தீவிரவாதம் என்பது ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்பதை பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை நிரூபித்துள்ளது. சமீபத்தில், காஷ்மீரில் பத்திரிகையாளர் புகாரியை சுட்டுக் கொன்றவர்கள் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள். பெங்களூருவில் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை சுட்டுக்கொன்றது இந்து மதத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என கர்நாடக போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
கவுரி லங்கேஷை மட்டுமல்ல அவருக்கு முன் கல்புர்க்கி, பன்சாரே போன்றவர்களையும் இந்த இந்து பயங்கரவாதிகள்தான் சுட்டுக்கொன்றார்கள் என்கிற கூடுதல் தகவலையும் கவுரி லங்கேஷ் படுகொலையை புலனாய்வு செய்த கர்நாடக போலீஸ் டீம் கண்டுபிடித்துள்ளது.
கவுரி லங்கேஷை போலவே கல்புர்க்கி, பன்சாரே போன்றவர்கள் பா.ஜ.க. எதிர்ப்பாளர்கள்.
இவர்களைச் சுட்டுக் கொல்ல கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகாவை சேர்ந்தவர்களால் ஓர் இந்து பயங்கரவாத அணி உருவாக்கப்படுகிறது. அது மற்ற தீவிரவாதிகள் கைக்கொள்ளும் தொழில்நுட்ப அடிப்படையில் கள்ளச்சந்தையில் துப்பாக்கி வாங்குகிறது. பல மாதங்கள் தங்கி திட்டமிட்டு மூவரையும் சுட்டுக்கொன்றிருக்கிறது என்பதுதான் கர்நாடக போலீசாரின் கண்டுபிடிப்பு.
அமல்காலே, இவன் மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்தவன். அமித் டெக்வேகர், இவன் கோவா மாநிலத்தைச் சேர்ந்தவன். பரசுராம் வாஹ்மாரே, இவன் கர்நாடக மாநிலம் பிஜப்பூரை சேர்ந்தவன். நான்காவதாக கைது செய்யப்பட்டவன் கே.டி. நவீன்குமார். இந்தக் கும்பலுக்கு தலைமை தாங்கியவன் புனேவைச் சேர்ந்த அமல்காலே. இவனும் அமித் டெக்வேகரும் இந்து ஜனாஜாக்ருதி சங்கம் (இந்து மக்கள் பாது காப்பு சங்கம்) என்கிற அமைப்பை சேர்ந்தவர் கள். பரசுராம் வாஹ்மாரே ஸ்ரீராம் சேனா என் கிற அமைப்பை சேர்ந்தவன். கே.டி.நவீன்குமார் சொந்தமாக தானே தலைவனாக இருந்து ஓர் இந்து இயக்கத்தை நடத்தி வருகிறான்.
இதில் அமர்காலே என்பவனை கல்புர்க்கி படுகொலை செய்யப்பட்டபோதே கர்நாடக போலீசார் கைது செய்து விசாரித்து, விட்டுவிட்டனர். தற்பொழுது கவுரி லங்கேஷ் படுகொலையை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுப் படை இவனை கைது செய்தபோது இந்து இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
"கவுரி லங்கேஷும் அவரது தந்தை லங்கேஷும் சிறந்த பத்திரிகையாளர்கள். அவர்களது கொலையில் உண்மை தெரிய வேண்டும்' என முதல்வராக அப்போது இருந்த சித்தராமையா உறுதியாக இருந்ததால், போலீசார் கவனிக்கவேண்டிய விதத்தில் கவனித்து உண்மையை அவர்களிடமிருந்து வெளிவரச் செய்தனர்.
"கவுரி லங்கேஷை சுட்டுக் கொன்றது பரசுராம். அவனுக்கு துப்பாக்கி கொடுத்தது மாண்டியாவை சேர்ந்த நவீன்குமார். பரசுராமை பெங்களூருவில் தங்கவைத்து கொலையை நிறைவேற்றியது அமித்' என சொன்னதோடு, "இதே பாணியில்தான் அதே துப்பாக்கியை பயன்படுத்தி கல்புர்க்கியை சுட்டுக் கொன்றோம்' என வாக்குமூலம் அளித்தான்.
அதை பதிவு செய்த கர்நாடக காவல்துறை "இந்து பயங்கரவாதம்' பற்றிய முதல் வழக்கை பதிவு செய்து வரலாறு படைத்துள்ளது.
-தாமோதரன் பிரகாஷ்