"வரும் ஆனா வராது' பாணியில்...…"இருக்கு ஆனா… இல்ல' என்கிறார்கள் கீழ்ப்பாக்கத்துக்காரர்கள். சொன்னவர்களுக்கு எந்த மனநலப் பிரச்சினையும் இல்லை. அவர்கள் வடிவேலு ரசிகர்களும் இல்லை. அவர்கள் சொல்வது ஜி-4 காவல்நிலையத்தைத்தான். "பெயருக்குத் தான் அந்த காவல்நிலையம் இருக்கிறதே தவிர, அங்கே காவலர்கள் யாரும் பணியில் இருப்பதே இல்லை' என்கிறார்கள் குற்றச்சாட்டாய்.

சென்னை கீழ்ப்பாக்கம் ஜி 4 காவல்நிலையம் 23-11-13-ல் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் மனநல மருத்துவமனை வளாகத்துக்குள் மருத்துவமனை தொடர்பான காவல் பணிகளுக்காகத் தொடங்கப் பட்டது, பின்னால் அனைவருக்கும் பொது காவல்நிலையமாக விரிவுபடுத்தப்பட்டது.

ஜி-4 காவல்நிலையத்தில் பணிபுரியும் அ.மணிவண்ணன், ""நான் 2017-ல் இந்த காவல் நிலையத்திற்கு வந்ததிலிருந்து இங்கே காவலர்கள் வருவதே இல்லை. இந்த நிலையில்தான் 14-4-17 அன்று தலைமைக்காவலர் பாவடையான் என்பவர் இதே ஜி-4 காவல்நிலையத்திற்கு புதிதாக பணியில் சேரவந்தார். வந்தவரை நான்தான் பொது நாட்குறிப்பு ஏட்டில் பதிவுசெய்தேன். என்னிடம், "சார், அண்ணன் வரச்சொன்னார் போகிறேன்' என்றார். “"எந்த அண்ணன்?' என்று கேட்டதற்கு சொல்லாமல் சென்றுவிட்டார்.

kk

Advertisment

அடுத்தகட்டமாக நான் ஆர்.டி.ஐ. மூலமாக விசாரித்தபோது, பாவடையான் தற்போது அ.தி.மு.க. செய்தித் தொடர் பாளர் அழகுமருதுராஜா வீட்டில் இருந்ததாகத் தெரியவந்தது. "காவல் நிலையத்திலிருந்து அரசு ஆணையோ அல்லது நிர்வாக ஆணையோ இல்லாமல் எந்த ஒரு காவல் நிலையத்திலும் இருந்து அயல்பணிக்கு அனுப்பக்கூடாது' என்பது விதி. அதைச் சுட்டிக்காட்டி ஆர்.டி.ஐ. மூலம் விவரம் கேட்டதற்கு, "அவருக்கு அரசு ஆணையோ, நிர்வாக ஆணையோ அல்லது நீதிமன்ற ஆணையோ கொடுக்கப் பட்டுள்ளதா' என்ற கேள்விக்கு, "எந்த தகவலும் இல்லை' என்று பதில் கொடுத்தார்கள்.

பாவடையான், மட்டுமல்ல, "ஒட்டுமொத்த ஜி-4 காவலர்களும் எங்கு உள்ளனர்' என்று கேட்டபோது... அத்தனைபேரும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட பலரது வீடுகளில் ஆர்டர்லியாகப் பணிபுரிவது தெரியவந்தது. அன்றிலிருந்து இன்று வரையிலும் பணிக்குச் செல்லாமலே இருக்கிறேன். ஆனால் எனக்கு மாத ஊதியம் வந்துகொண்டுதான் இருக்கிறது. எனக்கு சம்பளம் பிடித்தால் அவர்களுக்கும் சம்பளம் பிடிக்கவேண்டும் என்ற கேள்வியை முன்வைத்ததால், இன்றுவரையிலும் எனக்கு சம்பளம் வந்துகொண்டுதான் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக ஜி 4 காவல்நிலையமே இயங்காமல் உள்ளது.

இப்படி விதிமுறைகளுக்கு மாறாக நடைபெறும் விஷயங்களைச் சுட்டிக்காட்டி, ஆர்.டி.ஐ. மூலம் கேள்வி கேட்டதற்காக எனக்கு யூனிஃபார்ம் தைப்பதற்கான தையல்கூலி தராமல் இழுத்தடித்தனர். அதனால் நான் யூனிஃபார்ம் போடாமலே பணிக்குச் சென்றேன். இதற்காக என்மீது நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், காவல்நிலையம் வராமல், முறையான உத்தரவு இல்லாமல் ஆர்டர்லியாகச் செல்லும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்'' என்று கேள்வி எழுப்புகிறார்.

மனநலக் காப்பகத்தில் பணியிலிருக்கும் சிலர், தங்கள் பெயரை வெளிப்படுத்த விரும்பாமல், “""நான் இங்கு 5 வருடமாகப் பணிபுரிகிறேன். இந்த போலீஸ் ஸ்டேசனுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வருவதுமில்லை, வழக்குகள் பதிவாகுவதும் இல்லை'' என்று மனம் நொந்து கூறினர்.

ஜி-4 இன்ஸ்பெக்டர் கோகிலாவிடம் கேட்டபோது, ""மேலதிகாரிகள்தான் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என பட்டும் படாமல் கூறினார்.

சென்னை கமிஷனர் விஸ்வநாதனோ, “""ஆர்.டி.ஐ. மூலம் நீங்கள் சேகரித்த தரவுகள் இருந்தால் அனுப்புங்கள். நானும் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்'' என்று உறுதி தந்தார்.

ஆன்லைன் ஷாப்பிங் ஆர்டரில்தான், வெற்று பாக்ஸை அலங்காரமாக அனுப்பிவைத்து வாங்குபவர்களை ஏமாற்றுவார்கள். எல்லோரையும் ஆர்டர்லி பணிக்கு அனுப்பிவிட்டு, வெறும் காவல்நிலையத்தைக் காட்டி யாரை ஏமாற்றுகிறார்கள் காவல்துறையினர்?

-அ.அருண்பாண்டியன்

படம்: ஸ்டாலின்