மேட்டுப்பாளையத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் நடூர் ஏ.டி. காலனியில் 20 அடி உயரமும், 700 அடி நீளமும் கொண்ட சுவர் ஒன்றை ஆதிக்க சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கட்ட... அது இடிந்து விழுந்து 17 அப்பாவி உயிர்கள் பலியாயின.
"இனிமேல் சாதிச் சுவர்கள் என்ற தீண்டாமை சுவர்கள் கட்டப்பட்டால் நாங்கள் பல்வேறு வழிகளில் அந்த சுவர்களைத் தீண்டுவோம்' என தந்தை பெரியார் திரா விடர் கழகம் உள்ளிட்ட இயக்கங்கள் எச்சரித்திருந்தன.
இந்த நிலையில், கோவை பன்னிமடை யில் உள்ள கொண்டசாமி நகரில் உள்ள அருந்ததிய மக்கள் குடி யிருப்பை தனிமைப்படுத்தும்விதமாக கண்ணபிரான் நகர் பகுதியில் பத்து அடி உயரத்திற்கு மேல் நீண்ட சுவர் எழுப்பப் பட்டுள்ளது. "இந்த சுவர் தீண்டாமையை பறைசாற்றும் விதமாக இருக்கிறது' என தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருஷ்ணன், கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தார். அப்போது ஊடகத்தினரிடம் பேசிய கு.இராமகிருஷ்ணன், "பன்னிமடையில் அருந்ததிய மக்கள் வாழும் பகுதியையும், பொது வழியை மறைக்கும் வகையிலும் தீண்டாமை சுவரை எழுப்பி, கண்ணபிரான் என்ற லே-அவுட்டை உருவாக்கியிருக் கிறார்கள்.
"அது தீண் டாமை சுவரல்ல என்றும், இப்படி லே-அவுட் போடும்போது பக் கத்தில் தாழ்த்தப் பட்டவர்களின் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் நல்ல விலைக்கு மனைகள் விற்பனைக்குப் போவதில்லை. அதனால்தான் சுவர் எழுப்பிவிட்டோம்' என ஆதிக்க சாதிகள் புதிய வடிவில் தீண்டாமை யைக் கொண்டுவருகிறார்கள். இது பல்வேறு இடங்களில் நடைபெறு வதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன.
கோவையில் காமராஜபுரத்தில் தனியார் காம்ப்ளக்ஸ் உரிமையாளர் ஒருவர் தலித் மக்களின் வழியை மறித்து இருக்கிறார். அந்த வழி மாநகராட்சிக்கு சொந்தமானது. ஆனால் அந்த உரிமையாளர் இங்குள்ள அதிகாரிகளை சரிக்கட்டி, வழக்கு போட்டு இழுக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. இதேபோல சென்னை பெரம்பூரில், மக்கள் பயன் படுத்திக்கொண்டிருந்த, அரசாங்கத் திற்கு சொந்தமான ரயில்வே வழியை ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள் ஒரு பிரிவினர். இதை எதிர்த்தும் தோழர்கள் போராடிக்கொண்டிருக் கிறார்கள். அதுபோலவே, இந்த பன்னி மடையில்... அரசின் 50 அடி திட்டச் சாலையையும் ஆக்கிரமிப்பு செய்து, அருந்ததிய மக்கள் பயன்படுத்தக் கூடாது என்ற நோக்கில் சுவர் எழுப்பியிருக்கிறார்கள். இந்த தீண்டாமை சுவரை அகற்றி, பொதுப் பாதையை மக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அது நடக்க வேண்டும். இல்லையென்றால் தீண்டாமையை இடிக்க நாங்கள் சுவரைத் தீண்டுவோம்'' என்றார் கோபமாய். இதை கவனத்திற்கொண்ட மாவட்ட நிர்வாகம், கடந்த 01-08-2021 அன்று தீண்டாமை சுவரை ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு தகர்த்தெறிந்தது. கொண்டைசாமி நகருக்கும், கண்ணபிரான் நகருக்கும் இணைப்புப் பாதைகளை பொருத்தியது.
இதையறிந்து "தீண்டாமை சுவரை அகற்ற உத்தரவிட்ட தமிழக அரசிற்கும், கோவை மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி!' என உளமார உரைத்தார்கள் கு.இராமகிருஷ்ணனும் பல்வேறு இயக்கத் தோழர்களும்.
தீண்டாமை என்பது நவீன வடிவங்களை எடுத்துவருகிறது. கிராமங்களில் தனி டீ கிளாஸ் என்பது போல வணிகம் சார்ந்த நகரச்சூழலில் மாட்டுக்கறி சாப்பிடுவதற்கு எதிர்ப்பு, இறைச்சி சாப்பிடுபவர்களுக்கு வாடகைக்கு வீடு தர மறுப்பு, வீட்டுமனைகள் போடப்படும் இடத்திற்குப் பக்கத்தில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதி இருந்தால், சுற்றுச் சுவர் என்ற பெயரில் மதில் சுவர் என பல வழிமுறைகளைக் கையாளத் தொடங்கியிருக்கிறார்கள்.
புதிய குடியிருப்புக்கான இடங்கள் நல்ல விலைக் குப் போக வேண்டும் என்பதற்காக, காலம் காலமாகக் குடியிருப்பவர்களுக்கான பாதையை அடைப்பது, செல்வாக்கு மிக்கவர்களின் வழக்கமாக மாறிவருகிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தாலோ, அல்லது வணிக ரீதியில் சுவர் எழுப்புகிற வர்களுக்குத் துணையாக இருந்தாலோ இந்த நவீனத் தீண்டாமை நகர்ப்புறங்களில் வேகமாகப் பரவுகிறது.
__________________
விளக்கம்!
2021, ஆகஸ்டு 7-10 நக்கீரன் இதழில் "போலீஸ் பிடித்த டூவீலர்கள் எங்கே? சர்ச்சையில் தி.மு.க. நிர்வாகி!'’கட்டுரையில் தனது பெயர் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டும் குறிச்சி பிரபாகரன், கடந்த சட்டமன்றத் தேர்தலில் கிணத்துக்கடவு தொகுதி தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்டபோது தனக்காக வேலை பார்த்தவர்களில் ஒருவர்தான் மனோகரன் என்றும், அவருக்காகவோ, வேறு யாருக்குமோ நான் எந்தவித சிபாரிசும் செய்யவில்லை என்றும் நம் இதழில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவிப்பதோடு, 30 ஆண்டுகளாக பொதுவாழ்வில் ஈடுபட்டுவரும் குடும்பத்தைச் சேர்ந்த நான், இத்தகைய முறைகேடுகளுக்கு ஒருபோதும் துணை நிற்பதில்லை என்று விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
(-ஆர்)