"ஹலோ தலைவரே, அரசியல் பரபரப்புக்கு நடுவே, கரூரில் நடந்த அசம்பாவிதம் குறித்த சி.பி.ஐ.யின் விசாரணைகள் விறுவிறுப்படைந்து வருகிறதே.''”

Advertisment

"ஆமாம்பா,  சி.பி.ஐ. நவீன ஆய்வுகளை நடத்தறாங்களே?''”

"கரூர் உயிர்ப்பலிகள் தொடர்பான விசாரணயில் சி.பி.ஐ. இறங்கியிருக்கும் நிலையில், இந்த விசாரணையை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி ஓய்வுபெற்ற நீதிபதி அஜய்ரஸ்தோகி தலைமையிலான மூவர் குழு கண்காணித்து வருகிறது.  சி.பி.ஐ. டீம்  கரூரில் கடந்த இரு வாரங்களாக முகாமிட்டிருக்கிறது. . 3டி லேசர் உள்பட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய அவர்கள், முதல் கட்டமாக  சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். இரண்டாம் கட்டமாக, பல்வேறு தரப்பினரிடமும் வாக்குமூலம் பெற்று வருகிறார்கள். மருத்துவமனை டாக்டர்கள்,  மருத்துவமனை ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ஓட்டுநர்கள்,  பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட விபரங்கள் என பலரின் வாக்குமூலங்களும் பெறப்பட்டு வருகின்றன. சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் சேகரித்திருக்கிறார்கள். நான்கு நாட்களுக்கு ஒருமுறை, தங்களுக்குக் கிடைத்த தகவல்களை கண்காணிப்புக் குழுவிடம் சி.பி.ஐ. பகிர்ந்துகொண்டு, ரிப்போர்ட்டையும் கொடுத்துவருகிறதாம். கண்காணிப்புக் குழு இதன் அடிப்படையில் 17 ஆம் தேதி முதல், அறிக்கைகளை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யுமாம்.''”

Advertisment

"அமைச்சர் நேரு விவகாரத்தில் அமலாக்கத்துறை வியூகங்களை வகுத்து வருகிறதே?''”

"அமைச்சர் நேருவின் நகராட்சி நிர்வாகத்துறையில் நடந்த பணி நியமன  ஊழல் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி, தமிழக காவல்துறை பொறுப்பு டி.ஜி.பி. வெங்கட்ராமனுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதிய விவகாரத்தை, ரகசியமாக வைத்திருந்தது தமிழக அரசு. இது திடீரென்று லீக் ஆனதால், இதை யார் வெளியிட்டது என அதிகாரிகள் தரப்பில் விசாரணை நடந்தது. இது டி.ஜி.பி. அலுவலகத்தி-ருந்து லீக் ஆகவில்லை என்று முதல்வருக்கு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல் இதை அமலாக்கத்துறைதான் லீக் செய்தது என்கிற தகவலும் அவர்களுக்குக் கிடைத்ததாம்.  இந்த நிலையில் அந்தக் கடிதத்தின் அடிப்படையில் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், நீதிமன்றத்தை அணுகும் முடிவில் இருக்கிறதாம் அமலாக்கத்   துறை. இது தொடர்பாக அது டெல்லி மேலிடத்திடம் ஆலோசனை கேட்டு வருகிறதாம்.''”

Advertisment

"நெல்லையில் பா.ஜ.க. தலைவர்  நயினாரை அ.தி.மு.க. மாஜி மந்திரிகள் உதயகுமாரும் கடம்பூர் ராஜும் சந்திச்சுப் பேசி யிருக்காங் களேப்பா?''”

"பசும்பொன்னில் நால்வர் அணி ஒண்ணு சேர்ந்ததால் அ.தி.மு.க. வாக்கு வங்கி அடி வாங்கும்  என்றும், அதற்கு முக்குலத்தோர் சமூக வாக்குகள் கேள்விக்குறி யாகும் என்றும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,நெல்லையில் காலஞ் சென்ற  அ.தி.மு.க. பிரமுகர் கருப்பசாமி பாண்டிய னின் பேரனோட திருமணம் நடந்தது. இதில், அ.தி.மு.க. மா.ஜி.க்களான உதயகுமாரும் கடம்பூர் ராஜூம் கலந்துக்கிட்டாங்க. நயினாரின் சிபாரிசில்  கடம்பூரார் டெல்லியில தனக்கு வேண்டியதை சாதித்துவருவதாக பலரும் பேசிவரும் நிலையில்தான் இந்தத் திருமணத்திற்கு கடம்பூரார் வந்திருக்கார்.வந்தவர் பா.ஜ.க. நயினார் நெல்லையில் இருப்பதைத் தெரிந்துகொண்டு, உதயகுமாரோடு போய் அவரை சந்திச்சிருக்கார். அப்ப அந்த  நால்வர் அணி பற்றிப் பேசப்பட்டிருக்கு. அப்ப உதயகுமார் நயினாரிடம், இந்த நால்வர் அணி சந்திப்பு எங்களுக்கு எந்தவித பின்னடைவையும் ஏற்படுத்தாது. அது ஒருநாள் பரபரப்புதான்னு போகிற போக்கில் சொல்லிட்டுப் போயிருக்கார்.''”

"அதுசரி, தங்கள் தேர்தல் பணிகளை அப்படியே தி.மு.க. பாணியை காப்பியடித்து நடத்திவருகிறாரே எடப்பாடி?''“ 

"அவர் மண்டையில் அவ்வளவுதான் சரக்கு. சமீபத்தில்  மாமல்லபுரத்தில் இருக்கும் தனியார் ரிசார்ட் ஒன்றில், "என் வாக்குச் சாவடி; வெற்றிச் சாவடி!'’ என்னும் தலைப்பில், தி.மு.க.வின் மாநில நிர்வாகிகள் தொடங்கி பேரூர்க் கழக நிர்வாகிகள் வரை  பங்கேற்கும் பயிற்சி முகாமை முன்னெடுத் தது தி.மு.க. தலைமை. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அந்த முகாமில், தேர்தல் வெற்றிக்கான பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கப்பட் டன. இந்த நிலையில், இதே போன்ற வியூகத்தை அ.தி.மு.க.வும் கையிலெடுத்துள்ளது. 2ஆம் தேதி சென்னை அ.தி.மு.க. தலைமையகத்தில், கட்சியின் தகவல் தொழில் நுட்ப அணியினருடன் ஆலோ சனை நடத்திய எடப்பாடி, பூத் கமிட்டிகளை எப்படி நடத்த வேண்டும் என்கிற பணிகளையும் தொடங்கி வைத்துள்ளார். இந்த பணிகளை, பூத் கமிட்டி ஆக்டிவேஷன் என்கிற பெயரில் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டியில் கூடுதலாக 9 பேரை இணைக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருக்கிறார்.''

"இந்த 9 நபர்களுக்கு, பாக கிளை முகவர்கள் என்கிற அடையாளத்தை கொடுத்துள்ளது அ.தி.மு.க.''” 

"காங்கிரஸுக்குள் ஏதேதோ நடந்துகொண்டி ருக்கிறதே?''”

rang3

"தமிழக காங்கிரசின் செயற்குழு கூட்டம் கடந்த வாரம் நடந்த நிலையில், மீண்டும் 2ஆம் தேதி நடந்திருக்கிறது. இதற்காக கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஸ் ஜோடங்கர், அவசரம் அவசரமாக 1ஆம் தேதி இரவு சென்னைக்கு வந்தார். அவர் முன்னிலையில்  மீண்டும் செயற்குழு கூட்டம் நடந்தது. அப்போது,  காங்கிரஸுக்கு சாதகமான 125 தொகுதிகளை அடையாளம் கண்டு, அதில் கவனம் செலுத்தும் வகையில்  பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று பேசப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மேலிடப்  பொறுப்பாளர் கிரீஸ் ஜோடங்கரை மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் சந்தித்துள்ள னர். அப்போது, காங்கிரஸ் நடத்தும் விழாக்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்றும், கூட்டங்களுக்கும் அழைக்கப்படுவதில்லை என்றும் புகார் தெரிவித்ததோடு, கட்சிப் பணி களுக்காக ஐந்து நபர்கள் கொண்ட ஒரு குழுவை  செல்வப்பெருந்தகை அமைத்தார். அதிலுள்ள இருவரின் அதிகார ஆட்டம் எல்லைமீறிப் போய்க் கொண்டிருக்கிறது என்றும் ஆதங்கப்பட்டிருக்கிறார் கள். இது குறித்து விசாரிப்பதாக  ஜோடங்கர் உறுதி கொடுத்திருக்கிறாராம். இது சத்தியமூர்த்தி பவனை பரபரப்பாக்கி வருகிறது''” 

"பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார், மாஜி நிர்வாகியோடு பெரிதாகப் போராடி வருகிறாரே?'”

"அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைப்பதற்காகவே தமிழக பா.ஜ.க. தலைவர் பொறுப்பிலிருந்து அ.மலையை நீக்கிவிட்டு, நயினார் நாகேந்திரன் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அன்றிலிருந்து  மாஜி நபருக்கும் நயினாருக்கும் ஒத்துப்போகவில்லை. இருந்தாலும் அவர்கள்  அதை வெளிக்காட்டிக்காமல்  ஒரே மேடையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். ஆனால் அந்த மாஜி தன்னுடைய அதிரடி பேச்சுக்களால், தான்தான் தமிழக பா.ஜ.க.வின் ஆக்டிங் தலைவர்போல் செயல்பட்டுவருகிறார். இது நயினாருக்குத் தன்மானப் பிரச்சினையாக இருக்கிறதாம். எந்த மாவட்டத்திற்கு அந்த மாஜி சென்றாலும் அவருக்குத் தடபுடலாக வரவேற்பு அளிப்பது நயினாருக்குப் பிடிக்கவில்லையாம். இதைத் தொடர்ந்து, பா.ஜ.க.வில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநிலத் தலைவராக உள்ள தனது  மகன் நயினார்பாலாஜி வழியாக, அனைத்து மாவட்டத்தினருக்கும் அந்த மாஜியை வரவேற்க வேண் டாம் என்று அறிவுறுத்தியிருக் கிறார். இதையெல்லாம் பார்க்கும் கமலாலயத் தரப்பினர், நயினார்  கட்சியை வளர்க்கிறாரோ இல்லையோ, அந்த மாஜியை சமாளிப்பதிலேயே அவர் பதவிக்காலம் போய்விடும் போலிருக்கிறது என்று கமெண்ட் அடிக்கின்றனராம்.''”

"நவம்பர் 2-ஆம் தேதி சென்னையிலிருந்து ஹைதராபாத் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், பயணிகளுக்கு கடும் உயிர் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறதே?''

rang2

"அன்னைக்குக் காலையில 5.50-க்கு கிளம்பவேண் டிய விமானத்தை எந்திரக் கோளாறுன்னு சொல்லி மூன்று மணி நேரத்துக்கும் மேலா நிறுத்தி வெச்சுட் டாங்க. அவ்வளவு நேரம் காத்திருந்த பயணிகள் விசாரிக்கவோ, புகார் சொல்லவோ அங்க எந்த வசதியும் இல்லைன்னு புலம்பியிருக்காங்க. இதனால அதில பயணிக்க வேண்டிய 70 பயணிகளில் 40 பேர் வரை கிளம்பிவிட்ட நிலையில், காத்திருந்த 30 பயணி களோடு 1.30 மணிக்கு எடுத்திருக்காங்க. இதன்பின் கிளம்பிய விமானம்,  ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட நிலையில், 10 ஆயிரம் அடி உயரம் சென்றபோது அதன் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. அதனால் விமானத் தை தரையிறக்க அனுமதி கேட்டு விமான நிலையத்தை பைலட் தொடர்பு கொண்டபோது, உடனடியாக அனு மதி கொடுக்கப்படவில்லை. அதனால் பயந்துபோன பயணிகள் கூச்சலிட்டனர். அதில் பலருக்கு சிலமணி நேரம் காது கேட்கும் திறனை இழந்ததாகவும், சிலருக்கு மயக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்டதாகவும் தெரிகிறது. தாமதமாக விமானம் தரையிறக்கப்பட்ட நிலையில், பயணிகள் அந்த விமானத்தின் படிக்கட்டுகளிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பயணிகளில் பலர் வயதானவர்களாகவும் நோயாளிகளாகவும் இருந்தனர். பலரும் தங்கள் டிக்கட் சார்ஜைத் திருப்பித் தரவேண்டும் என்றும், 7 மணி நேரம்வரை தாமத மானதால், அதற்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.  இதற்கிடையில் அந்த விமான நிறுவனம், செயல்பாட்டை நிறுத்தப்போவதாக அறிவிப்பை வெளியிட்டதால், பயணிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது. பயணிகளுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்திய ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பயணிகள் அனைவரும் வலியுறுத்திவருகிறார்கள்.''

"எடப்பாடி நடத்திவந்த பிரச்சார டூரை வைத்து, தொலைக்காட்சி நிர்வாகி ஒருவர் மஞ்சள் குளித்திருக்கிறாரே?''”

 "ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. சார்பில் கடந்த ஜூலை மாதம் எடப்பாடி, பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கி, 60 நாட்களில் 175 சட்ட மன்றத் தொகுதிகளில் வலம் வந்தார். அப்போது அவருடைய பிரச்சாரத்தை படம்பிடிக்க, அ.தி.மு.க.விற்கு சொந்தமான தொலைக்காட்சி சேனலின் ’ஜெயமான’ தலைமை நிர்வாகியும் வாகனத்தில் கூடவே சென்றார். அப்போது, சேனல் செய்தியாளர்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்தி லும் உள்ள அ.தி.மு.க. மா.செ.க்களிடம் தலா 2 லட்ச ரூபாய் வரை வசூலித்திருக்கிறார். மேலும், தங்குவதற்கான சொகுசு விடுதி, மதுபானம் உள் ளிட்ட செலவுகளையும் அவர்கள் தலையிலேயே கட்டினாராம். இந்த வசூல் மூலம் கிடைத்த தொகையை வைத்து திருவண்ணாமலையில்  ரூ. 1.25 கோடி ரூபாய்க்கு இடம் ஒன்றையும் தன் அக்கா மகன் பெயரில் அந்த சேனல் நிர்வாகி வாங்கியிருக்கிறாராம். இந்த விவகாரம் எடப்பாடி காதுவரை போயிருக்கிறதாம்.''”

"எடப்பாடி பினாமியை பா.ஜ.க.வில் முக்கிய பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளார்களாமே?''

rang1

"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் எடப்பாடியின் விசுவாசியாக இருந்தவர் சேலத்து ஜெயராமன். எடப்பாடியின் நம்பிக் கைக்குரியவராக இருந்ததால் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மேம்பாலம் கட்டும் பணிகளை இவரிடம் ஒப்படைத்து செய்துவந்தார். அ.தி.மு.க. ஆட்சி முடிந்ததும் அடுத்தகட்ட நகர்வாக, வி.பி.துரைசாமி மூலமாக பா.ஜ.க.வில் நுழைந்து, வைட்டமின் "ப' மூலமாக தேசிய தொழில்வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்றார். அப்பதவி மூலமாக, தமிழகத்திலுள்ள அவரது கல்லூரிகளுக்கான அனைத்து அனுமதிகளையும் பெற்றதோடு, டெல்லியில் நடக்கும் பணிகளுக்கான டெண்டர் களை பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் கல்லா கட்டியுள்ளாராம். இதில் ஏமாற்றப்பட்டவர்கள் கேள்விகேட்டால், வழக்கறிஞரை வைத்து மிரட்டிவந்துள்ளார். மேலும், சி.பி.ஐ.யால் தேடப்படும் குற்றவாளியோடு சில்மிஷம் செய்த விவகாரமும் தலைமைக்கு தெரியவர... அவரது பதவியை பறித்துள்ளார்களாம்!''

"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் திருமகனார் குருபூஜை விழாவிற்கு வருகை தந்த எடப்பாடியை வரவேற்பதற்காக, அ.தி.மு.க.வின் ஐடிவிங் செயலாளர் ராஜ்சத்யன் ஸ்பெஷலாக ஸ்படிக மாலை ஒன்றை ஆர்டர் செய்து வாங்கி இருந்தாராம்.  கடந்த சில மாதங்களாக ராஜ்சத்யனை எடப்பாடி, ஓரங்கட்டி வருவ தால் ஸ்படிக மாலையை எடப் பாடிக்கு அணிவிக்க விரும்பாமல், அதை, பசும்பொன்னில் உள்ள தேவர் திருமகனார் நினைவிடத்திற்குக் கொண்டு சென்று, அவருடைய சிலைக்கு அணிவித்திருக்கிறாராம் ராஜ்சத்யன். இதையறிந்த எடப்பாடி  சத்யன் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம்.''

________________
இறுதிச்சுற்று!

"பாதம் தாங்கி பழனிச்சாமி...''
-முதல்வர் காட்டம்!

rangbox

தர்மபுரி மாவட்ட தி.மு.க. எம்.பி. மணியின் இல்லத் திருமண விழாவில் திங்கள்கிழமை கலந்துகொண்ட முதல்வர் ஸ்டா-ன், எஸ்.ஐ.ஆருக்கு எதிராக நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள் ளாத அ.தி.மு.க. எடப்பாடி பழனிச்சாமியை ஒரு பிடி பிடித்தார்.  அவர் பேசும்போது, "எஸ்.ஐ.ஆர். எனும் திட்டத்தை மையமாக வைத்து சீராய்வு என்ற பெயரில்  ஒரு தீய செயலை செய்ய தேர்தல் ஆணை யம் திட்டமிட்டுள்ளது. அதனைத் தடுப்பதற்கான முயற்சியை எடுத்துள்ளோம். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க. கலந்துகொள்ளவில்லை. இதன்மூலம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இரட்டை முகத்தைக் காட்டியுள்ளார். ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்க்க பயப்படுகிறார் பழனிச்சாமி. ஆணையத்தின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாகச் சொல்லும் அவரால், அதனை எதிர்க்க முடியவில்லை. பா.ஜ.க.வின் பாதம் தாங்கி பழனிச்சாமி என்பதை அடிக்கடி நிரூபித்துக்கொண்டேயிருக்கிறார்'' என்று கடுமையாகத் தாக்கினார்.

-இளையர்