தமிழக தலைநகரான சென்னையில் அண்மைக்காலமாகப் பரவிவரும் ஹைடெக் போதைப் பார்ட்டி கலாச்சாரத்தால், அதிர்ச்சியான சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டேயிருக்கின்றன. தற்போது அரங்கேறியிருப்பது ஒரு உயிர்ப்பலி.
இந்த "ஹைலெவல்" போதை பார்ட்டிகளைப் பற்றியும் அதன் பின்னணிகள் பற்றியும் நமது நக்கீரன், தொடர்ச்சியாகச் செய்திகளைப் பதிவிட்டு வருகிறது. மேலும் காவல்துறையின் மூலம் அதிரடி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு, அந்த ஆக்ஷன் ரிப்போர்ட்டு களையும் நக்கீரன் வெளியிட்டு வருகிறது.
அண்மையில் சென்னை ஈ.சி.ஆர். சாலை ஓட்டல் ஒன்றில் நடந்த ஹைடெக் பார்ட்டி பற்றிய தகவல் நம் காதுக்கு வர... அதை தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவிக்கு பாஸ் பண்ணினோம். அதைத்தொடர்ந்து போலீஸ் துணை கமிஷனர் சிபிச்சக்கரவர்த்தி தலைமையிலான ஸ்பெஷல் டீம், அங்கே விரைந்து நடத்திய அதிரடி ரெய்டில் பெண்கள் உட்பட ஏராளமான இளைஞர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். அவர்கள் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில்தான்... கடந்த 21-ந் தேதி சனிக்கிழமை மாலை, சென்னை கோயம்பேடு ரவுண்டானா அருகேயுள்ள பிரபல வி.ஆர். மா-ன் நான்காம் மாடியில் உள்ள திறந்தவெளி அரங்கில், ஒரு ஹைடெக் போதைப் பார்ட்டி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்தத் தகவல் நமக்கு வர, ஸ்பாட் ரிப்போர்ட்டுக்கு ஆயத்தமானோம்.
உடனடியாக ஆன்லைன் மூலம் 1,500 ரூபாய் பாஸை வாங்கிக்கொண்டு, மாலை 4:30-க்கு ஸ்பாட்டுக்குச் சென்றோம். அந்த நேரத்திலும் தமிழக காவல்துறை தலைமைக்கு போன் செய்ய முயன்றோம், போன் எடுக்கப்படவில்லை.
அந்த பிரம்மாண்டமாலின் நான்காவது மாடிக்கு சென்றபோது, சுமார் 200 இளம் பெண்கள் உள்பட ஆயிரம் பேர்வரை, அதிலும் இருபது வயதுக்கு உட்பட்ட இளசுகள் குவிந்திருந்தனர். பிரம்மாண்ட லைட் செட்டப்புடன் மேடை அமைக்கப்பட்டி ருந்தது. காதைக் கிழிக்கும் சத்ததுடன் டுக்... டுக்... டுக்கென... அடிவயிற்றில் குத்துவதுபோல டி.ஜே. மியூசிக்கை அதிர வைத்துக்கொண்டிருந்தனர். இசை வழங்குகிறவர், வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பது பார்த்ததுமே தெரிந்தது.
ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத அளவிற்கு கண்கள் கூசும் லேசர் லைட் ஒளியும் நடனமாடியது. மேடையின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த பெரிய திரையில், டி.ஜே. மியூசிக்குக்கு ஏற்றவாறு கனவுலகில் மிதப்பது போன்ற காட்சிகள் திரையிடப்பட்டது. இளம் ஜோடிகள் அனை வரும் வசதியான வீட்டு வாரிசுகள் என்பது அவர்களைப் பார்க்கும்போதே தெரிந்தது. இந்த பார்ட்டியில் பல்வேறு துறை சார்ந்த இளசு களையே அதிகம் பார்க்க முடிந்தது.
இரவு 9 மணியளவில் பார்ட்டி உச்சத்தை அடைந்தது. மதுபானங்கள் அனைவரின் கைகளிலும் நுரைத்தது. அனைவரும் போதையேறிய நிலையில் ஆண், பெண் வேறுபாடு இன்றி, கைகோத்தும், கட்டி அணைத்துக்கொண்டும் நடனம் ஆடினர். ஜோடிகள் மாறிய நிலையிலும் பலர் ஆட்டம் போட்டனர். இன்னும் சிலர், அந்த போதையிலும் தம் அடித்துப் புகை மண்டலங் களை ஏற்படுத்தினர். அங்கு கிளம்பிய வாடை, அது சிகரெட் அல்ல... கஞ்சா என்று உணர்த்தியது.
இன்னொரு பக்கம் சிலர், எல்.எஸ்.டி என்னும் ஸ்ட்ராங்கான போதைப் பொருளை, நாக்கின் கீழ் வைத்தபடி, அதன் போதையில் ஆட்டம் போட்டனர். சகலவித போதைப் பொருட்களும் அங்கே எளிதாகப் புழங்குவதைப் பார்க்க முடிந்தது.
அங்கே, முப்பதுக்கும் மேற்பட்ட ஆஜானு பாகுவான பவுன்சர்கள், அனைவரையும் கண்காணித்தபடி இருந்தார்கள். போட்டோ எடுப்பதைக் கூட அவர்கள் தடுத்தனர். மீறுபவர்களை அவர்கள் வெளியே மிரட்டலோடு அனுப்பினார்கள்.
சில இளசுகள் அங்கிருந்து வெளியே சென்று சென்று, உள்ளே வந்தபடியே இருக்க... அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்று பின்தொடர்ந்தோம், அங்கிருந்த மெட்ராஸ் ஹவுஸ் என்ற பெயருடைய அறைகளுக்குள் அவர்கள் தஞ்சமடைவதைக் கண்டோம். உள்ளே அவர்கள் கிளுகிளுப்பாக அத்துமீறுவதை, அங்கிருந்து கசிந்த முக்கல் முனகல்கள் மூலம் நம்மால் உணர முடிந்தது.
நாம் கண்காணிப்பதை சிலர் கண்காணித்தபடி நம்மைப் பின்தொடர்ந்தார்கள். உஷார் ஆன நாம், பழையபடி மீண்டும் பார்ட்டி அரங்கிற்குத் திரும்பினோம்.
மணி இரவு 9:30 அளவில், அந்தக் கூட்டத்தில் நாற்பது வயதைக் கடந்த இரு பெண்களைப் பார்த்தோம். அவர்கள் வியப்பாகப் பார்த்ததை நம்மால் கணிக்க முடிந்தது. போதையின் உச்சத்தில், அதிரும் மியூசிக்குடன் ஆட்டம் வேகமானது.
சற்று நேரத்தில் டி.ஜே. சவுண்டைக் காட்டிலும் சலசலப்புடன் கும்பல் கூடியது. முதலில், ஏதோ போதையில் தகராறு என்று நினைத்து அருகே சென்றோம். அப்போது 21 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் போதையின் உச்சத்தில் மயங்கி விழுந்து கிடந்தார். அவரைச் சுற்றி தள்ளாட்டக் கும்பல்.
அவருடன் வந்தவர்கள் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றும் அந்த நபர் எழவில்லை. அவருக்கு நினைவு திரும்பவில்லை. இசை உடனடியாக நிறுத்தப்பட்டது. சற்றும் எதிர்பாராதவாறு போலீசார் அங்கே வந்தனர். அந்த இளைஞரைத் தூக்கிக்கொண்டு மருத்துவ மனைக்கு விரைந்தனர். அதே நேரம் அங்கிருந் தவர்களை போலீசார் அவசர அவசரமாக வெளியேற்றினர்.
அப்போது நாற்பது வயது மதிக்கத்தக்க அந்த இரு பெண்களும் போலீசாரிடம் பேசிக்கொண் டிருந்தனர். அப்போது தான் தெரிந்தது, அவர்கள் போதை ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் களான மஞ்சுளா மற்றும் பிரியா என்பது. அதே நேரம், மயங்கி விழுந்த அந்த இளைஞர், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டதாகவும், அவரின் உடல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரியவந்தது. அப்போது மணி இரவு 12:00 மணிக்கு மேல் ஆகி இருந்தது.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதி காலை அரசு மருத்துவமனை பிணவறைக் குச் சென்றோம். போதை பார்ட்டியில் பலியானவர் சென்னை மடிப்பாக்கம் ஜோதிராமலிங்கம் தெருவைச் சேர்ந்த 22 வயதான பிரவீன் என்றார்கள்.
அளவுக்கு அதிகமாக போதைப் பொருளை எடுத்துக்கொண்டதால், நுரையீரல் ஸ்தம்பித்து அவர் பலியானதாகத் தெரியவந்தது.
மறுநாள் அந்த மாலின் போதை அரங்கை அண்ணாநகர் டி.சி. சிவபிரசாத் தலைமையிலான போலீஸ் டீம் முற்றுகை யிட்டது. அங்கு சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரம் மதுபாட் டில்களைக் கைப்பற்றினர். பார் மேனேஜர் நிவாஸ் போராராஜ், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் எட்வின் தேவபுத்திரன் மற்றும் பரத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அரங்கிற்கும் சீல் வைக்கப்பட்டது,
ஏற்கனவே தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு போதைப் பொருட்களை ஒழிக்க, 2.0 என்கிற ஆபரேஷன் மூலம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சென்னை சிட்டியின் மையப் பகுதியில் இதுபோல ஓர் போதை பார்ட்டி நடப்பதும், அதில் உயிர்ப்பலி ஏற்பட்டிருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
யார் இந்த பார்ட்டியை நடத்திவருவது? இதற்கு உடந்தையாக இருக்கும் காவல்துறையினர் யார்? என்று துருவ ஆரம்பித்தோம்.
இந்த நிகழ்ச்சியை நடத்தியது கிரேட் இந்தியா கேதரிங் என்ற ஈவன்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம். இதன் நிழலாகச் செயல்படுவது மார்க் என்கிற ரவி. இவர் சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். மேலும் இவரது குரூப் அஜித் நடித்த வலிமை பட பாணியில் நிழலான காரியங்களில் ஈடுபடுவது தெரிய வந்தது. வெளியே யாருக்கும் ரவி என்றால் தெரியாது. மார்க் என்றால்தான் தெரியும்.
இந்த போதைப் பார்ட்டியில் பங்கேற்க, லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வெளிநாட்டில் இருந்து இசைக் கலைஞர்களை வரவைக்கிறார்கள். அன்று இந்த நிகழ்ச்சியில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மந்ரா கோரா வரவழைக்கப்பட்டிருந்தார். இவர் டூரிஸ்ட் விசாவில் வந்து தற்போதைய போதைப் பொருட்களின் குடோன் என்று அழைக்கப்படும் கோவாவில் தங்கிக்கொண்டு, இந்தியா முழுவதும் இதுபோல டி.ஜே. பார்ட்டி நடத்தச் சென்று வருகிறாராம். இவரோடு வருபவர்கள் உயர்ரக போதைப் பொருட்களும் கொண்டு வருவார்களாம்.
இந்த பார்ட்டியின் ஸ்பெஷல் அம்சமே ஓ.ஜி. எனப்படும் உயர்ரக கஞ்சா விற்பனைதானாம். இதன் ஒரு கிராமின் விலை 6,000 ரூபாயாம்.
தலைமறைவாக இருந்த மார்க் ரவியை போலீசார் சுற்றிவளைத்துவிட்டார்கள். இந்த பார்ட்டி விவகாரத்தில் தொடர்புடைய விக்னேஷ் சின்னதுரை என்பவர் பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இங்கு செயல்பட்டு வந்த மங்கி பாரின் எஃப்.எல்.3 வகை லைசென்ஸ் காலாவதியாகி ஆறு மாதகாலம் ஆகியும், அந்த பாரை செயல்பட அனுமதித்திருக்கிறார்கள் போலீசார். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை.
அதேபோல சட்டப்படி 21 வயது நிரம்பாதவர் களுக்கு மது வழங்கியதும் சட்டவிதி மீறலாகும். இந்த மங்கி பார் உரிமையாளர் என்று கூறப்படும் பாலசந்தரையும் போலீசார் தேடிவருகின்றனர். அதேபோல இங்குவரும் இளசுகள், கிளுகிளு அத்துமீறல்களை நடத்துவதற்கு உதவிய மெட்ராஸ் ஹவுஸ் மேலாளர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட அவரும் எஸ்கேப் ஆகிவிட்டார்.
தமிழகத்தின் தலைநகரையே தள்ளாட வைக்கிறார்கள் இது போன்ற போதை பார்ட்டி அரக்கர்கள். அரசு என்ன செய்யப்போகிறது?