கடந்த 21ஆம் தேதி வியாழனன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் எழுதிய நியாயங்களின் பயணம், மௌனமாய் உறங்கும் பனித்துளிகள், உலகமறியா தாஜ்மஹால்கள், பூ பூக்கும் இலை யுதிர் காலம், வானம் பார்க்காத நட்சத்திரங்கள் ஆகிய 5 நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில் கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "ரகுமான்கானின் பேச்சுக்கும், எழுத்துக்கும் நான் ரசிகன். கழக மாநாடுகளில் ரகுமான்கான் பேச எழுந்தாலே கூட்டம் ஆர்ப்பரித்து விடும். ரகுமான்கானின் பேச்சு, சட்டமன்றத்தில் இடி முழக்கமாகவும், தமிழகம் முழுவதும் வெடிமுழக்கமாகவும் எதிரொலிக்கும்.
ஒரு திறமைசாலியை கண்டு கொண்டால் அவர்களை அரவணைக்கும் பழக்கம் கலைஞ ரிடம் இருந்தது அதனால்தான், கலைஞரின் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக ரகுமான்கான் அமரவைக்கப்பட் டார். ரகுமான்கானை அ.தி.மு.க.வுக்கு வரச் சொல்லி எம்.ஜி.ஆர். அழைத்தபோதும் கொள்கை உறுதியுடன் தி.மு.க.வில் இருந்தவர். அ.தி.மு.க. ஒரு விஷயத்தில் இரட்டை நிலைப்பாட்டை எடுத்தது. இதைப்பற்றி சட்டமன்றத்தில் பேசிய ரகுமான்கான், "சின்னமோ இரட்டை இலை, அதனால் இரட்டைப் போக்கு!' என்று படாரென்று சொன்னார். இதற்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.
ரகுமான்கானின் சட்டப்பேரவை உரைக ளை எல்லோரும் படிக்கவேண்டும். எப்படிப் பேச வேண்டும், எப்படி உரைகளைத் தயாரிக்க வேண்டும் என்பதற்கு, அவருடைய உரைகள் ஒரு பாடப்புத்தக மாக வந்திருக்கிறது. ரகுமான்கான் போன்ற இடிமுழக்கங்களாக பலர் உருவாகவேண்டும். அதற்காகத்தான் "என் உயிரினும் மேலான', "பாசறைப் பக்கம்' போன்ற பல முன்னெடுப்புகளை இளைஞர் அணியினர் எடுத்துவருகின்றனர்.
நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்த புலனாய்வு அமைப்புகளை வைத்து தங்களுக்கு எதிரானவர்களை பதவி நீக்கம் செய்ய, ஒரு கருப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்திருக் கிறார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இதற்கு முன்பு, குடியுரிமை திருத்தச் சட்டம், வக்பு திருத்தச் சட்டம் என சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை எல்லாம் கொண்டு வந்தார்கள். அப்போதெல்லாம் இந்த சட்டங்களை தி.மு.க. எப்படி கடுமையாக எதிர்த்ததோ, அதே போல இந்த கருப்புச் சட்டத்தையும் எதிர்ப்போம். மக்களுடைய கவனத்தை திசைதிருப்ப மட்டுமல்ல, நாட்டையே ஜனநாயகப் பாதையிலிருந்து திசை திருப்புவதற்காக இதை செய்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை, கொள்கையை விதைத்து, உழைப்பை உரமாக்கி, வெற்றியை விளைவிக்க வேண்டும். இயக்கத்தில் எத்தனை கோடி பேரைச் சேர்த்தாலும், அவர்களை கொள்கைப்பிடிப்பு உள்ளவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் போல தி.மு.க. துணை நிற்கும்'' என்றார்.