முதல்வரின் நிழலென வர்ணிக்கப்படும் சி.கார்த்திகேயன் திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சேர்மனாக பதவியேற்றிருக்கிறார்.
வட்டச் செயலாளரில் தொடங்கி ஆவின் சேர்மன் பதவியை வந்தடைந்திருக்கும் இவரது அரசியல் கிராப் சுவாரசியமானது. அ.தி.மு.க.வில் திருச்சி 18-வது வார்டின் வட்டச்செயலாளராக இருந்தவர். 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தனக்கு வ.செ. பதவி வேண்டாமென எழுதிக்கொடுத்துவிட்டு வெளியேறினார். கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் துணையோடு மித்ரா புரமோட்டர் எனும் ரியல் எஸ்டேட் தொழில் ஆரம்பித்தார்.
கார்த்திகேயனின் தந்தை திருச்சியில் துணை தாசில்தாராக இருந்தவர். ராமஜெயத்துடனான நெருக்கத்தின் மூலம் அப்பாவுக்கு திருச்சி மாநகர தாசில்தாராக கட்டாய பதவி உயர்வுகொடுத்து, திருச்சி மாவட்டத்திலுள்ள புறம்போக்கு நிலங்களை பட்டியலிட்டு, பட்டா போட்டுக்கொடுத்து பல கோடி திரட்டினார் என்றும் பேச்சு உண்டு. அப்போதே வெள்ள நிவாரணத்துக்குக் கொடுத்த பணத்தை முறைகேடு செய்தார் என்றும் புகார் எழுந்தது.
ஆட்சி மாறியது. அதைவிட வேகமாக அணிமாறினார் கார்த்திகேயன். கார்விபத்தில் இறந்த மரியம்பிச்சையுடனான நெருக்கம் சினிமா புரோக்கர்களுடனும் அதன்மூலம் அமைச்சர்கள் ரமணா, தங்கமணி, வேலுமணி ஆகியோருடனும் நெருக்கமாக மாறியது.
இந்த நெருக்கம் எடப்பாடி பழனிசாமிவரை கார்த்திகேயனை இட்டுச்சென்றது. திருச்சியின் மா.செ. சிபாரிசு இல்லாமலே மாவட்ட மாணவரணி பொறுப்பு கிடைக்கவும் அதுவே காரணமானது. அதன்பிறகு நெடுஞ்சாலைத் துறையில் திருச்சியிலிருந்து நாகப்பட்டினம் வரை அத்தனை அதிகாரிகளையும் கையில் வைத்துக்கொண்டு ட்ரான்ஸ்பரிலிருந்து டெண்டர்வரை முதல்வரின் நிழலாகவே மாறிவிட்டார் என்கிறார்கள்.
திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் ஆவின் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. திருச்சி கொட்டப்பட்டு நிர்வாக அலுவலகத்தில் நடந்த தேர்தலில் சி.கார்த்திகேயன் தலைவராகவும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தங்க. பிச்சைமுத்து துணைத்தலைவராகவும் போட்டியின்றித் தேர்வானார்கள்.
திருச்சி ஆவின் அலுவலகத்தில் வைத்து நடந்த பதவியேற்பு விழாவில் குமார் எம்.பி., ரத்தினவேல் எம்.பி., அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் பங்குபெற்றனர். அத்துடன் ஆவினின் முன்னாள் சேர்மனும் தற்போதைய அ.தி.மு.க. அமைப்புச் செயலாளருமான இளவரசனைச் சந்தித்து ஆசிபெற்றிருக்கிறார் கார்த்திகேயன்.
"கார்த்திகேயனின் எழுச்சி திருச்சி அரசியலில் புதிய அணியை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை' என்கின்றனர் அ.தி.மு.க.வினர்.
-ஜெ.டி.ஆர்.