முயலை மூலைக்கு நெருக்குவதற்கும், புலியை மூலைக்கு நெருக்குவதற்கும் வித்தியாசமிருக்கிறது. வங்கத்துப் பெண் புலி பா.ஜ.க.மீது பலமாகவே பாய்ந்து பிறாண்டியிருக்கிறது. ஊடகங்களும் மத்திய அரசின் அதிகாரங்களும், விலைக்கு வாங்கப்பட்டவர்களும் மட்டும் போதுமென்று நினைத்த பா.ஜ.க.வுக்கு மேற்குவங்கத் தேர்தலில் பலமான அடிகொடுத்திருக்கிறார் மம்தா.

mm

மேற்குவங்கத் தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கையின்போது, தபால் வாக்குகள் எண்ணிக்கையின்போதே திரிணமுல் காங்கிரஸ் முன்னணி வகிக்கத் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் பா.ஜ.க.வும் திரிணமுல் காங்கிரஸும் குறைவான தொகுதி வித்தியாசத்தில் இருந்ததுபோல தெரிந்தாலும் விரைவிலேயே முன்னணி நிலவரத்தில் எக்ஸ்பிரஸ் வேகம் காட்டத்தொடங்கியது திரிணமுல் காங்கிரஸ்.

ஆட்சியமைக்கத் தேவையான 156 தொகுதி களையும் தாண்டி 221 தொகுதிகளில் வெற்றியை வசப்படுத்தியிருக்கிறது திரிணமுல் காங்கிரஸ். பா.ஜ.க. 71 தொகுதிகள் வென்றிருக்கிறது. மேற்குவங்கத்தின் எட்டுக் கட்டத் தேர்தல்களிலும் அளவுக்கதிகமாக ஆர்ப்பாட் டம் செய்த பா.ஜ.க. இப்போது குரலொடுங்கி நிற்கிறது. நந்திகிராம் தொகுதியில் வாக்கு எண் ணிக்கையின் போது, சுவேந்துவும் மம்தாவும் மாறி மாறி முன்னணி யில் வந்து கொண்டிருந்தனர். மம்தா வெற்றிபெற்றதாக முதலில் அறிவிக்கப்பட் டது. பின் வாக்கு எண்ணிக்கை முழுமையடைய வில்லை என மறுக்கப்பட்டு, இறுதியில், சுவேந்து அதிகாரி 1700 வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றிபெற்றதாகக் கூறப்பட்டது சர்ச்சையாகியுள் ளது. இதையடுத்து திரிணமுல் காங்கிரஸ் தரப்பி லிருந்து சந்தேகங்கள் எழுப்பப்பட, ஒவ்வொரு சுற்று வாக்குகளும் மீண்டும் சோதிக்கப்பட்டன. "நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் சில சந்தேகங்கள் இருப்பதாகவும் அதனை நீதிமன்றத்தின் மூலம் தீர்த்துக்கொள்வேன்' எனவும் மம்தா அறிவித்துள்ளார்.

Advertisment

மேற்குவங்கத்தில் பா.ஜ.க. நூறு தொகுதிகளுக்கு மேல் வென்றால், கட்சிகளின் வெற்றிக்கு வியூகம் வகுக்கும் தனது தொழிலையே விட்டுவிடுவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்திருந்தார். சொன்னதுபோலவே மேற்குவங்கத்தில் பா.ஜ.க.வின் வெற்றி நூறு தொகுதிகளுக் குள் கட்டுக்குள்ளிருந்த நிலையிலும் கிஷோர், “"அரசியலில் மிக மோசமாகத் தோற்றுவிட் டேன். இன்னும் சில விஷயங் களை நான் கற்கவேண்டும்'” எனவும், "கொஞ்ச காலம் இனி எந்தக் கட்சிக்கும் வியூகம் வகுத்துத் தரப்போவதில்லை' எனவும் ட்விட்டரில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

திரிணமுல்லின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில், மேற்குவங்கத் தேர்தலில் பேசவேண்டிய இன்னொரு முக்கிய விஷயமிருக்கிறது. இந்தத் தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகளும் காங்கிரஸும் இணைந்து தேர்தலைச் சந்தித்தன. ஆனால் ஒரேயொரு இடத்தில்கூட இந்த இரண்டு கட்சிகளும் வெற்றிபெற வில்லை. அதேசமயம் பா.ஜ.க.வுக்கு ஒன்றும் இது பெரிய தோல்வியோ… இழப்போ இல்லை. ஏனெனில் இதே பா.ஜ.க. 2016 சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் வெறும் 3 சீட்டுகள்தான் வென்றிருந்தது. பா.ஜ.க.வின் ஓவர்டோஸ் பேச்சுதான் அதன் வெற்றியை வெற்றியாகத் தெரியவிடாமல் செய்கிறது.

f

Advertisment

மம்தாவின் கையில் வெற்றிக் கனி. அதற்குள் குடைச்சல்தரக் காத்திருக்கும் பா.ஜ.க. எனும் புழு. இதுதான் தற்போதைய மேற்குவங்க நிலவரம்.

கருத்துக் கணிப்புகள், கேரளாவில் பினராய் விஜயன் ஆட்சியில் தொடர்வார் என்றே சொன்னன. அதுவே நடந்திருக்கிறது. பொதுவாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கேரளாவில் ஆட்சி மாறும். 1980 முதலே அம் மாநில மக்கள் அப்படித்தான் வாக்களித்துவந்திருக்கிறார்கள். அதை இம்முறை மீறியிருக்கிறார்கள்.

பினராயி விஜயனுக்கு இடையூறு ஏற்படுத்த இருமுறை வெள்ளப்பாதிப்புகள், கொரோனாகால நெருக்கடிகள், தலைமைச் செயலாளர்மீது தங்கக்கடத்தல் குற்றச்சாட்டு, ஐயப்பன் கோவில் விவகாரம் என வரிசையாக பிரச்சனைகள் அணிவகுத்து வந்தன. தாக்கவரும் ஆயுதத்தையே, தற்காப்பு ஆயுதமாக மாற்றிக் கொள்வதுபோல் அனைத்தையும் பினராய் விஜயன் தன் திறமையை நிரூபிக்கும் களமாகப் பயன்படுத்திக் கொண்டார். மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 95 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மை பெற்றிருக்கிறது கம்யூனிஸ்ட் கூட்டணி.

f

அதேசமயம் காங்கிரஸ் வெறும் 41 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறது. காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தி பாராளு மன்றத் தேர்தலின்போது தொடர் பிரச் சாரம் செய்தது கைகொடுத்தது போல், சட்டமன்றத் தேர்தலில் கைகொடுக்கவில்லை. இந்தமுறை ஒரு தொகுதியில்கூட பா.ஜ.க.வுக்கு வெற்றியைத் தராமல் “"உங்கள் சேவை இங்கே தேவையில்லை'” எனத் தெரிவித்திருக்கின்றனர் சேட்டன்கள்.

தேயிலை சொர்க்கமான அஸ்ஸாமில், 78 தொகுதிகளில் வென்று பா.ஜ.க. தக்கவைத்து க்கொள்ள, மகா கூட்டணியை ஏற்படுத்தியும் காங்கிரஸால் 46 தொகுதிகளை மட்டுமே வென்றெடுக்க முடிந்திருக்கிறது.

வெற்றியை உறுதிசெய்யும் வாக்குகளை உடையவர்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், அதிருப்தி இருந்தபோதும் பா.ஜ.க.வுக்கே வாக்களித்திருக்கிறார்கள். தேசிய குடிமக்கள் கணக்கீட்டின்போது எழுந்த எதிர்ப்பும் முனை மழுங்கிப் போயிருக்கிறது என் பதையே தேர்தல் முடிவு காட்டு கிறது. 2016 தேர்தலில் வென்றதை விட பா.ஜ.க. 10 தொகுதிகளை இழந்திருக்கும் நிலையில், காங்கிரஸ் கூட்டணி 22 தொகுதிகள் கூடுதலாக வென்றிருக்கிறது. ஆக, காங்கிரஸ் கட்சியில் கூடுதலாக சேர்க்கப்பட்ட அணிகள் வெற்றிக்கான சீட்டுகளைத் தராமல் வெறுமனே சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்காட்ட மட்டுமே உதவியிருக்கிறது. காங்கிரஸ் இன்னும் ஐந்தாண்டுகள் வெற்றிக்குக் காத்திருக்கவேண்டும்.