சிவகாசி வட்டத்தில் உள்ள பட்டாசு ஆலை மற்றும் பட்டாசுக் கடையில் ஒரே நாளில் (அக்டோபர் 17) ஏற்பட்ட வெவ்வேறு வெடி விபத்துகளில் 14 பேர் கருகி பலியாகியுள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்ததும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர்.
விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மட்டும் 25 இடங்களில் பட்டாசு ஆலைகளில் விபத்து நடந்து 39 பேர் பலியாகியுள்ளனர். மேலும் காஞ்சிபுரம், தூத்துக்குடி, தர்மபுரி, மயிலாடுதுறை, அரியலூர், ஓசூர் பகுதிகளிலும் விபத்து ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோயிருக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தின ருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிடுவதும், அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதும் தொடர்ந்தபடியே உள்ளது.
கடந்த வாரம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்டாசு விபத்துகள் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது பதிலளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், “"பட்டாசு தயாரிப்பில் பெரும்பாலும் உரிய பயிற்சி பெறாதவர்களே ஈடுபடுகின்றனர். அரியலூர் பட்டாசு ஆலையில் ஆய்வு நடத்தினோம். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பயிற்சிபெற்ற 7 பேர், அங்குள்ளவர்களுக்கு பயிற்சி அளித்து பட்டாசுகள் தயாரித்துள்ளனர். ஒரே நாளில் ரெய்டு நடத்தி இதுபோன்ற பட்டாசு ஆலைகளை மூடி விடலாம். அப்படி நடந்தால், பட்டாசு ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார் கள். அதனால்தான், பட்டாசு தொழிலையும் தொழிலாளர்களையும் பாதுகாக்கும் நடவடிக் கையில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது''’என்றார்.
பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து வெடி விபத்துகள் ஏற்படும்போது பட்டாசு தொழிலாளர் களை பாதுகாப்பது நடக்கின்ற காரியமா? அப்படியென்றால், பட்டாசு ஆலைகளில் பாது காப்பு என்பதே இல்லையா? என்பதுபோன்ற கேள்விகளுக்கு விடைதேடும்போது, பட்டாசு உற்பத்தியாளர்களின் தில்லுமுல்லுகளும், பட்டாசு ஆலை மற்றும் பட்டாசுக் கடைகளின் விதிமீறலும், லஞ்சப் பிசாசுகளும் அப்பட்டமாக தெரிகின்றன.
நாம் களமிறங்கி, பட்டாசு விபத்துகளின் அதிர்ச்சிகரமான பின்னணியை அடி முதல் நுனிவரை அலசியபோது, சம்பந்தப்பட்டவர்களே வேதனையுடன் சில தகவல்களைப் பகிர்ந்தனர்.
"விபத்து, உயிரிழப்பு போன்ற ஆபத்துகள் இருந்தாலும்கூட, கொள்ளை லாபம் ஈட்டக்கூடிய தொழிலாக பட் டாசு வணிகம் உள்ளது. அதனால்தான், சிவகாசி யை உள்ளடக்கிய விருதுநகர் மாவட்டத்தை மட்டுமே மையம் கொண்டிருந்த பட்டாசு உற்பத்தியானது, காலப்போக்கில் பல மாவட்டங் களுக்கும் பரவியது. பேராசை காரணமாக விதிமீறல் செய்து, பட்டாசுத் தொழிலின் நெளிவு சுளிவு அறியாதவர்களை பணியில் அமர்த்தி, அதிவேகத் துடன் உற்பத்தியைப் பெருக்கும்போது, வெடி விபத்துகள் ஏற்படுகின்றன. கொத்துக்கொத்தாக உயிர்கள் பறிபோவதும் நடக்கின்றன.
மணி மருந்து என்பது மேலே பறந்துபோய் வெடிக்கும் ஃபேன்சி ரக வெடிகளுக்கு உந்துசக்தி யாக உள்ளது. வேதிப்பொருள்கள் சிலவற்றின் கலவைதான் மணி மருந்து. இந்த மணி மருந்தை உலர்த்துவதிலும் காயவைப்பதிலும் சில நடை முறைகள் கடைப்பிடிக்கப்படவேண்டும். ஃபேன்சி வெடிகள் வானத்தில் வர்ணஜாலம் காட்டுவதற்காக, வீரியம்மிக்க ரசாயனங்களை அதிக அளவில் மணி மருந்துக் கலவையில் சேர்க்கின்றனர். மணி மருந்தைக் கலக்கும்போது ஏற்படும் திடீர் உராய்வுதான் பெரும்பாலான வெடி விபத்து களுக்கு காரணமாக அமைகின்றன. அதனால் தான் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பட்டாசு தொழிலில் ஈடுபடுத் தப்படுவோர் அனுபவமும் பயிற்சியும் பெற்றவர்களாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
முன்பு பட்டாசு ஆலைகளில் மட்டுமே வெடி விபத்து ஏற்பட்ட நிலையில், தற்போது பட்டாசுக் கடைகளும், பட்டாசு குடோன்களும் கூட வெடித்துச் சிதறி உயிரிழப்புகளை ஏற் படுத்துகின்றன. 17-ஆம் தேதி சிவகாசி- எம்.புதுப் பட்டி -ரெங்கபாளையத்திலுள்ள கனிஷ்கர் பட்டாசு ஆலையையொட்டியே இருந்த பட்டாசுக்கடை முழுக்க விதிமீறலுடன் செயல்பட்டுள் ளது. அந்த பட்டாசு ஆலை யின் உரிமையாளர் சுந்தர மூர்த்தி, பட்டாசு ஆலையை யும், பட்டாசுக் கடையையும் விதிமீறலாக விரிவுபடுத்தி யிருந்தார். பட்டாசு ஆலை களில் இரும்பு சுத்தியல், இரும்பு தராசு, இரும்பு கத்தரிக்கோல் போன்ற வற்றை கையாளக்கூடாது. சுந்தரமூர்த்தியோ இரும்பாலான தகர ஷெட் அமைத்து, அங்கு பணியாளர்களை வேலைசெய்ய வைத்திருக்கிறார்.
பட்டாசுக் கடைக்கு பின்புறத்தில் ‘கிப்ட் பாக்ஸ்’ தயாரிக்கும் பணி நடந்திருக்கிறது. பட்டாசுக் கடையில் அரசு நிர்ணயம் செய்த அளவைக் காட்டிலும் பட்டாசுகள் ஸ்டாக் இருந்துள்ளன. அந்த பட்டாசு ஆலையில் தடை செய்யப்பட்ட சரவெடிகளைத் தயாரித்து, பட்டாசுக் கடையில் விற்பனை செய்துள்ளனர். பட்டாசு வாங்க வந்திருந்த வாடிக்கையாளர்கள் இருவர் ‘சரவெடி தரமானதா? எப்படி வெடிக் கும்?’ என்ற சந்தேகத்தில் சாம்பிள்’ பார்ப்பதற்காக திரியைப் பற்றவைத்து வெடித்தபோதுதான், தீப்பொறிகள் பட்டாசு கடைக்குள் தெறித்து விழுந்து, அங்கிருந்த ஃபேன்சி ரக பட்டாசுகள் வெடித்து நாலாபுறமும் சீறிப்பாய்ந்து, பெரும் விபத்தை ஏற்படுத்தி 14 பேர் உயிரைப் பறித்துள்ளது. ஏற்கெனவே விதிமீறலுக்காக நட வடிக்கைக்கு ஆளான இந்த பட்டாசு ஆலை மீண்டும் விதிமீறலாகவே செயல்பட்டுள்ளது. அங்கு அதிகாரிகள் யாரும் முறையாக ஆய்வு நடத்தவில்லை.
பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக் காத பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசுக் கடை கள் மீது அரசுத்துறையினர் எடுக்கும் நடவடிக்கை பெயரளவில் மட்டுமே இருப்பதால்தான், விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, பட்டாசுகளை அவசரகதியில் உற்பத்திசெய்கின்றனர். அப்படியென் றால், அரசுத்துறையினர் நடத்தும் ஆய்வுகளெல் லாம் வெறும் கண்துடைப்பு நாடகமா? ஆம்.. ஒவ்வொரு ஆய்வின்போதும் பட்டாசுத் தரப்பினர் லஞ்சப் பணத்தை வாரியிறைக்கின்றனர்; அரசுத்துறையினர் அதில் திளைக்கின்றனர்.
ஒருபக்கம் விதிமீறலால் பட்டாசுத் தொழி லாளர்களின் உயிர் பறிக்கப்படுகிறது என்றால், மறுபக்கம் பட்டாசு விற்பனையிலும் பொது மக்களை ஏமாற்றி பித்தலாட்டம் செய்கிறார்கள். உற்பத்தி விலைக்கே பட்டாசு விற்பனை என்ற விளம்பர மோசடி, ஒரு வியாபார உத்தியாக உள்ளது. சிவகாசியில் பெரிய நிறுவனங்களின் பட்டாசுகளை, ஒரிஜினல் முத்திரையுடன் 50 சதவீத தள்ளுபடியில் வாங்கமுடியும். சிறு, குறு நிறுவனங்களுடன் கள்ளத்தனமாக பட்டாசு தயாரிப்பவர்களும் சேர்ந்துகொண்டு போட்டி போட்டு 80, 85, 89, 90, 91 சதவீத தள்ளுபடியில் பட்டாசுகளை விற்பனை செய்கின்றனர். 91 சதவீத தள்ளுபடியில் பட்டாசை விற்கமுடியுமென்றால், உண்மையிலேயே அதன் உற்பத்தி விலை என்ன வாக இருக்கும் என்ற கேள்வி எழுமல்லவா?''’எனச் சுட்டிக்காட்டினர்.
பட்டாசு உற்பத்தியாளர் சங் கத்திலேயே பட்டாசுப் பெட்டிகளில் குறிப்பிடப்படும் எம்.ஆர்.பி. ரேட் குறித்து முன்பு விவாதம் எழுந்தது. இதுகுறித்து நம்மிடம் பேசிய பட்டாசு உற்பத்தியாளர் ஒருவர் "நானே எங்கள் சங்கத்தில் இந்த எம்.ஆர்.பி. ரேட் குறித்து பேசியிருக் கிறேன். 50 ரூபாய் பெறுமான பட் டாசை மூன்று மடங்கு அதிகமாக விலை வைத்து ரூ.150 என்று போட லாம். தவறென்று சொல்ல முடியாது. ஆனால்.. 10 மடங்கு, 20 மடங்கு என்று அவ ரவர் இஷ்டத்துக்கு எம்.ஆர்.பி. ரேட் போடுகிறார்கள். 50 ரூபாய் பட்டாசுக்கு ரூ.1000, ரூ.2000 என்று எம்.ஆர்.பி. ரேட் போட்டால் எப்படி? 10 சதவீதத்திலிருந்து 90 சதவீதம் வரை தள்ளுபடி செய்து ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு ரேட் வைத்து பட்டாசை விற் கிறார்கள். சிவகாசியிலிருந்து வடமாநிலங்களுக்கு அனுப்பும் போக்குவரத்து செலவு உள்ளிட்ட இதர செலவுகளையும் கணக்கில்கொண்டே எம்.ஆர்.பி. விலை தாறுமாறாக நிர்ணயிக்கப்படுகிறது. பட்டாசு டீலர்களின் நிர்ப்பந்தத்தின் காரணமாகவே எம்.ஆர்.பி. விலையை மிக அதிகமாகப் போடுகிறோம். இது எல்லோருக்கும் தெரிந்தே நடக்கும் சீட்டிங்தான். இதை முறைப்படுத்த வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொண்டோம். சங்க உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமை இல்லை. அதனால், தவறை திருத்திக்கொள்ள முடியாமலே போய்விட்டது''’என்றார்.
சீட்டிங் என்பதை பட்டாசு உற்பத்தியாளர்களே ஒத்துக்கொள்ளும் நிலையில், இத்தொழிலில் அபரி மிதமான லாபம் கிடைக்கிறது என்பதை நன்கறிந்த அரசுத் துறையினர், விபத்துகளையோ உயிரிழப்பு களையோ கண்டுகொள்ளாமல், லஞ்ச ரேட்டை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளனர்.
பட்டாசு லஞ்ச வேட்டை எப்படியெல்லாம் நடக்கிறது? வெடி விபத்துகளை ஏற்படுத்துவதாக எழும் லஞ்ச குற்றச்சாட்டுகளுக்கு அரசுத்துறை அதிகாரிகள் என்ன பதில் சொல்கிறார்கள்?
வேட்டை தொடரும்...