விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், வனத்துறை அலுவலகத் திலுள்ள கழிவறையில் உயிரிழந்தார். தூக்கிட்டுத் தான் தற்கொலை செய்து கொண்டார் என வனத்துறை அறிவிக்க, "இல்லையில்லை, சட்டவிரோதக் காவலில் வைத்து இரண்டு நாட்களாக அடித்துக் கொன்ற பின் தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடுகிறது வனத்துறை. இதுவும் லாக்கப் டெத்தே'' என போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் இறந்தவரின் உறவினர்களும், கம்யூனிஸ்ட் கட்சியும்.

"உடுமலைப்பேட்டை அருகே மேல்குருமலையில் விவசாயமும், மூணார் அருகே சூரியநெல்லியில் மளிகைக் கடையும் நடத்தி வருகின்றோம். எங்களுக்கு சிந்து, ராதிகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பாக குருமலையில் கஞ்சா பயிரிட்டதாக என்னுடைய கணவர் மாரிமுத்து உட்பட நான்கு நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது வனத்துறை. இதில் கடந்த ஜூலை 29 அன்று நீதிமன்றத்தால் அவர் விடுதலை செய்யப்பட்டார். இதுமாதிரி பல பொய்க்கேசுகளை வனத்துறை என்னுடைய கணவர் மீது அவ்வப்போது ஜோடித்தாலும் நீதிமன்றத்தின் உதவியால் பலமுறை கைது முயற்சியிலிருந்து தப்பி, தான் நிரபராதி என்பதை அவர் நிரூபித்திருந்தார். இதனாலயே என் கணவர் மீது வனத்துறையினருக்கு கடும் கோபம் உண்டு. கஞ்சா வழக்கிலும் என்னுடைய கணவர் விடுதலையாக, கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளது வனத்துறை. 

 வழக்கறிஞர் நீதிமன்றத் தீர்ப்பை பெற்றுக்கொள்ள அழைக்கையில், மூணாறிலிருந்து உடுமலைப்பேட்டைக்கு வந்து நீதிமன்ற தீர்ப்பினைப் பெற்றுக்கொண்டு உடுமலைப்பேட்டையிலிருந்து மீண்டும் மூணாறுக்குவர மதியம் 2 மணி பேருந்தில் ஏறியிருக்கின்றார். அதன்பின் எந்தத் தகவலும் இல்லை. இப்பொழுது பாத்ரூமில் தற்கொலை செய்துகொண்டதாக உடுமலைப்பேட்டை வனத்துறை கூறுகிறது. என் கணவர் தைரியமானவர், தற்கொலை செய்திருக்கமாட்டார். எனது கணவரின் உடலை உயரதிகாரிகள் முன்னிலை யில் உடல்கூராய்வு செய்ய வேண்டும். அதை வீடியோ பதிவு செய்யவேண்டும். வனத் துறையினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார் இறந்த மாரிமுத்துவின் மனைவியான பாண்டியம்மாள்.

Advertisment

lackup1

வனத்துறையின் செய்தியறிக்கையோ, "கேரளா செல்லும் பேருந்தில் மாரிமுத்து பயணித்தபோது, கேரள கலால் துறையினர் பிடித்து, கஞ்சா வழக்கு தொடர்பாக விசாரித்தபோது அவரிடம் ஒரு சிறுத்தைப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் விசாரித்து, கேரளா, சின்னார் வனவிலங்கு சரணாலயத் துடன் தொடர்புடைய ரேஞ்சரிடம் ஒப்ப டைத்தனர். அவர்கள் விசாரித்திருக்கிறார்கள். பின்னர், உடுமலைப்பேட்டை வனச்சரகரும், வனவரும் விசாரணைக்காக சின்னாருக்குச் சென்றனர். விசாரணையில், சங்கர் என்பவரிடமிருந்து சிறுத்தைப்பல் பெற்றதாக மாரிமுத்து ஒப்புக்கொண்டார். பின்னர், நள்ளிரவு 12.05 மணியளவில் உடுமலைப் பேட்டை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து மேலும் விசாரணை நடத்தினர். 31ஆம் தேதி அதிகாலை 4:30 மணியளவில், கழிவறைக்கு சென்றவர், லுங்கியை ஷவரில் கட்டி தூக்கில் தொங்கி உயிரிழந்தார்' என்றது.

இவ்விவகாரம் மலை முழுவதும் எதிரொலிக்க கம்யூனிஸ்ட் கட்சியினரும் (எம்), மலைவாழ் மக்கள் சங்கத்தினரும், இறந்த மாரிமுத்துவின் உறவினர்களுடன் ஒன்றுகூடி, கொலைக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மலைவாழ் மக்கள் சங்கத்தினரோ, "மாரிமுத்து கையில் புலிப்பல் வைத்திருந்ததாக கேரளா கலால்துறையினர் பிடித்ததில், அவர் உடுமலை வனத்துறை யினரிடம் ஒப்படைக்கப்பட, அந்த அதிகாரிகள், இரவு 10 மணி வரை மாரிமுத்துவை விசாரணை செய்வதாகக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். சின்னாறு சோதனைச் சாவடியிலும், உடுமலை வனச்சரக அலுவலகத்திலும் கடுமையாகத் தாக்கப்பட்ட மாரிமுத்து, கழிப்பறையில் தூக்கிலிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறுகிறது வனத்துறை. மாரிமுத்துவை வனத்துறை ஊழியர்களே அடித்துக் கொலை செய்துவிட்டு, பின்பு தூக்கிலிட்டிருக்க வேண்டும்'' என குற்றஞ்சாட்டுகின்றனர்.

Advertisment

மாரிமுத்துவின் உடல் பிரேத பரிசோத னைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில். எஃப்.ஐ.ஆரில் லாக் அப் டெத் என்று மட்டுமே பதிவு செய்யப்பட்டதாகவும், அதனுடன் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச்சட்டப் பிரிவையும் சேர்க்கக்கோரி மலைவாழ் மக்கள் சங்கத்தினர் காவல் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதே வேளையில், சம்பவ இடத்திற்கு இரவு 7.40 மணியளவில் வந்த, உடுமலை ஜே.எம்.1 நீதிமன்ற நீதிபதி நித்யகலா, சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து, 2 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து விசாரணை நடத்தியது மலைவாழ் மக்களுக்கு சற்று ஆறுதலளித்தது குறிப்பிடத் தக்கது.

"வனத்துறையினர் அளித்துள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்ட நேரமும், குடும்பத்தினர் சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்ட நேரமும் மாறுபட்டிருக்கிறது. ஒரு சமயம் புலிப்பல் என்றும், மறுசமயம் சிறுத்தைப்பல் என்றும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கின்றனர். தற்கொலை செய்துகொண்ட தாகக் கூறும் அவர்கள், அருகிலேயே மருத்துவமனை இருந்தும் மாரிமுத்துவை அழைத்துச் செல்லாதது ஏன்? இது லாக்கப் மரணமாக விசாரிக்கப்பட்டால் மட்டுமே மாரிமுத்துவின் மரணத்திற்கு விடை கிடைக்கும்'' என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.