உள்ளாட்சியில் நல்லாட்சி' என்கிற பிரகடனத்துடன் நிலுவையில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த தி.மு.க. திட்டமிட்டிருக்கிறது. அதன் ஒருகட்டமாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பழனிக்குமாரை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் கமிஷனராக கடந்தவாரம் நியமித்திருக்கிறார் கவர்னர் பன்வாரிலால்.
கமிஷனர் பொறுப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டதுடன் தேர்தல் தொடர்பான வழக்குகள், உள்ளாட்சி அமைப்புகளின் நிலை உள்ளிட்ட பணிகளை ஆராயத் துவங்கியுள்ளார் பழனிக்குமார். இதனால் சுறுசுறுப்பாகியிருக்கிறது மாநில தேர்தல் ஆணையம்.
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கு மட்டும் கடந்த 2019, டிசம்பரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. ஊராட்சி தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி கவுன்சிலர்களை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுத்தனர். இதில் அ.தி.மு.க. கூட்டணியை விட, அதிக இடங்களை கைப்பற்றியது தி.மு.க. கூட்டணி.
ஆனால், மாவட்ட பஞ்சாயத்து மற்றும் ஒன்றிய தலைவர்களுக்கு நடந்த மறைமுகத் தேர்தலில், சிலபல மாவட்டங்களில் தி.மு.க. கவுன்சிலர்களை வளைத்து தலைவர் பதவிகளை கைப்பற்றியது அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் கவுன்சிலர்கள் அணி மாறி வாக்களித்த சம்பவங்களும் நடந்தன.
இதற்கிடையே, சென்னையை தவிர காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி (அன்றைய சூழலில் மயிலாடுதுறை புதிய மாவட்டமாக பிரிக்கப்படவில்லை) ஆகிய 9 மாவட்டங்களில் அடங்கிய ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தலை கடந்த 2020, பிப்ரவரி -மார்ச் மாதங்களில் நடத்த அப்போதைய எடப்பாடி பழனிச்சாமி அரசு திட்டமிட்டது.
அந்த தேர்தலோடு தமிழகம் முழுவதுமுள்ள 125 நகராட்சிகளுக்கும் 529 பேரூராட்சிகளுக்கும் தேர்தலை நடத்தவும் திட்டமிட்டிருந்தனர். அதன்பிறகு, சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சி களுக்குமான மேயர் தேர்தலை தனியாக நடத்தவும் தீர்மானித்திருந்தது அ.தி.மு.க. அரசு .
ஆனால், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான வார்டு வரையறைப் பணிகள் குறித்த சிக்கல்களும், அது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்குகளும் குறுக்கிட்ட நிலையில், "வார்டு வரையறைப் பணிகளை 3 மாதங்களுக்குள் முடித்த பிறகே தேர்தலை நடத்த வேண்டும்' என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம். அது குறித்த பணிகள் முன்னெடுக்கபட்ட நிலையில், மார்ச் 24, 2020-ல் கொரோனா பெருந்தொற்று பரவலால் தேசம் முழுவதும் பொதுமுடக்கத்தை அறிவித்தார் பிரதமர் மோடி. பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டதாலும், சட்ட மன்றத் தேர்தல் நெருங்கியதாலும் நிலுவையிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை கைவிட்டது எடப்பாடி அரசு.
அப்படிப்பட்ட சூழலில், சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் தி.மு.க. வெற்றிபெற்று முதல்வ ராகியிருக்கும் மு.க.ஸ்டாலின், கொரோனாவின் இரண்டாம் அலையை முறியடிக்கும் பணிகளில் வேகம் காட்டிவரும் அதேநேரம், உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிடுவதாக தி.மு.க. வட்டாரங்களில் விவாதிக்கப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தல் குறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்களில் விசாரித்த போது, நிலுவையிலுள்ள உள்ளாட்சித் தேர்தலை நடத்த மூன்றுமாத கால அவகாசம் கொரோனா பரவலால் தள்ளிப் போடப்பட்டே வந்திருக் கிறது. கடந்த டிசம்பர், 2020-ல் இது தொடர்பாக வழக்கு விசாரணை சுப்ரீம்கோர்ட்டில் வந்த போது, "2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீடு மற்றும் வார்டு வரையறை பணிகளை முடித்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும்' என வலியுறுத்தினர்.
அப்போது, தேர்தல் ஆணையத்தின் சார்பில், "இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வார்டு வரையறை பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. ஆனால், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணங்களால் தேர்தலை நடத்தும் சூழல் இப்போது இல்லை. வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேவையான அளவில் இல்லை. அதனால், உள்ளாட்சித் தேர்தலை நடத்த 6 மாத காலம் அவகாசம் வேண் டும்' என வாதிடப்பட்டது. சட்டமன்றத் தேர்தலுக்கு எல்லா கட்சிகளும் தயாராகிக் கொண்டி ருந்ததாலேயே அந்த கோரிக்கை வைக்கப் பட்டது.
அதனையேற்று 6 மாதம் அவகாசம் தந்தது சுப்ரீம்கோர்ட் அந்த அவகாசம், இந்த மாதத்தில் முடிவடைவதால் உள்ளாட்சி தேர்தல் விசாரணை மீண்டும் வரவிருக்கிறது. அப்போது, மீண்டும் சில மாதங்கள் அவகாசம் கேட்க யோசித்துள்ளது ஆணையம். அதேசமயம், தேர்தலை நடத்தும் பணிகளில் கவனம் செலுத்துமாறு ஆணையருக்கு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருப்பதால் அதன் பணிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. "பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும், உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக அரசு உத்தரவிடும் என எதிர்பார்க்கிறோம்' என்கிறார்கள் தேர்தல் ஆணைய தரப்பில்.
இந்த நிலையில், "நிலுவையிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுமா? அல்லது தேர்தல் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சிப் பதவிகளை ரத்துசெய்து விட்டு தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுமா?' என்கிற விவாதங்களும் எதிரொலிக்கின்றன.