அறிவாலயத்தில் கடந்த டிச. 24-ஆம் தேதி தி.மு.க. மா.செ.க்கள், எம்.பி.தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஜனவரி 03-ஆம் தேதியிலிருந்து ‘மக்கள் சந்திப்பு இயக்கத்தை தி.மு.க. முன்னெடுக்கப் போவதாக அறிவித்தார் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். இப்போது "ஜன. 08-லிருந்து பிப். 17-வரை மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெறும்' என தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்திலிருக்கும் 12,617 ஊராட்சிகளுக்கும் தி.மு.க. நிர்வாகிகள் சென்று மக்களோடு மக்களாக அமர்ந்து, அவர்களின் நிறைகுறைகளைக் கேட்பது தான் மக்கள் சந்திப்பு இயக்கத்தின் நோக்கம்.
சுருக்கமாகச் சொன்னால், "மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம்'’ -இதுதான் தி.மு.க.வின் புதிய கோஷம், புதிய பாணி. மக்கள் சந்திப்பு இயக்கத்தை ஸ்டாலின் அறிவிப்பதற்கு முன்பாகவே எம்.பி. தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர்கள் களம்காணத் தொடங்கிவிட்டார்கள்.
மக்களிடம் தி.மு.க.வினரின் அணுகுமுறை எப்படி உள்ளது என்பதை நேரடியாக அறிந்து கொள்ள நாமக்கல் எம்.பி. தொகுதியின் பொறுப்பாளர்களான மாஜி அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, தி.மு.க.வின் தேர்தல் பணிக்குழு செயலாளரும் மாஜி எம்.எல்.ஏ.வுமான எஸ்.ஆர். பார்த்திபன் ஆகியோரை பின் தொடர்ந்தோம்.
தி.மு.க.வுக்கு மிகவும் வீக்கான ஏரியா கொங்கு மண்டலம். அதிலும் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளும் அ.தி.மு.க.வசம் இருப்பதால், லோக்கல் தி.மு.க.வினரே உற்சாகம் குறைந்திருந்த நிலையில்தான்... பொங்கலூராரும் பார்த்திபனும் நாமக்கல் வந்திறங்கினார்கள்.
அவர்களின் முதல் வேலையே இப்போதைய மா.செ. காந்திசெல்வனையும் அவருக்கு எதிராக நின்று மல்லுக்கட்டும் மாஜி மா.செ. பார் இளங்கோவனையும் கைகுலுக்க வைத்தார்கள். தி.மு.க.வில் பொதுவான நடைமுறை என்னவென்றால், ஒன்றியம், நகரம், பேரூராட்சி என்ற அளவில்தான் கட்சியினரிடையே ஆலோசனைக் கூட்டங்களும் சந்திப்புகளும் நடக்கும்.
ஆனால் நமது ஸ்பாட் விசிட்டிலோ, நாட்டாமங்கலம், கல்யாணி, கண்ணூர், களங்காணி, புதுச்சத்திரம் என பட்டியல் இன மக்கள் அதிகமாக வசிக்கும் கிராமங்களுக்குள் காலை 8 மணிக்கே, தொகுதி பொறுப்பாளர்களும் மா.செ. காந்திசெல்வனும் சென்றார்கள். அங்கு சென்றதுமே தி.மு.க. கி.செ. மற்றும் கிராமத்தின் முக்கிய பிரமுகர்களுக்கு சால்வைகள், மாலைகள், பூங்கொத்துகள் என அவர்களை மகிழ்ச்சி மனநிலைக்குத் தயார்படுத்தினார்கள்.
தண்ணீரோ, டீயோ, காபியோ எது கொடுத்தாலும் அன்போடு வாங்கிக் குடித்துவிட்டு, கிராமத்தில் இருக்கும் பிரச்சனைகள், கட்சியின் கிளைச் செயலாளர்களின் குடும்ப நிலவரங்களை அக்கறையுடன் விசாரித்தார்கள். இது எல்லாமே கோயிலோ, மரத்தடி நிழலோ அங்கேயே பாய் விரித்துப் போடச்சொல்லி, தரையில் அமர்ந்தவாறு நடப்பதைப் பார்த்தபோது நமக்கு மட்டுமல்ல, அந்த கிராமங்களின் மக்களுக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது.
நாட்டாமங்கல கிராமத்தில் எஸ்.ஆர்.பார்த்திபனை சூழ்ந்து கொண்ட மக்கள், “""எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்தவரைக்கும் அந்தக் கட்சிக்குத்தாங்க ஓட்டுப் போட்டோம். ஜெயலலிதா இறந்த பிறகு அந்தக் கட்சிக்காரங்க யாரும் இங்க வந்து எட்டிக்கூடப் பார்க்கல. இப்பதான் முதல்முதலா நீங்க வந்துருக்கீங்க''’என்றதும் சற்றே ஜெர்க்கானார் பார்த்திபன்.
""எதுக்கும் கவலைப்படாதீங்க. உங்க குடும்பத்தில் ஒருத்தரா நம்ம தளபதி இருப்பார், எங்களை நம்பி வாங்க''’என பார்த்திபன் கையெடுத்துக் கும்பிட்டதும்... மக்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர். அதற்கடுத்ததாக ராசிபுரம், சேந்தமங்கலம் ஆகிய தனித் தொகுதிகளின் கிராமங்களில் தெருவிளக்கு வெளிச்சத்தில், தரையில் ஜமுக்காளம் விரித்து அமர்ந்து பெண்களிடம் குறைகளைக் கேட்டு, ஆறுதல் வார்த்தைகள் கூறி மனம்குளிரப் பேசுகிறார்கள்.
இரவு 11:00 மணிவரை அவர்களுடன் பயணித்த நாம், மா.செ. காந்திசெல்வனிடமும் எஸ்.ஆர்.பார்த்திபனிடமும் பேசினோம். ""ஆடம்பரத்தை தவிருங்கள், மக்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்துங்கள் என்பதுதான் தளபதியின் ஆலோசனை. அதன்படிதான் எங்களின் பயணமும் இருக்கிறது. இந்த தொகுதியில் இருக்கும் பெரும்பான்மையினரான பட்டியல் இனத்தவர்கள், அ.தி.மு.க. அனுதாபிகளாகவே இருந்தார்கள். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அவர்களின் மனநிலையில் மாற்றம் தெரிகிறது. அந்த மாற்றத்தை தி.மு.க.வுக்கு சாதமாக்கும் முயற்சியின் ஒரு பகுதிதான் இது. எம்.பி. தேர்தல் என்றாலும் சரி, எம்.எல்.ஏ. தேர்தல் என்றாலும் கொங்கு மண்டலத்தில் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தும் உத்வேகத்துடன் களம் இறங்கியுள்ளோம். வெற்றி எங்கள் வசப்படும்''’என்றார்கள் உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும்.
-இளையராஜா