மதுரை மருத்துவமனையில் நிகழ்ந்த உயிர்ப்பலிகள் மாநிலத்தையே அதிர வைத்ததென்றால், அத்தனை ஆர்ப்பாட்டமில்லாமல் தமிழக மருத்துவமனைகளில் ஆங்காங்கே உயிர்ப்பலிகள் நிகழத்தான் செய்கின்றன. அலட்சியப் போக்கால் அடுத்தடுத்து உயிர்ப்பலிகள் ஏற்படுகின்றன என்கிற குற்றச்சாட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மீது எழுந்துள்ளது.
குழந்தையைப் பறிகொடுத்த வழக்கறிஞர் ஆதி.பொன்னரசி நம்மிடம், “""2018 ஆகஸ்ட் மாதம் கர்ப்பமாயிருக்கறதா அடிஅண்ணாமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உறுதிசெய்தாங்க. அங்கேயே பதிவுசெய்து மாதந்தோறும் செக்கப் செய்துக்கிட்டிருந்தன். கடந்த ஏப்ரல் 28-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு திடீர்ன்னு இடுப்புவலி வந்தது. ஆட்டோவில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் போனோம். பிரசவ வார்டில் இருந்த பயிற்சி மருத்துவர்கள் பரிசோதனை செய்துட்டு பிரசவ வலிதான்னு சொல்லி என்னை அட்மிட் செய்தாங்க. முதலில் ஒரு ஸ்கேன் எடுத்தாங்க. எல்லாம் நார்மலா இருக்கறதா சொன்னாங்க.
இருந்தாலும் வலியால துடிச்சிக்கிட்டிருக்கிறதை எங்கம்மா டாக்டர்கிட்ட சொன்னதும், அந்த பயிற்சி டாக்டர்கள் இருவரும் பேசிக்கிட்டு "ஒரு ஊசிபோடுங்க பிரசவ வலியா இல்லாம மத்த வலியா இருந்தா போயிடும்'னு சொன்னாங்க. நர்ஸ்சும் ஊசிபோட்டாங்க. அப்பவும் வலிநிக்கல. விடியற்காலை 3 மணிக்கு திரும்ப அங்கயிருந்த பயிற்சி டாக்டர்களிடம் எங்கம்மா சொன்னதுக்கு, அவுங்க நர்ஸ்கிட்ட என்ன செய்யலாம்ன்னு கேட்டிருக்காங்க. டூட்டியில இருந்த நர்ஸ் "பன்னீர் சோடாவும் பாலும் தரச்சொல்லுங்க சரியாகிடும்'னு சொல்ல... அவுங்களும் எங்கம்மாவிடம் சொல்லியிருக்காங்க. நானும் குடிச்சேன். விடியற்காலை 4 மணிக்குமேல வயிற்றுக்குள் தெரிந்த குழந்தையோட மூவ்மெண்ட், அதன்பிறகு உணரமுடியல.
விடியற்காலை 6 மணிக்கு டூட்டி டாக்டர்கிட்ட எங்கம்மா போய், என் மகள் வலியால் துடிக்கிறான்னு சொன்னதும், வந்து செக் பண்ணிப் பார்த்தாங்க. உடனிருந்த பயிற்சி டாக்டர்களிடம், "இந்த பொண்ணு அட்மிட்டானது பற்றி ஏன் என்னிடம் சொல்லலை'ன்னு கோபப்பட்டிருக்காங்க. உடனே ஸ்கேன் பார்த்த டாக்டர், வயிற்றுக்குள் குழந்தைக்கும் உங்களுக்குமான தொப்புள்கொடி பிரிஞ்சு குழந்தை இறந்துடுச்சி, ஆபரேஷன் செய்யலன்னா உங்களையும் காப்பாத்துறது சிரமம்'னு சொல்லி, என்னை யோசிக்கவே விடாம கையெழுத்து வாங்கி ஆப்ரேஷன் செய்துட்டாங்க. என்னோட முதல் குழந்தையை டாக்டர், நர்ஸ்களோட அலட்சியம், தவறான வழிகாட்டலால் வயிற்றிலேயே கொன்னுட்டாங்க''’என அழுதார்.
அவருடன் இருந்த அவரது கணவர் பள்ளி ஆசிரியர் அருள்குமார், ""இதுபற்றி கண்காணிப்பாளரிடம் முறையிடச் சென்றபோது, அவர் எங்களிடம் பேசவேயில்லை. டாக்டர் ஸ்ரீதர்ன்னு ஒருத்தர் வந்து என்னவென கேட்டார். அவரிடம் நடந்ததைச் சொன்னபோது, பன்னீர் சோடாவும் - பாலும் யார் தரச்சொன்னாங்க அப்படின்னு கேட்டு அதிர்ச்சியானவர், நர்ஸ்தான் தரச்சொன்னாங்க அப்படின்னு சொன்னதை நம்பவேயில்லை. அதுதான் பாய்சனாகி குழந்தையை கொன்னிருக்குன்னு சொன்னார். நடந்தது நடந்துபோச்சி, விடுங்கன்னு கூலா சொன்னதைத்தான் எங்களால் ஜீரணித்துக்கொள்ள முடியல''’என்றார்.
மணலூர்பேட்டை அருகிலுள்ள முருகாபாடியை சேர்ந்தவர் ஜெயமாலா. இவரது கணவர் சத்தியா. ஜெயமாலா கர்ப்பமானதும் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தொடர் செக்கப் செய்தவர்கள், பிரசவ தேதி மே இறுதி வாரம் என்பதால் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். மே 1-ஆம் தேதி காலை வலியெடுத்ததால் 10:30 மணிக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்துள்ளனர். அப்போது அவருக்கு பி.பி. அதிகமாக இருந்ததால் அது குறைய தொடர்ச்சியாக 5 முறை ஊசி போட்டுள்ளனர். இரவு 9 மணிக்கு குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறந்துவிட்டதாகக் கூறி ஆப்ரேஷன் செய்து குழந்தையின் உடலை வெளியே எடுத்துள்ளனர். 5 முறை பி.பி. ஊசி போட்டதன் விளைவாக ஜெயமாலா தற்போதுவரை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதுபற்றி மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் பாதிக்கப்பட்ட சிலர் முறையிட்டனர். அதோடு மருத்துவமனையில் செக்யூரிட்டி பணியிலுள்ள ஒருவர் உள்நோயாளி ஒருவருக்கு குளுகோஸ் ஏற்றும் வீடியோவையும் காட்டினர். அதனைப் பார்த்து அதிர்ச்சியானவர் கடந்த மே 4-ஆம் தேதி திடீரென மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ஆய்வுசெய்தார், நோயாளிகளிடம் குறைகேட்டவர், குளுகோஸ் ஏற்றிய அந்த செக்யூரிட்டியை பணிநீக்கம் செய்யச்சொல்லி அந்த ஏஜென்ஸிக்கு உத்தரவிட்டு வந்துள்ளார்.
மருத்துவமனை மீதான இந்த குற்றச்சாட்டுகள் குறித்து துணை மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்ரீதரிடம் கேட்டபோது, ""சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அடுத்தபடியாக அதிக பிரசவம் நடப்பது திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்தான். ஆதி.பொன்னரசி மருத்துவ ரெக்கார்டுகள் ஆய்வு செய்யப்பட்டது. சிகிச்சையில் எந்த குறைபாடுமில்லை. சோடாவும், பாலும் தரச்சொன்னது எங்கள் தரப்பில்லை. ஜெயபாரதி விவகாரத்திலும் எந்த தவறும் நடக்கவில்லை''’என்கிறார்.
யாரும் தவறு செய்யவில்லை என்றால் இத்தகைய அவலங்கள் தொடர்வது ஏன்? மருத்துவ சிகிச்சைக்கு மனித உயிர்தான் ஃபீஸா எனக் கேட்கிறார்கள் பாதிக்கப்படும் குடும்பத்தினர்.
-து.ராஜா