2019ஆம் ஆண்டு மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட சிறுவன் முத்து கார்த்திக்கை போலீஸார் கடுமையாகத் தாக்கியதால் படுகாயமடைந்து உயிரிழந்த வழக்கில், காவல் ஆய்வாளர் அலெக்ஸ் ராஜ் மற்றும் காவலர்கள் சதீஷ், ரவி, ரவிச்சந்திரன் உட்பட 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில், விசாரணை அதிகாரியாக இருந்த தற்போதைய காவல்துறை ஐ.ஜி. ராஜேஸ்வரி, புலன் விசாரணையை அரை குறையாகச் செய்துள்ளதாகவும், குற்றம்சாட்டப்பட்ட 4 காவலர்களுக்கு உதவும் நோக்கத்தில் புலன் விசாரணையை முறையாகச் செய்யாமல், காவல்துறை ஐ.ஜி. ராஜேஸ்வரி தவறு செய்துள்ளதாகவும், அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறை இயக்குநருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், உடற்கூராய்வின்போது காயங்களை மறைத்து அறிக்கை அளித்த அரசு மருத்துவர் ஜெயக்குமார் மற்றும் மருத்துவ அலுவலர் ஆர்.எம்.ஓ. ஸ்ரீலதா மீதும் துறைரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிபதி ஜோசப்ஜாய் தீர்ப்பளித்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தீர்ப்பு வெளியானதும், நீதிமன்றத்திற்கு வெளியே இருந்த கொலைசெய்யப்பட்ட சிறுவன் முத்து கார்த்திக்கின் அம்மா ஜெயா நம்மிடம் பேசினார். "நான் பூ விற்கிறேன். எனது கணவர் லோடுமேனாக கூலி வேலை பார்த்து, அதில் வரும் வருமானத்தில் தான் என் ஒரே மகனை வளர்த்தேன். எங்க கஷ்டத்தை பார்த்து அவனே பத்தாவது முடித்ததும், நானும் வேலைக்கு போறேன் என்று சொல்லிவிட்டு எங்களுக்காக வேலைக்கு போனான். வேலை பார்த்த இடத்தில் எனது மகனை நகைத்திருட்டு தொடர்பாக எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்று, சிறுவனென்றும்கூட பார்க் காமல் அவனை கடுமையாகத் தாக்கினார்கள். இதனால் படுகாயமடைந்து மூச்சுப்பேச்சே இல்லாத அளவுக்கு மோசமான நிலையிலிருந்த மகனை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு எனக்கு தகவல் கொடுத்தார்கள். பதறியடித்துக் கொண்டு அங்கு போனபோது அவன் பேச்சுமூச்சு இல்லாமல் கிடந்தான். உடம்பு முழுவதும் இரத்தக்காயங்கள் இருந்தன. முகம் வீங்கியிருந்தது.
"ஏன் சார், நகையை அவன் எடுக்கவில்லை என்கிறானே, என் வீட்டுக்கும் வந்து துலாவித் துலாவித் தேடினீர்களே, அப்புறம் ஏன் சார் இப்படி கண்ணுமுண்ணு தெரியாம அடித்து, குற்றுயிரும் கொலையுயிரு மாகப் போட்டிருக்கீங்க?' என்று கதறினேன். பிறகு அங்கிருந்த சிலரிடம் விசாரித்தபோது, என் மகனை திருடியதாக ஒத்துக்கொள்ளச் சொல்லி பூட்ஸ் காலால் மிதி மிதியென்று மிதித்திருக்கிறார்கள். அதனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்திருக்கிறான். இதையடுத்து, எனது மகன் இறப்புக்கு காரணமான எஸ்.எஸ். காலனி காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மருத்துவமனை வளாகத்திலேயே அழுது கூப்பாடு போட்டேன். என்னை மிரட்டி பாடியை வாங்கவைத்து அவசர அவரமாக போஸ்ட்மார்ட்டம் செய்ததாகக் கூறி ஏமாற்றி புதைத்துவிட்டார்கள்.
அவன் உடம்பில் இரத்தக்காயங்கள் இருந்தது. அதை மறைத்து போஸ்ட்மார்ட்டம் செய்யாமலேயே எந்த காயமும் இல்லை என்று பொய்யாக சான்றிதழ் அளித்தது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்த, "என் மகனை கொன்ற போலீஸ்காரர்கள், அதற்கு உடந்தையாக இருந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் உடலை தோண்டியெடுத்து நீதிபதி முன் போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும். மேலும் வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றவேண்டும்' என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர், காவல் ஆய்வாளர் அலெக்ஸ் ராஜ் மற்றும் காவலர்கள் சதீஷ், ரவி, ரவிச்சந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட 5ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
விசாரணை முடிவடைந்த நிலையில், காவல் ஆய்வாளர் அலெக்ஸ் ராஜ் மற்றும் காவலர்கள் சதீஷ், ரவி, ரவிச்சந்திரன் ஆகிய நால்வருக்கும் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ஜோசப்ஜாய் உத்தரவிட்டார். தீர்ப்பு என் மனதிற்கு ஆறுதலைத் தந்தாலும், "ஜெய்பீம்' படத்தில் வருவதுபோல், வழக்கு நடந்தபோது சாட்சிகளை அழிக்கவும், என்னை பல்வேறு வழிகளில் வழக்கை வாபஸ் வாங்க வைக்கச் செய்யவும் மிரட்டினார்கள். எனது வழக்கறிஞர்கள் ராஜா முகமது மற்றும் பஷீர் சாருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவர்களால் தான் என்னை மிரட்டிய ஆய்வாளர் பிரேம சந்திரன், சார்பு ஆய்வாளர் கண்ணன், மற்றொரு ஆய்வாளர் அருணாச்சலம் ஆகியோரை பணி நீக்க உத்தரவு போட்டுள்ளார்கள். மேலும், உண்மையை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்ட, இப்போது ஐ.ஜி.யாக இருக்கும் இராஜேஸ்வரியிடம் தான் என்னுடைய மகனின் சாவை தாங்கமுடியாமல் பலமுறை முறையிட்டேன். பழம்பெரும் சுதந்திரப்போராட்ட தியாகி யும் காந்தியவாதியுமான கக்கனின் பேத்தியான இராஜேஸ்வரி, நேர்மையாக செயல்படுவார், எனக்கு ஆதரவாக இருப்பாரென்று மிகவும் நம்பினேன். ஆனால் அவரோ, என் மகனை கொன்ற போலீஸா ருக்கு சாதகமாகவும், மருத்துவர் களின் போலியான போஸ்ட் மார்ட்டத்திற்கு உடந்தையாகவும் இருந்தார். இவ்வளவு பிரச்சனைகளையும் கண்டும்காணாததுபோல் போலீசாரின் மோசடிகளுக்கு ஆதரவாக இருந்தார். அப்போதே சொன்னேன், "பெத்த மகனை இழந்து நிர்க்கதியாக நிற்கிறேன், வயிறு எரிஞ்சு சொல்றேன், புத்திரசோகத்தின் சாபம் பலிக்கும், எல்லோரும் ஒருநாள் ஜெயிலுக்கு போவீங்க, தாயின் கண்ணீருக்கு ஒரு நாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்' என்று சாபம் விட்டுத்தான் வந்தேன். அது இன்று பலித்தேவிட்டது. இதுதான் கொஞ்சம் ஆறுதலை அளிக்கிறது'' என்றார்.
இந்த தீர்ப்பு கூறித்து மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிஃபென் நம்மிடம், "இந்த சம்பவம் நடைபெற்றபோது மதுரை மாவட்ட போலீஸ் கமிஷனராக இருந்தவர் டேவிட்சன் தேவஆசிர்வாதம். இவ்வளவு கொடுமைகள், அக்கிரமங்கள் செய்த அந்த நான்கு காவலர்களையும் கைது செய்யவே இல்லை. 2025 வரை வெளியேதான் இருந் தார்கள். இவ்வளவு அக்கிரமம் நடந்த காவல் நிலையத்தை, தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாகத் தேர்வுசெய்யக் காரணமாக இருந்தவர்களில் கக்கனின் நல்மதிப்பைக் கெடுக்கும்விதமாக செயல்பட்ட கக்கன் பேத்தி ராஜேஸ் வரியும் ஒருவர். அவர்மீது துறைரீதியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு போட்டது வரவேற்கத்தக்கது. இதைவிடக் கேவலம், போஸ்ட் மார்ட்டம் செய்யாமலேயே ஆர்.எம்.ஓ. லதா, போஸ்ட்மார்ட்டம் செய்ததாக ரிப்போர்ட் கொடுத்தது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு 20 லட்சத்தை கொடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கொடுக்காமல் இழுத் தடித்தது கண்டிக்கத்தக்கது. மாவட்ட கீழமை நீதிமன்றம் இப்படி ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றார்.
இந்த தீர்ப்பு குறித்து, இந்த வழக்கை பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மிரட்டல்களுக்கும் மத்தியில், நடத்திய வழக்கறிஞர் பஷீர் நம்மிடம், "அதிகார வர்க்கம் சாதாரண மக்களை தங்கள் இஷ்டப்படி விசாரணை என்ற பெயரில் அடித்தே கொல்லும் என்பது எவ்வளவு பெரிய அநியாயம். போன உயிர் போனதுதான். தாயின் போராட்டத்தால் தான் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு கிடைத்திருக்கிறது. அதேபோன்று குற்றவாளிகள்தரப்பு மேல் முறையீட்டுக்கு செல்லும்போது அரசு தரப்பு பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்கவேண்டும் என்பதையும் கேட்டுக்கொள் கிறோம். அதேபோன்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்ட 25 லட்சத்தில் 5 லட்சம் மட்டுமே கொடுக்கப் பட்டுள்ளது. மிச்ச 20 லட்சத்தையும் உடனே கொடுக்க வேண்டும். மேலும், அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை போட்டுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்'' என்றார். கக்கனின் பேத்தி, அநீதிக்கு துணை நின்றது வரலாற்றுத் துயரம்!