""என்னையும் எம்புருஷனையும் சங்கிலில கட்டி அம்மணமாவே ஸ்டேஷனுக்கு வெளியே இழுத்துட்டு வந்து அந்த ராத்திரில வீதில நடக்க விட்டானுக. அப்ப வும் அடிச்சுக்கிட்டே வந்தானுக. இருட்டுல எங்கள அந்தக் கோலத்துல பார்த்தவங்க அலறியடிச்சுட்டு ஓடுனாங்க'' -நகை திருட்டு வழக்கு சந்தேகத்தின் பேரில், போலீசாரின் கொடும்கரங்களில் அங்கம்மாளும் அவர் கணவன் குருவய்யாவும் சிக்கி சின்னா பின்னமான நிகழ்வு குறித்து 2011-ல் அங்கம்மாள், நக்கீரனிடம் தனது குமுறலைக் கொட்டியதை விரிவாகப் பதிவிட்டிருந் தோம். அது இப்போதும் ஈரக்குலையை நடுங்க வைக்கிறது. அது வருமாறு...
""என்னோட கைதான பெருமாளும் அவர் மனைவி பஞ்சம்மாவும் வயசானவங்க. அவள போலீஸ்காரனுக ஒண்ணும் பண்ணல. என்னைத்தான் பாடாய் படுத்திட்டானுக. அப்புறம் மூணு நாளும் இதே சித்திரவதைதான். ஆனாலும் ஒரு நிம்மதி. ரத்தமும் நாத்தமுமா வீசிக் கெடந்த என்கிட்ட எந்தப் போலீசும் கெட்ட நோக்கத்தோடு அப்புறம் வரல.
அஞ்சு நாளாச்சு.. அடிச்ச அடில என் புருஷனுக்கு ஆணுறுப்பே இல்லாம சிதைஞ்சு போச்சு. பேசக்கூட முடியாம முனங்கினாரு. நெஞ்சு அடைக்குது அங்கம்மா... நான் செத்துப் போயிருவேன். ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போன்னாரு. ஒவ்வொரு போலீஸ்காரன் கால்லயும் விழுந்தேன். "செத்தாச் சாகுறான்'னு ஈவிரக்கமில்லாம சொன்னானுக. ஆறாம் நாத்துதான் போலீசுக்கு ஒரு பயம் வந்து நர்ஸ விட்டு ஊசி போடச் சொன்னானுக. அப்புறம் ஆஸ்பத்திரிக்கு வேன்ல ஏத்திட்டுப் போனானுக. ஏழாம் நாத்து பேச்சு மூச்சில்லாமக் கிடந்தவரைத்தான் கண்ணுல காட்டுனானுக.
ஒங்க மேல ஒரு தப்பும் இல்ல. வீட்டுக்கு அனுப்பு றோம்னானுக. குத்துயிரும் குலை உயிருமா கெடந்த எம்புருஷனப் பார்த்துட்டு கூட்டியாந்த போலீச சத்தம் போட்டாரு டி.எஸ்.பி. ஒரு ஆஸ்பத்திரில சேர்த்தாரு. இந்தக் கேடுகெட்ட ஒலகத்துல வாழ்ந்தது போதும்னு நெனச்சாரோ என்னமோ, அங்கயே எம்மடில உசிரவிட்டுட்டாரு மவராசன். நாங்க தினமும் செத்துக்கிட்டே இருக்கோம்'' என்றவர், அந்த ஒம்பது போலீசுக்கும் தண்டனை வாங்கிக் கொடுத்துட்டுத்தான் நான் கண்ணை மூடுவேன்'' என்று தரையில் மாறி மாறி அடித்தார்.
அவரது மகன்களில் ஒருவரான பழனி, அம்மாவின் வைராக்கியத்தை நிறைவேற்றுவோம் என்று உறுதியான குரலில் சொன்னதோடு, தங்கள் அம்மா போல போலீசால் பாதிக்கப்பட்ட அத்தனை அம்மாக்களுக்காகவும் போராடுவோம் என்றவர், ""அதுக்குத்தான் எங்க மூத்த அண்ணன் மலைச்சாமி எம்.எல். படிச்சு வக்கீலாயிருக்கான். அம்மாவுக்காக அரசு வழக்கறிஞருக்கு உதவியா அவனும் ஆஜராகப் போறான்'' என்று கண் கலங்கினார்.
ஆர்.டி.ஓ. விசாரணைக்குப் பிறகு 9 போலீஸார் மீது உசிலம்பட்டி நீதிமன்றத்தில் வழக்கு பதிவானது. மூன்று தவணைகளில் மொத்தம் ரூ.3 லட்சத்தை அங்கம்மாளுக்கு தற்காலிக நிவாரணமாக வழங்கியது அரசாங்கம். மதுரை மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அங்கம்மாளை அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். இந்த 9 பேர் உட்பட சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரிந்த 17 போலீஸார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. 28-4-1998ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் 6-வது எதிரியான ராமசாமி. 16-9-2009ல் மற்ற எட்டு போலீசாரும் சஸ்பெண்ட் ஆனார்கள். டி.எஸ்.பி. தங்கப்பாண்டியனுக்கு ஓய்வூதியத்தை ரத்துச்செய்து விட்டது அரசாங்கம். 5-வது எதிரி தனுஷ்கோடி கடந்த ஆண்டு இறந்து போனார். ஆனாலும், சஸ்பெண்ட் ஆனவர்கள் ‘ஸ்டே வாங்கி பணிகளில் தொடரவே செய்கிறார்கள். வழக்கு உசிலம்பட்டியில் நடந்தால், விசாரணை முறையாக இருக்காது என சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட் போட்டார் அங்கம்மாள். உடனே இந்த வழக்கு ஆண்டிபட்டிக்கும் தொடர்ந்து தேனி கோர்ட்டுக்கும் மாற்றப்பட்டது. காவல்துறையினருக்கு எதிராக 13 ஆண்டுகளாக வழக்கு இழுத்துக் கொண்டே போகிறது.
அங்கம்மாள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் அவரது மகன் மலைச்சாமி நம்மிடம், ""எங்க அப்பா செத்தப்ப நான் எட்டு படிச்சிட்டிருந்தேன். மக்கள் கண்காணிப்பகம் உதவியால வக்கீலுக்கு படிச்சேன். நீதிமன்றமே போலீசாரைப் பார்த்து தப்பு பண்ணியிருந்தா ஒத் துக்கொள்ளுங்கன்னு கண்டிச்சும் வழக்கு முடியலை. சொத்தையெல்லாம் வித்து நீதி கேட்டு 13 வருஷமா எங்கம்மா போரா டிட்டிருக்காங்க. நாங்க நல்ல தீர்ப்புக்காக உறுதியுடன் போராடிக்கிட்டிருக் கோம்'' என்றார் தீர்ப் பை எதிர்நோக்கி.
""அங்கம்மா ளின் சித்ரவதை அனுபவங்களே இங்கு மறு வாழ்வு மையமாக எழுந்து நிற்கிறது. பாதிக்கப் பட்டோர் உரிமை என்றெல்லாம் நாங்கள் முன்னெடுக்கும் முன் முயற்சிகளுக்கு இவரே முன்னோடி'' என்று பெருமிதத்தோடு சொல்கிறது, மதுரை யில் இயங்கி வரும் மக்கள் கண்காணிப்பகம்.
-இப்படியாக 2011ல் நக்கீரனில் பதி வாகியிருந்தது. அதன் பின் என்ன நிலவரம்?
நகை திருட்டு குறித்து குருவையா, அங்கம்மாள்மீது புகார் எதுவும் இல்லை. முதல் தகவல் அறிக்கையே எழுதவில்லை. ஆனாலும், அவர்கள் வசித்த எல்லைக்குள்ளேயே வராத சம்பந்தமில்லாத வெவ்வெறு காவல் நிலையங்களில் 7 நாட்களாக அடைத்து வைத்து சித்திரவதை செய்திருக்கிறார்கள். விசாரணைக்கு பெண்களை அழைக்கும்போது காவல்துறை கடைப்பிடிக்க வேண்டிய நெறி முறைகள் எதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தின் கட்டளைகள் அப்பட்டமாக மீறப்பட்டிருக்கின்றன’என பாயிண்டுகளை முன்வைத்து வாதாடினார் அங்கம்மாளின் மகனும் வழக்கறிஞருமான மலைச்சாமி.
போலீஸ் தரப்பிலோ, குருவையாவையும், அங்கம்மாளையும் நாங்கள் யாரும் காவல் நிலையத்துக்கே அழைத்துப் போகவில்லை. பிராந்திக் கடைக்கே வந்து குடிக்கும் பழக்கம் அவர்களுக்கு உண்டு. அப்போது சிலருடன் ஏற்பட்ட சண்டையில்தான் ரத்தக்காயங் கள் ஏற்பட்டிருக்கிறது’என்று பொய் சாட்சிகளை முன்னிறுத்தினர். இது நீதியின் முன் எடுபடவில்லை. எனினும்…2016-ல் உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை இவ்வழக்கில், நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். அதனால், இந்த வழக்கின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர் என்று தீர்ப்பளித்தது.
அங்கம்மாளின் சளைக்காத போராட்டம், அரசுத் தரப்பின் அலட்சியத்தால் வீணானது. சட்டத்தின் ஓட்டைகள், குற்றவாளிகளைக் காப்பாற்றின. அங்கம்மாளின் மகனும் வழக்கறிஞருமான மலைச்சாமி, தற்போது ஊட்டி - குன்னூரில் மலைவாழ் மக்களின் நலனில் அக்கறை செலுத்தி, சேவையாற்றி வருகிறார். அவரைத் தொடர்பு கொண்டோம். ""நான் வேறென்ன சொல்ல முடியும்? பதினெட்டு வருடங்களாக நீதிக்காகப் போராடிய தெல்லாம் வீணாப்போச்சு. எங்களைப் பொறுத்த மட்டிலும் நீதி செத்துப்போச்சு!'' என்றார் குமுறலுடன்.
ஊமச்சிகுளம்-கருப்பாயூரணி காவல்நிலைய சித்ரவதைகளில் கொல்லப்பட்டதுபோல சாத்தான்குளம் கொடூரத்திலும் நீதி பலியாகிவிடக்கூடாது.
-ராம்கி
_______________
குற்றஞ்சாட்டப்பட்டோர் என்ன சொல்கிறார்கள்?
(1) எம்.பி. மகாலிங்கம், காவல் நிலைய ஆய்வாளர், எழுமலை காவல் நிலையம். (2) ,ஏ.ஞானசேகரன் (காவலர் எண் 1769) ஊமச்சிகுளம் காவல் நிலையம், (3) சி.சிங்களன், தலைமைக் காவலர் எண் 615, உசிலம்பட்டி காவல் நிலையம், (4) சி.குணபாலன், காவலர் எண் 727, உசிலம்பட்டி காவல் நிலையம், (5) எம்.தனுஷ்கோடி, தலைமைக் காவலர் எண் 1221, சாப்டூர் காவல் நிலையம், (6) ராமசாமி, காவல் சார்பு ஆய்வாளர், கருப்பாயூரணி காவல் நிலையம், (7) எஸ்.சங்கர், முதல் நிலைக் காவலர் எம்.ஆர். 9187, கருப்பாயூரணி காவல் நிலையம், (8) கணேஷ்குமார், காவலர் எண் 1676, கருப்பாயூரணி காவல் நிலையம், (9) ஜெயராஜ், காவலர் எம்.ஆர்.533, சிலைமான் காவல் நிலையம் என காவல் துறையினர் 9 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அப்போது அவர்கள் பணியாற்றிய காவல் நிலையங்களின் ஊர் பெயரைக் குறிப்பிட்டு வழக்கு பதிவாகியிருக்கிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் 6 வது நபரான ராமசாமி, பதவி உயர்வு பெற்று தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணி புரிகிறார். அவரைத் தொடர்பு கொண்டோம். ""பாலியல் ரீதியாக துன்புறுத்தி வன்புணர்ச்சி செய்ததாக உங்களைக் குற்றம் சாட்டுகிறாரே அங்கம்மாள்...?''’ எனக் கேட்டோம்.
""அப்ப எல்லாப் பத்திரிகைலயும் அப்படித்தான் செய்தி வந்துச்சு... அப்படி எதுவும் கிடையாது. அங்கம்மா என்னை மட்டும் சொல்லியிருக்க மாட்டா... என் பெயரையும் சொல்லியிருக்க மாட்டா.. வழக்கு கோர்ட்ல இருக்கு. இதைப் பத்தி நான் எதுவும் சொல்ல முடியாது'' என்று மறுத்தார்.