மிழகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மட்டுமே மருத்துவக் காப்பீடு திட்டம் செயல்பட்டுவந்த நிலையில், நாடு முழுவதுமுள்ள பத்துகோடி குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீட்டு திட்டம்’’ என்று பிரதமர் மோடியின் அறிவிப்பு வரவேற்பைவிட பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் உருவாக்கியிருக்கிறது.

இதுகுறித்து, இளைஞர் இயக்கம் டாக்டர் எழிலன் நம்மிடம், ""சுகாதாரம் பொதுப் பட்டியலில் இருந்தாலும் பொது சுகாதாரம் என்பது இன்னும் மாநிலப் பட்டியலில்தான் உள்ளது. அதற்குள்ளும் மூக்கை நுழைக்கிறது மத்திய அரசு. பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கும் நிதியை அதிகப்படுத்தவேண்டும் என்று உலக சுகாதாரநிறுவனம் பரிந்துரைத்துக் கொண்டிருக்கும் சூழலில் மத்திய அரசானது பொது சுகாதாரத்திற்கு வருடத்துக்கு .9 சதவீதம்தான் பட்ஜெட்டில் நிதி ஒதுக்குகிறது. அரசு மருத்துவமனைகளில் நிரப்பவேண்டிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நிரப்பி கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்தி அரசு மருத்துவமனைகளை மக்களுக்கான மருத்துவமனைகளாக மாற்றுவதற்குப் பதிலாக இன்சூரன்ஸ் திட்டம் என்பது ஏழை எளிய மக்களுக்கான நிரந்தர தீர்வு அல்ல''’என்கிறார் அவர்.

modiinsurance

Advertisment

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்திடம் நாம் கேட்டபோது, “""ஆட்சிக்கு வந்து 4 வருடங்கள் கழித்து தேர்தலை மையப்படுத்திதான் இத்திட்டத்தையே அறிவித்திருக்கிறார் மோடி. ஏற்கனவே, "ராஷ்ட்ரியா யோஜனா' என்கிற திட்டத்தில் 2,000 கோடி நிதியை ஒதுக்கி தற்போது கூடுதலாக 2,000 கோடி நிதி ஒதுக்கி புதிய இன்சூரன்ஸ் திட்டம்போல் காண்பித்துக்கொள்கிறார். 60 சதவீத நிதியைத்தான் இத்திட்டத்திற்கு மத்திய அரசு வழங்குகிறது. மீதமுள்ள 40 சதவீத நிதியை மாநில அரசுகள் ஒதுக்கிக்கொள்ள வேண்டும். ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு இத்திட்டத்தை செயல்படுத்துவதுபோல் தோற்றத்தை உருவாக்குகிறது. இது மாநில உரிமையை பறிக்கும் செயல். ஏற்கனவே, நீட் தேர்வு மூலம் மருத்துவக் கல்வியை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு போய்விட்டது. தற்போது, மருத்துவத்தையும் கொண்டு செல்ல முயற்சித்துக்கொண்டிருக்கிறது. இதைவிடக் கொடுமை, இத்திட்டத்திற்காக இதயம், நுரையீரல், கேன்சர் சிகிச்சைகளை தனியார் மருத்துவமனைகள் நடத்த, மாவட்ட மருத்துவமனைகளில் 50 படுக்கைகளை தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கவேண்டும் என்கிறது மத்திய அரசு.

ஏற்கனவே, தமிழகத்தில் அனைத்துவித பரிசோதனைகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் பணம் கட்டவேண்டிய நிலைதான். எந்த அறுவை சிகிச்சையாக இருந்தாலும், காப்பீடு அட்டை இருக்கிறதா? இல்லைன்னா ஆபரேஷன் பண்ணமுடியாது’ என்று சொல்கிறார்கள். இப்படி தனியார் மயமாக்கி, அரசு மருத்துவமனைகளுக்கு பூட்டு போட்டுவிட்டு சுகாதாரத்துறையையே தனியார்மயமாக்கப் போகிறார் மோடி.

தலைநகரிலுள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒருநாளைக்கு 10,000 புறநோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள். இத்திட்டத்தின்மூலம் புற நோயாளிகளுக்குப் பயன் கிடைக்காது. தற்போது வருடத்திற்கு 54,000 கோடி ரூபாய் நிதியை மக்கள் நல்வாழ்வுக்காக ஒதுக்கியிருக்கிறது. இந்த, நிதியை குறைத்துவிட்டு காப்பீட்டு திட்டத்திற்கு வருடத்துக்கு 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கவேண்டிய நிலை வரும். இந்த நிதியில் 43 சதவீதத்தை மல்டிநேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்தான் சாப்பிட்டு ஏப்பம் விடும். இதே நிதியை பொது சுகாதாரத்துக்கு ஒதுக்கினால் தனியார் மருத்துவமனைகளை நம்பாமல் அனைத்து சிகிச்சைகளையும் அரசு மருத்துவமனைகளிலேயே இலவசமாக செய்துகொள்ள முடியும். வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களைத் தவிர்த்து மிடில் க்ளாஸ் குடும்பங்களுக்கு கிடைத்து வந்த இலவச மருத்துவமும் கிடைக்காமல் போய்விடும். இதனால், வேறு வழியில்லாமல் அவர்களும் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்களை நாடவேண்டிய நிலை ஏற்படும்.

Advertisment

modiinsuranceமேலும், அரசு ஆரம்ப சுகாதார நிலைங்களுக்குக் கீழ் 1 லட்சத்து 50,000 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. இதை, அப்படியே சுகாதார மற்றும் நல மையங்களாக மாற்றி கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் ஒப்படைக்கப்போகிறது மோடி அரசு. இதன் நோக்கமே, அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளை பெயர் மாற்றி கார்ப்பரேட் கையில் கொடுப்பதுதான். இப்படி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகளையெல்லாம் தனியார்மயமாக்கி இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்தி மிகப்பெரிய ஊழலாக உருவெடுக்கப்போகிறது''’’என்கிறார் முன்னெச்சரிக்கையாக.

இந்தியாவிலேயே ஆந்திராவை தவிர்த்து தமிழகத்தில்தான் முதல்முதலில் 1 நபருக்கு வருடத்திற்கு 1 லட்சம் என கலைஞர் இலவச காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகு, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் 1 நபருக்கு 2 லட்சம் எனவும் சில அறுவை சிகிச்சைகளையும் சேர்த்து முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்தவேண்டிய இத்திட்டத்தை அரசுத்துறையில் ஆரம்பித்து ஐ.டி. துறையில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறவர்கள்கூட காப்பீட்டு அட்டையை பயன்படுத்தி இலவச சிகிச்சை பெறுவதால் உண்மையான பயனாளிகள் முழுமையாக பயன்பெறமுடியவில்லை.

மேலும், ப்ளேட், ஸ்குரூ, ஸ்டெண்ட் உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்தி செய்யும் இம்ப்ளேண்ட் அறுவை சிகிச்சைகளுக்கு உரிய தொகையை நிர்ணயிக்காததால் நோயாளிகளிடம் அதிகம் கட்டணத்தை தனியார் மருத்துவமனைகள் வசூலிப்பதால், ஏழை நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், ஆதாருடன் இணைத்து சிலிண்டருக்கு மானியம் வழங்குவதுபோல சிகிச்சைகளுக்கும் மானியம் வழங்கி அரசு மருத்துவமனைகளுக்கு பூட்டு போட்டு, பணம் கொடுத்தால்தான் சிகிச்சை என்ற நிலைக்கு கொண்டுசெல்லப் போகிறது மோடியின் இன்சூரன்ஸ் திட்டம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவ உலகத்தினர்.

-மனோசௌந்தர்