ன்ஸ்பெக்டர்கள் முதல் உயரதிகாரிகள் வரை மாதாமாதம் லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்டு டார்ச்சர் கொடுத்ததால் "பார்' நடத்திய நெல்லையப்பர் என்பவர் செல்ஃபோன் மூலம் வீடியோ வாக்குமூலம் கொடுத்துவிட்டு டி.எஸ்.பி. அலுவலக வளாகத்திலேயே தீயிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பார் உரிமையாளர்கள் மத்தியில் மட்டுமல்ல,…தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் பார்கள் மூலம் பணம் கொழிக்கும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் பெரும் பதட்டத்தை உண்டாக்கியிருக்கிறது.

tas

"சட்டவிரோத பார்களை நடத்துபவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்க சட்டத் திருத்தம் கொண்டுவராதது ஏன்?' என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கும் நிலையில்...

இதுகுறித்து, விசாரிக்க ஆரம்பித்தபோதுதான் பல்வேறு பகீர் தகவல்கள் கிடைத்தன. ""தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் என ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஏழு மாவட்டங்கள் அடங்கிய ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஓர் எஸ்.ஆர்.எம். எனப்படும் சீனியர் ரீடெய்ல் மேனேஜர் இருப்பார். உதாரணத்திற்கு, சென்னை மண்டலம் என்று என்று எடுத்துக்கொண்டால் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு ஆகிய 7 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு டி.எம். எனப்படும் மாவட்ட மேலாளர் இருப்பார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் பார் நடத்திய நெல்லையப்பர் தற்கொலை செய்துகொண்டதற்கு அம்மாவட்ட மேலாளர் ராமச்சந்திரனும் சென்னை மண்டல மேலாளர் முத்துக்குமாரசாமியும்தான் முதல் காரணம்'' என்று ஷாக் கொடுத்தனர்.…

Advertisment

""டி.எஸ்.பி. சுப்புராஜ், இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், பாண்டி உள்ளிட்ட காவல்துறையினரின் லஞ்ச டார்ச்சரால்தானே தற்கொலை செய்துகொண்டார்?'’என்று நாம் அவர்களிடமே கேட்டபோது, ""தமிழகத்தில், சுமார் 6,200 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஆனால், சுமார் 3,200 பார்களுக்குத்தான் முறையான அனுமதி -லைசென்ஸ் கொடுத்துள்ளது டாஸ்மாக் நிர்வாகம். மீதி இடங்களில் மூவாயிரத்துக்குமேற்பட்ட பார்கள் லைசென்ஸ் இல்லாமல்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அப்படி லைசென்ஸ் இல்லாமல் இல்லீகலாக ஆளுங்கட்சியால் நடத்தப்பட்ட பார்தான் நெல்லையப்பரின் பார். இல்லீகலாக நடத்தப்படும் பார்களை மூடி சீல் வைக்கவேண்டிய கடமையில் மண்டல விற்பனை மேலாளரும் மாவட்ட மேலாளரும் தவறியதால்தான் இப்படியொரு தற்கொலையே நிகழ்ந்திருக்கிறது''’என்கிறவர்கள், அதற்கான காரணத்தையும் விளக்குகிறார்கள்.

""டாஸ்மாக் பார்களுக்கான டெண்டரை ஆன்லைனில் வெளிப்படையாக அறிவிப்பதே இல்லை. அதிகாரிகளோ, எம்.பி., எம்.எல்.ஏ. உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளோ டெண்டர் எடுக்க விதிமுறையில் இடமில்லை. ஆனால், பெரும்பாலும் அரைமணி நேரத்திலேயே ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரசியல் புள்ளிகளின் பினாமிகள் பெயரில் டெண்டரை கொடுத்து முடித்துவிடுகிறது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரகம். இதில், எதிர்க்கட்சி புள்ளிகளும் சிண்டிகேட் அண்டர்ஸ்டாண்டிங்கில் பினாமி பெயரில் டெண்டர் எடுப்பதும் உண்டு. ஆனால், ஆளுங்கட்சி ஆதரவில்லாமல் டெண்டர் எடுக்கவே முடியாது. அப்படியே டெண்டர் எடுத்துவிட்டாலும் மாதத்திற்கு டாஸ்மாக் கடையில் எத்தனை மதுபாட்டில் விற்கப்படுகிறதோ அதற்கேற்றாற்போல் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு கட்டணம் கொடுக்கவேண்டும்.

tas

Advertisment

கிராமப்புறமாக இருந்தால் 1 1/2சதவீதம், நகராட்சி மற்றும் மாநகராட்சி என்றால் 3 சதவீதம் கட்டணம். அதாவது, மாதம் 30 லட்ச ரூபாய் டாஸ்மாக் வருமானம் என்றால் நகராட்சி, மாநகராட்சியில் லைசென்ஸ் பெற்ற பார் உரிமையாளர்கள் 90,000 ரூபாய் டி.டி. எடுத்து அனுப்பவேண்டும். அதுவும், இந்த 90,000 ஆயிரம் ரூபாயில் 1 சதவீதம்தான் டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு டி.டி. எடுத்து அனுப்பவேண்டும். மீதமுள்ள 90 சதவீத தொகையை கருவூலம், விவசாய மேம்பாடு, ஆவின் நிர்வாகம், காவல்துறை, போக்குவரத்துத்துறை என பல்வேறு துறைகளுக்கு டி.டி.யாக எடுத்து அனுப்புவோம்.

லைசென்ஸ் பெற்ற பார்களில் காவல்துறை லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்பதில்லை. ஆனால், லைசென்ஸ் பெறாத பார்களில்தான் மாதந்தோறும் லட்சம் லட்சமாக லஞ்சம் கேட்டு டார்ச்சர் செய்கிறார்கள்''’என்றபோது, "அப்படியென்றால்… லைசென்ஸ் பெற்றே கடையை நடத்தலாமே' என்று நாம் கேட்டபோது, மெல்லிய சிரிப்பை உதிர்த்தவர்கள்... ""ஒரு பாருக்கு சுமார் 1 டீ கோடி ரூபாய் வருமானம் வருகிறது என்றால், 3 சதவீத அடிப்படையில் 3 லட்சத்து இருபதாயிரம் ரூபாய் டாஸ்மாக்கிற்கு கொடுக்கவேண்டும் அல்லவா? முதன் முதலில் டெண்டர் எடுக்கும்போது இந்தத் தொகையை இரண்டு மடங்காக டெபாசிட் செய்யவேண்டும். அப்படியென்றால், 6 லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் வைப்புத்தொகை + முதல்மாத கட்டணம் மூன்று லட்சத்து இருபதாயிரம் ரூபாய் என மொத்தம் 9 லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் செலுத்தவேண்டியிருக்கும்.

ff

இப்படி, டெபாசிட் தொகையே பலமடங்கு இருப்பதாலும், மாதா மாதம் 3 சதவீத கட்டணம் கொடுக்கவேண்டியிருப்பதாலும்தான் ஆளுங்கட்சி அரசியல் புள்ளிகள் இல்லீகல் பார்களை நடத்துவதோடு நெல்லையப்பர் போன்ற ஆட்களிடம் வாடகைக்கு விட்டுவிடுகிறார்கள். அதுவும், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மரகதம் குமரவேலின் மச்சானும் திருப்போரூர் ஒன்றிய அ.தி.மு.க. இளைஞரணிச் செயலாளருமான ஆனந்தன் கண்ட்ரோலில் இருந்த இல்லீகல் பாரை நெல்லையப்பர் நடத்தியிருக்கிறார்.

லைசென்ஸ் பெற்ற பார்களையே விதிமுறைகளை மீறாமல் நடத்தமுடியாது. காரணம், விற்கப்படும் மது வகைகள் அனைத்துமே பார்களுக்கு கொண்டுவந்து குடிக்கப்படுவதில்லை. போக்குவரத்து போலீஸ் தொல்லையால் பாதிக்குப் பாதிபேர் வீட்டிற்கு வாங்கிச் சென்றுதான் குடிக்கிறார்கள். அதற்கும் பார் உரிமையாளர்களே கட்டணம் கொடுக்கவேண்டும். வாடகை கட்டுப்பாடு வாரியத்தின் மூலம் மதிப்பிட்டாலே டாஸ்மாக் கடைகளுக்கு கிராமப்புறங்களில் 1,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயும் நகர்புறங்களில் 5,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாய்தான் ஆகும். ஆனால் 30,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாய்வரை பார் உரிமையாளர்களிடம் வாடகை வசூல் செய்கிறார்கள். இதெல்லாம் பெரும்பாலும் இடத்தை வாடகைக்கு விடும் அரசியல்வாதிகளுக்குப் போகின்றன. மேலும், விதிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலாக அல்லது 24 மணிநேரமும் பார்களை நடத்தவும் டாஸ்மாக் சரக்குகளை பார்களில் வைத்து விற்கவும் உணவுப்பொருட்களை தயாரித்து விற்பதற்காகவும்தான் இன்ஸ்பெக்டருக்கு 15,000 ரூபாய், டி.எஸ்.பி.க்கு 5,000 ரூபாய் கலால் போலீஸ், உளவுப்பிரிவுக்கு 5,000 ரூபாய் என போலீஸார் மாதாமாதம் மாமூல் கேட்டு டார்ச்சர் செய்வார்கள்.

அதுவே, லைசென்ஸ் பெறாத இல்லீகல் பார் என்றால் மாதாமாதம் டாஸ்மாக்கிற்கு செலுத்தவேண்டிய லட்சக்கணக்கான கட்டணத்தை செலுத்தாமல் இருப்பதால் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் காவல்துறைக்கும் பயந்து லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்கவேண்டியிருக்கிறது''’என்று காரணத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதுகுறித்து, மதுவிலக்கிற்காக சட்டப்போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் பிரபல வழக்கறிஞர் பாலுவிடம் நாம் கேட்டபோது, ""பார் இல்லாத டாஸ்மாக்கே இல்லை. ஆனால், அவர்கள் விதித்திருக்கும் விதிமுறைப்படி ஆய்வு செய்துபார்த்தால் லைசென்ஸ் பெற்ற 3,200 பார்களில் 500 பார்கள்கூட தேறாது. அந்தளவுக்கு பொதுமக்களுக்கு இடையூறாகவும் கழிவறை வசதியே இல்லாமல் சுற்றுப்புறத்துக்கு கேடாகவும் பார்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அரசே நடத்துவதால் டாஸ்மாக் பார்களை மாவட்ட ஆட்சியர்கள் கண்டுகொள்வதே இல்லை. இதனால், இல்லீகல் பார்கள் அதிகமாகி அரசுக்கு வரவேண்டிய வருமானத்தில் பாதிக்குப் பாதி அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் போய்க்கொண்டிருக்கிறது''’என்று குற்றம்சாட்டுகிறார்.

தமிழ்நாடு டாஸ்மாக் பார் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் -தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பரசன் நம்மிடம், ""டெண்டரின்போது கொடுக்கப்படும் டெபாசிட் தொகையையும் மாதாமாதம் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு கொடுக்கப்படும் கமிஷன் தொகையையும் குறைத்து அனைவருக்கும் லைசென்ஸ் வழங்கினாலே இல்லீகல் பார்கள் உருவாகாமல் தடுக்கலாம்''’என்கிறார் கோரிக்கையாக.

எத்தனை பார்கள் லைசென்ஸ் வாங்கியிருக்கின்றன என்ற பட்டியலைக்கூட வெளிப்படையாக அறிவிக்காமல் இப்படி அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் லஞ்சம் கொழிக்க… டாஸ்மாக் நிர்வாகமே வழிவகுத்துக்கொண்டிருக்கிறது.

-மனோசௌந்தர்