நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ம.க., அ.ம.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்றவை மோதின. இதில், தேர்தல் பணிகளில் அ.தி.மு.க.வினர் ஆர்வம்காட்டாதது, செலவு செய்யாதது போன்றவையும் அ.தி.மு.க. மீது மக்களிடமுள்ள அதிருப்தியும் அதிகமிருந்த நிலையில், இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அடுத்தடுத்து களத்துக்கு வந்து சுற்றிச் சுற்றி தேர்தல் பிரச்சாரம் செய்தும் ரிசல்ட் பலன் தரவில்லை.
வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் மாவட்ட கவுன்சிலர் பதவிகளை மொத்தமாக அள்ளியது தி.மு.க. கூட்டணி. திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. மா.செவும், முன்னாள் அமைச்சருமான ரோல்ஸ்ராய்ஸ் புகழ் கே.சி.வீரமணியின் ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்துள்ளது. அந்த ஒன்றியத்திலுள்ள 15 கவுன்சிலர்களில் 11 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இப்படித்தான் மற்ற ஒன்றியங்களிலும்.
வேலூர் மாவட்டத்தில் 90 சதவித இடங்களை தி.மு.க. கைப்பற்றி அ.தி.மு.க.வுக்கு அதிர்ச்சி தந்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் காட்பாடியில் துரைமுருகனை திணறவிட்ட மக்கள், இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை அமோகமாக வெற்றி பெற வைத்துள்ளார்கள். மொத்தமுள்ள 21 வார்டுகளில் 19 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. ஒரே இடத்தில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. கீ.வ.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வாக புரட்சிபாரதம் பூவை.ஜெகன்மூர்த்தி உள்ளார். அந்த ஒன்றியத்தி லுள்ள 21 கவுன்சிலர்களில் தி.மு.க. 18 இடங்களை வாரியது.
அ.தி.மு.க. கூட்டணியிலுள்ள பா.ஜ.க.வுக்கு ஒன்றிய கவுன்சிலருக்கு சில இடங்கள் ஒதுக்கப்பட்டது. அ.தி.மு.க. துடைத்தெறியப்பட்ட நிலையில் பா.ஜ.க. அரக்கோணத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் நின்ற புரட்சிபாரதமும் மொத்தமாக இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தனித்து நின்ற பா.ம.க., மூன்று மாவட்டங்களில் அனைத்து ஒன்றியங்களிலும் தேர்ந்தெடுத்து தங்களுக்கு பலமுள்ள வார்டுகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. அதில் அரக்கோணம், சோளிங்கர், திமிறி, அணைக்கட்டு, கணியம்பாடி, குடியாத்தம், திருப்பத்தூர், நாட்றம்பள்ளி ஒன்றியங்களில் கணிசமாக வெற்றி பெற்றுள்ளது. சில ஒன்றியங்களில் ஒன்று, இரண்டு இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற, பாமக 4, 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சோளிங்கர், திமிறியில் அ.தி.மு.க.வை விட அதிகமாக பா.ம.க. வெற்றி பெற்றுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் பா.ம.க. கணிசமான வெற்றியை பெற்று அந்தகட்சிக்கு தெம்பை தந்துள்ளது.
தே.மு.தி.க.வில் உள்ளாட்சி தேர்தலில் நிற்க யாரும் முன்வரவில்லை. நிர்வாகிகள் கேட்ட இடங்களில் அதன் மா.செக்கள் வேட்பாளர்களை நிறுத்தினார்கள். தனித்து நின்றனர் தே.மு.தி.க. வேட்பாளர்கள். நாட்றாம்பள்ளியில் ஒன்றிய கவுன்சிலருக்கு செல்வி என்பவர் வெற்றி பெற்று அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். தே.மு.தி.க. போலவே டிடிவி.தினகரன் உள்ளாட்சி தேர்தலை கண்டுக்கொள்ளவில்லை. ஆனால் அந்த கட்சி நிர்வாகிகள் சொந்தப்பணத்தை செலவு செய்து சில இடங்களில் நின்றனர். அ.ம.மு.க. அரக்கோணத்தில் ஒரு ஒன்றியக்குழு கவுன்சிலர் இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் அ.தி.மு.க. வாக்குகளை அபகரித்துள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில், தனித்து நின்று அதிக வாக்கு வாங்கிய கட்சியென பிரச்சாரம் செய்தது நாம் தமிழர் கட்சி. இந்த உள்ளாட்சி தேர்தலில் சீமான் தேர்தல் நடந்த எல்லா மாவட்டத்துக்கும் சென்று, ஆளுங்கட்சியான தி.மு.க.வை கடுமையாக விமர்சனம் செய்தார். அந்த கட்சியினரும் தி.மு.க.வை விமர்சித்தே ஓட்டுக்களை கேட்டனர். எனினும், உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளனர். அதேபோல் மாற்றத்துக்கான கட்சியென பிரச்சாரம் செய்த கமலின் மக்கள் நீதி மய்யமும் 9 மாவட்டங்களிலும் வெற்றி பெறமுடியாமல் தவித்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாக கமல் களமிறங்கி பிரச்சாரம் செய்தும் இந்த நிலை. சீமான் தரப்பையும் கமல் தரப்பையும் கடுப்பேற்றியிருப்பது ஆளுங்கட்சியின் வெற்றி கூட அல்ல, விஜய் ரசிகர் மன்றத்தினரின் வெற்றிதான்.
தேர்தல் நடைபெற்ற 9 மாவட்டங்களில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் களத்தில் இறங்கியது. மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் போன்ற பெரிய மல்லுக்கட்டுகளில் கவனம் செலுத்தாமல் கிராம வார்டு மெம்பர் பதவிகளில் கவனம் செலுத்தி தோராயமாக 50 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2001 உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜயகாந்தின் ரசிகர் மன்றத் தினர் களமிறங்கி கணிசமாக வெற்றி பெற்றார்கள். அதன்பின் தான், விஜயகாந்த் தே.மு.தி.க. என்கிற கட்சியைத் தொடங்கி தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்தார். சரியாக 20 வருடங்களுக்கு பிறகு அதே அடிப்படையில் நடிகர் விஜய் மன்றத்தினரும் களத்தில் இறங்கி கிராம வார்டுகளில் சாதித்துள்ளார்கள். இது தமிழக அரசியலில் கவனிக்கப்பட வேண்டியது.