நீலகிரி மலையின் மேலே உள்ள கூடலூர் தொகுதி தி.மு.க.வின் செல்வாக்குமிக்க கோட்டையைக் கொண்டது. இந்தக் கோட்டையை எப்படியும் கைப்பற்றிவிட வேண்டும் என அ.தி.மு.க களமிறங்கியபோது... அந்தக் கோட்டையைப் பிளக்க சஜீவன் என்கிற கோடரி தேவைப்பட்டது. ஏற்கனவே சஜீவன் கோடரிக்கு, கொட நாடு கோட்டையை பிளந்த வரலாறு இருப்பதால், சஜீவனிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

சஜீவனும் அதை எளிதாய் உடைக்க, தி.மு.க.வின் கோட்டையை கைப்பற்றி, பொன்.ஜெயசீலனை வெற்றியாளராய் அனுப்பியது அ.தி.மு.க. அதற்குப் பின்தான் சஜீவன் என்கிற கோடரி, கூடலூரில் காணாமல் போய் விட்டது. வெற்றி யாளர் ஜெயசீலனும் கோடரியைத் தேடவில்லை.

admk-mla

ஜெயசீலன் இப்போது "குன்னூர் தி.மு.க. எம்.எல்.ஏ.வும், வனத்துறை மினிஸ்டருமான இளித்துறை ராமச்சந்திரனோடு கைகோர்த்து நடக்கிறார்' என அ.தி.மு.க.வினர் புகார் வாசிக்கிறார்கள்.

Advertisment

இந்த நிலையில்... கொரோனா நலத் திட்டங்கள் வழங்க, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நீலகிரிக்கு வந்தபோது, "கூடலூரை எப்படி இழந்தோம்?' என மா.செ. முபாரக்கிடம் நேரடியாக கேட்டேவிட்டார். "அதொண்ணுமில்லைங்க, 1,800 ஓட்டு அவுங்க கூடுதலா வாங்கிட்டாங்க...'' என வாக்கு வித்தியாசத்தைச் சொன்னார் மா.செ.

நீலகிரி மாவட்டத்தில் மா.செ.வுக்கும் மந்திரிக்கும் நீண்டகாலமாக நடக்கும் மல்லுக்கட்டு, உடன்பிறப்புகள் அறிந்ததுதான். அதனால் கூடலூர் தொகுதி தோல்வி குறித்து தி.மு.க. கழக நிர்வாகிகள், மா.செ.வுக்கு எதிராக கடந்த 20-ந் தேதி கூட்டம் போட்டு தீர்மான நகலை தலை மைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

ddadmk

Advertisment

அந்த தீர்மானத்தில் கூடலூர் தொகுதி வேட்பாளர் அறிவிப்பிற்கு பிறகு, அ.தி.மு.க. கொட நாடு சஜீவனோடு 19-01-2021 அன்று கூடலூர் சாஸ்தாபுரி ஹோட்டலில் தி.மு.க. நிர்வாகிகள் 11 மணி நேரம் சந்தித்தது. தி.மு.க. வேட்பாளர் காசிலிங்கம் "2 கோடி செலவு செய்ய என்னால் முடியும்' என தலைமையிடம் சொல்லிவந்த பின்பு, தலைமையிலிருந்து பணம் வரும்வரை காசிலிங்கத்தை செலவு செய்துவிடாமல் தடுத்தது.

"தலைமை கொடுத்த பணத்திலேயே பாதிப் பணம் மட்டுமே செலவு செய்தது. ஊட்டி சேரிங்கிராஸில் பல கோடிகள் பெறுமானமுள்ள ரிஸார்ட் ஒன்றை தி.மு.க. புள்ளி ஒருவர் வாங்கியது...' என பலவற்றை பட்டியலிட்டு, "கூடலூர் தோல்விக்கு காரணமான. மா.செ. உள்ளிட்ட நிர்வாகி களை மாற்ற வேண்டும்' என வலியுறுத்தியிருக்கிறோம்'' என்கிறார்கள் கோபமாய். மா.செ. தரப்பும் தங்கள் தரப்பு நியாயத்தையும் தோல்விக்கான பிற காரணங்களையும் பட்டியலிட்டு தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், கூடலூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ ஜெயசீலனை தி.மு.க.விற்குள் இணைக்கும் வேலையில் மும்முரமாய் இறங்கியிருக்கிறார் மினிஸ்டர் ராமச் சந்திரன். "இந்த இணைப்பின் மூலம் முபாரக்கை பீட் பண்ணுவதோடு, நீலகிரி என்றாலே தி.மு.க.வின் கோட்டை என்கிற பெயரை உண்டாக்கிவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் ராமச்சந்திரன், அனைத்து அரசு விழாக்களிலும் ஜெயசீலனோடு நெருக்கமாகப் பழகுகிறார்' என்கிறார்கள் தி.மு.க.வின் ஒரு பகுதியினர்.

"எவ்வளவோ பணத்தை இறைத்து, யாரையெல்லாமோ விலைக்கு வாங்கி என் கூடலூர் தொகுதியில் ஜெயசீலனை ஜெயிக்க வைத்தேன். ஆனால் இப்போது என்னை அவன் மதிப்பதேயில்லை'' என கொடநாடு புகழ் சஜீவன் சேலம்வரைக்கும் புகார் சொன்னார். சேலமோ... "இப்போதைக்கு நீலகிரிக்கு வருவதற்கான அரசியல் சாலைகள் பாதுகாப்பாய் இல்லை. கொஞ்சம் நிலை தவறினால், இருவருமே மலையிலிருந்து தள்ளப்பட்டு விடுவோம். அதனால் அமைதிகாப்பதே இப்போதைக்கு சாலை சரி செய்ய சரியான ஆயுதம் எனக் கூறியது சஜீவனை கடுப்படித்து இருக்கிறது'' என்கிறார்கள் அ.தி.மு.க.வின் உயர்மட்ட நிர்வாகிகள்.

"தி.மு.க.வில் இணை கிறீர்களாமே?'' என கூடலூர் எம்.எல்.ஏ. பொன்.ஜெய சீலனிடம் கேட்டோம். "நிறைய நபர்கள் இப்படித்தான் கேட்கறாங்க. அதுக்கு காரணம் தி.மு.க. அமைச்சர்கள் யார் இங்கே வந்தாலும், நான் அவர்களை சந்திப்பதால்தான். என் தொகுதி மக்கள் என்னை நம்பி வாக்களித் திருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டி, தொகுதிக்கு வேண்டியதை கேட்கிறேன். அவர்களும் செய்து தருவதாய் உறுதி கூறுகிறார்கள். நான் கட்சி மாறுகிறேன் என வரும் செய்திகளை நம்பாதீங்க, அவற்றை புறந்தள்ளுங்க'' என்கிறார்.

மலை மீதுள்ள கூடலூர் தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளிலும் உள்ளடிகளுக்குப் பஞ்சமில்லை. இதில், எதிர்க்கட்சியான அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை வளைத்து, ஆளுங்கட்சிக்கு சாதகமாக்க தி.மு.க. அமைச்சரும் அவரது சகாக்களும் பல கணக்குகளுடன் தீவிரமாக செயல்பட்டுவருகிறார்கள்.