி, நாட்டின் உள்கட்டமைப்பை உயர்த்தி, தனியார் நிறுவனங்களைக் கவர்ந்திழுத்தார்கள். ஆனால், இவ்வளவு சலுகைகளோடு கால்பதிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் மூடப்படும்போது, அங்கு பணியாற்றிய தொழிலாளர்களுக்கு மாற்று வேலை கிடைக்கவோ, உரிய நிவாரணம் கிடைக்கவோ பெரிதான முயற்சி எதையும் மத்திய அரசு எடுப்பதில்லை.

ஃபோர்டு நிறுவனத்தின் அறிவிப்பு, அதன் தொழிலாளர்கள் நிலை குறித்து சி.ஐ.டி.யு. தொழிற் சங்க மாநில தலைவர் அ.சவுந்தரராஜன் கூறுகை யில், "ஃபோர்டு நிறுவனம் சென்னையில் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. இங்கே சம்பாதித்து, பின்னர் குஜராத்திலும் தொடங்கினார்கள். சென்னையில் 7,000 நிரந்தரத் தொழிலாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் செயல்படுபவர்களையும் சேர்த்து 8,000 பேர் இருப்பதாக வைத்துக் கொண்டால், அதுபோக, இந்நிறுவனத்துக்கு உதிரிபாகங்கள் தயாரித்துக்கொடுக்கும் சிறு நிறுவனங்களே 30-40 இருக்கக்கூடும். மேலும், இங்கு உற்பத்தியாகும் கார்களை விற்பனை செய்யும் டீலர்கள் மற்றும் இவற்றைப் பழுதுபார்க்கும் சர்வீஸ் சென்டர்களில் மட்டுமே கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேருக்குமேல் பணியாற்றுகிறார்கள். நேரடியாகவும், மறைமுகமாகவும் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் இந்த ஆலையை மூடுவதால் வருமானத்தை இழப்பார்கள். 1 லட்சம் குடும்பங்களின் வாழ்க்கை திடீரென்று வீழ்ச்சியடையும். இந்த நிறுவனத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தை நம்பி, பிள்ளைகளின் படிப்பு, குடும்பத்தின் வளர்ச் சிக்கான அனைத்து செயல்களிலும் இறங்கியிருப் பார்கள். அவை அனைத்துமே இப்போது பெருங்கேள்விக்குறியாக நிற்கும். இக்குடும்பங்களின் வாழ்க்கைத்தரம் சரிவைக் சந்திக்கும்.

இந்நிறுவனத்திற்காக, ஷோ ரூம் உள்ளிட்ட விற்பனைக் கட்டமைப்புக்காகக் கிட்டத்தட்ட 2,000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளோம். இனி நாங்கள் என்ன செய்வோமென்று டீலர்கள் அமைப்பின் தலைவர் விரக்தியுடன் கூறியுள்ளார். ஆக, இது மிகவும் மோசமான பொருளாதார அழிவைக் கொண்டுவரும். முதலாளித்துவம், வேலை கொடுப்பதைப் பெருமையாகப் பேசுகிறது. ஆனால் இப்படி நிறுவனங்களை மூடி, தங்களை நம்பிவந்த தொழிலாளிகளின் வயிற்றிலும் அடிக்கிறது. இங்குள்ள தொழிலாளர்களின் சராசரி வயது 35-க்கு மேல் இருக்கும் நிலையில், இந்த வயதுக்கு மேல் வேறெங்கும் வேலை கிடைப்பதும் கடினம். உண்மையில், ஃபோர்டு நிறுவனம் மூட வேண்டிய அவசியமே இல்லை. மற்ற நிறுவனங்களோடு ஒப்பிடும்போது, இவர்களின் கார் உற்பத்தியும் குறைவு, அதற்கேற்ப விற்பனை குறைவே தவிர, உற்பத்தித் தேக்கம் எதுவும்dd கிடையாது. இவர்களின் உற்பத்தியில், நூறில் 60 கார்கள் ஏற்றுமதியாகின்றன. மீதி 40 கார்கள் உள்நாட்டில் விற்பனையாகின்றன. தற்போதைய கொரோனா காலத்தில் பல்வேறு தொழில்களுக்கும், மற்ற கார் நிறுவனங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புதான் இந்நிறுவனத்துக்கும் ஏற்பட்டுள்ளது. இது மீளக்கூடிய ஒன்றுதான். இவர் களுடைய அமெரிக்கத் தலைமை நிறுவனம் மிகப்பெரியது. அதோடு ஒப்பிடுகையில் சென்னையில் ஏற்படும் விற்பனைக் குறைவென்பது அவர்களுக்கு எறும்பு கடிப்பதைப் போன்றதே. தற்காலிக இழப்பிலிருந்து இந்நிறுவனம் மீள்வது எளிதுதான். எனவே, இவ்வளவு காலம் பல்வேறு சலுகைகளை அனுபவித்துவிட்டு தற்போது இங்கிருந்து கிளம்புவதில் வேறு ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே கருதுகிறேன். இது, இந்திய அரசுக்குச் செய்யும் துரோகமாகும்.

இந்திய ஒன்றிய அரசிடம் நிறைய வாக்குறுதிகளை அளித்துதான், பல்வேறு சலுகைகளோடு இங்கே தொழில் தொடங்கியுள்ளது. அதேபோல இங்கிருந்து வெளியேறுவதாக இருந்தாலும் ஒன்றிய அரசிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். அரசாங்கமானது தொழிற்சங்கத்திடம் விசாரித்து தான் இதில் முடிவெடுக்க வேண்டும். எனவே அரசின் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் இந்த நிறுவனத்துக்கு இருக்கிறது. அப்படி அனுமதி கோரும்போது, வேலையிழக்கவிருக்கும் தொழிலாளர்களின் எதிர்காலத்தை மனதில்கொண்டு, ஒன்றிய அரசு மறுக்கவேண்டுமென்று சி.ஐ.டி.யு. சார்பாக நான் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

கடந்த 2006-ம் ஆண்டில் ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் உற்பத்தியைத் தொடங்கிய நோக்கியா நிறுவனம், அடுத்த சில ஆண்டுகளில் ஆன்ட்ராய்டு போன்களின் வரவால் விற்பனையில் அடிவாங்கத் தொடங்கியது. 2014 நவம்பர் 1-ம் தேதி ஆலையை நிரந்தரமாக மூடிய பின்னர், 2019-ம் ஆண்டில் பின்லாந்து நாட்டை சேர்ந்த சால்காம்ப் நிறுவனம், நோக்கியோ ஆலையைக் கைப்பற்றியது. இதேபோல ஃபோர்டு நிறுவனத்தை வேறு ஏதேனும் நிறுவனங்கள் கையகப்படுத்த ஒன்றிய -மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தொழிற்சாலை என்பது அந்த முதலாளியின் லாப நட்டக்கணக்கோடு மட்டுமே சம்பந்தப்பட்டது அல்ல. அந்த நிர்வாகம், அரசாங்கத்துக்குக் கொடுத்த வாக்குறுதி, தொழிலாளர்களுக்குக் கொடுக்கும் பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கியதுதான். அரசாங்கத்தின் சலுகைகளை முழுக்க உறிஞ்சிக் குடித்துவிட்டு, சக்கைகளைப்போல தொழிலாளர் களையும், சிறு குறு நிறுவனங்களையும் நட்டாற்றில் விடும் நிலை இனியும் தொடராதிருக்க, இவற்றுக்கென ஓர் ஒழுங்குமுறையை ஏற்படுத்துவது அவசியமாகும்.