சென்னை காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. அண்மையில், சென்னை தலைமைச் செயலகக் காலனி காவல் நிலையத்தில் விசாரணையில் உயிரிழந்த விக்னேஷுக்கு அடுத்ததாக, தற்போது சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராஜசேகர் உயிரிழந்துள்ளார்.

mm

கொடுங்கையூர் ஆர்.வி. நகரில் வசித்துவரும் ஐ.எஸ். இன்ஸ்பெக்டர் சந்திரபோஸ் வீட்டிலேயே ஆறு மாதங் களுக்குமுன் 10 பவுன் நகை திருடு போயுள்ளது. இதனை வழக்காகப் பதிவுசெய்தால் அவமானமாக இருக்குமென்ப தால், தன்னுடைய நண்பரான கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லரைச் சந்தித்து, மறைமுகமாக விசாரிக்கச் சொல்ல, அவரும் விசாரணையில் இறங்கியிருக்கிறார். விசாரணையில் எத்தகவலும் கிடைக்காத நிலையில், நகைத்திருட்டுக்கேற்ற நபரைத் தேடும்போதுதான், தலைமைக் காவலரான ஜெய்சங்கர், திருவள்ளூர் மாவட்டம், அலமாதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரைக் கை காட்டியிருக்கிறார். ராஜசேகர்மீது, நகைத்திருட்டு உட்பட மொத்தம் 23 வழக்குகள் இருந்துள்ளன. எனவே அவரிடம் விசாரித்தால், எதிர்பார்ப்பதற்கு மேலேயே கிடைக்கும் என்று தகவல் கொடுத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, எஸ்.ஐ. கன்னியப்பனிடம் இவ்விசாரணையை ஒப்படைத்துள்ளார்.

Advertisment

mm

விசாரணையில் இறங்கிய எஸ்.ஐ டீம், வியாசர்பாடியைச் சேர்ந்த ராஜசேகரின் "கீப்'பை பிடித்து விசாரித்தனர். அவரின் ஒத்துழைப்புடன், ராஜசேகர், அப்பு என்கின்ற கலையரசன் ஆகிய இருவரையும் காவல்துறை பிடித்தது. இருவரையும் கொடுங்கையூர் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வராமல், எவரெஸ்ட் காலனியுலுள்ள போலீஸ் பூத்தில் வைத்து எஸ்.ஐ. விசாரித்ததில் தகவல் கிடைக்காததால், இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் விசாரணையில் இறங்கியுள்ளார். அவரது கடுமையான விசாரணையில், வலி தாங்கமுடியாமல், செங்குன்றத்திலுள்ள கூட்டாளியிடம் நகைகள் இருப்பதாகப் பொய் சொல்லியிருக்கிறான் ராஜசேகர். அவன் குறிப்பிட்ட இடத்தில் நகைகளை மீட்கமுடியாததால் கோபத் தின் உச்சத்துக்குச் சென்று இன்ஸ்பெக்டர் கண்மூடித்தனமாக அடிக்கவே, சிறிது நேரத்தில் பேச்சுமூச்சில்லாமல் சுருண்டு விழுந்திருக்கிறான். உடனே, பக்கத்திலுள்ள பவித்திரா மருத்துவமனைக்கு ராஜசேகரை அழைத்துச்செல்ல, அப்போதே அவரது உடல்நிலை குறித்து அவர்கள் சந்தேகத்தோடு சொல்ல, அங்கிருந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே ராஜசேகர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

உடனடியாக, ராஜசேகரிடம் விசாரணை நடத்தியபோது உடனிருந்த சாட்சியான அப்பு (எ) கலையரசனை போலீசார் பாதுகாப்பான இடத்தில் மறைத்தனர். எனினும் விவகாரம் பெரிதான நிலையில், அப்பு கைது செய்யப்பட்டான். விசாரிக்கும்போது எப்படிப் பேச வேண்டுமென்று அப்புவிடம் போலீசார் பாடம் நடத்தியே அழைத்துவந்ததாகக் கூறப்படுகிறது. சென்னை கமிஷனர் சங்கர் ஜுவால் உத்தரவின்படி, கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமைக் காவலர்கள் ஜெய் சேகர், மணிவண்ணன், காவலர் சத்தியமூர்த்தி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

muy

செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வடக்கு மண்டல காவல் கூடுதல் ஆணையர் அன்பு, "ஓரிரு சம்பவங்களை வைத்து காவல்துறைக்கு வேறொரு கலரில் பெயிண்ட் அடிப்பது சரியில்லை. தொடர்ச்சியாக மரணம் நடக்கிறது எனச் சொல்ல முடியாது. புலன் விசாரணை நடத்துவது காவல்துறையின் கடமை. விசாரணையின்போது, மதியம் 1 மணிக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரி சோதனையில் நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், மாலை 4 மணிக்குத்தான் ராஜசேகருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது ராஜசேகர் இறந்துவிட்டார்'' எனத் தெரிவித்தார். தற்போது, இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டதோடு, மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ராஜசேகரின் தாய் உஷாராணி, சகோதரர் மணிகண்டன் ஆகியோரிடம் புகார் மனுக்களைப் பெற்றுக்கொண்டு மேஜிஸ்திரேட் லட்சுமி விசாரணையைத் தொடங்கியுள்ளார். மேஜிஸ்திரேடிடம் சகோதரர் மணிகண்டன், தம்பி ராஜசேகரின் வயிற்றுப்பகுதியில் உதைத்த தடயமும், ரத்தக்கசிவும் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். உடனடியாக மேஜிஸ்ட்ரேட் லட்சுமி தலைமையிலான குழு வினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், மனித உரிமை ஆணையமும் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. சென்னை மாநகரக் காவல் ஆணையர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல்செய்ய ஆணையத் தலைவர் பாஸ்கரன் உத்தரவிட்டார்

இதுகுறித்து பேசிய மணிகண்டன், "என்னுடைய தம்பி போலீசாருடன் தொடர்பில் இருந்தவன்தான். அவர்கள் சொல்லும் பணியைச் செய்து வந்தவன். இப்படிப்பட்ட ஒருவரைப் பிடித்து அடித்து உதைத்துக் கொலை செய்துள்ளார்கள். என் தம்பி இறந்த பிறகுதான் அவனைப் பிடித்து விசாரித்த தகவலையே கொடுத்தார்கள். இது திட்டமிட்டே செய்த கொலை. மனித உரிமை ஆணையத்தின் விசாரணை யிலும் இந்த தகவலைக் கொடுத்துள்ளோம்'' என்றார். தி.மு.க. ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததி லிருந்து ஏழாவது லாக்கப் டெத் என்ற நிலையில், இதைத்தடுக்க தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்பதே மக்களிடம் எழும் கேள்வி.