தமிழக பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் நயினார் நாகேந்திரனைப் பார்த்து, கட்சியில் அவருக்கு எதிராக காய்நகர்த்தியவர்கள் எல்லாம் மிரள்கிறார்களாம். காரணம், ’வெளியே சிரிப்பு உள்ளே நெருப்பு’என்பதுதான் நயினாரின் இயல்பு என்கிறார்கள்.
குறிப்பாக, நயினாரைக் கண்டு அரண்டு போயிருக் கிறார்களாம் தென்காசி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள். இதுகுறித்து அங்கிருக்கும் பா.ஜ.க. நிர்வாகிகளிடமே விசாரித்த போது,“"தென்காசி மாவட்ட பா.ஜ.க. தலைவராக இருப்பவர் ஆனந்தன் அய்யாச்சாமி. இவர், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினரும், பிரதமர் மோடிக்கு வேண்டப்பட்டவருமான தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்புவிற்கு ரொம்பவும் நெருக்கமானவர். இவரது பலம் தெரிந்ததால், ஏற்கனவே மாநில நிர்வாகியாக இருந்த ஆடுமலை, தான் கட்சிப் பொறுப்பில் இருந்தவரை, தன் வீறாப்பைக் காட்டிக்கொள்ளாமல் ஆனந்தன் அய்யாச்சாமியிடம் அடக்கியே வாசித்தார். அதுமட்டுமல்லாது, பண்ணையார் என்று கட்சியினரால் அழைக்கப்படும் நயினார், தன்னிடம் இருந்த மாநிலத் தலைவர் பதவிக்குப் போட்டியாக வந்துவிடக்கூடாது என்று, இந்த ஆனந்தன் அய்யாச்சாமி மூலம், அவரைப் பற்றிய எதிர்மறைக் கருத்துக்களை பரப்பிவந்தார்.
அதோடு நாடாளுமன்றத் தேர்தலில் நெல்லையில் களமிறக்கப்பட்ட நயினார், கரையேறி விடாதபடி அவருக்கு தொடர்ந்து இடைஞ் சலும் கொடுத்துவந்தார். இதற்கும் ஆடுமலைக்கு உதவியாக இருந்தார் ஆனந்தன் அய்யாச்சாமி.
ஆனால், இவர் களின் எதிர்பார்ப்பையும் மீறி நயினார், பா.ஜ.க.வின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுவிட்டார். இப்போது நயினார், தனக்கு எதிராகப் பள் ளம் தோண்டிய ஆனந்தன் அய்யாச் சாமி உள்ளிட்டவர் களுக்கு எதிராக, நெருக்கடிகளைக் கொடுப்பாரோ என்று, இந்தத் தரப்பினர் மிரண்டுபோயிருக் கிறார்கள். அதனால் நயினாருக்கு செக் வைக்கும் விதமாக, நெல்லை மாவட்ட அரசியலில் நயினார் தேவையில்லாமல் மூக்கு நுழைக்கப் பார்க்கிறார். கட்சியைத் தன் கட்டுப்பாட்டிற் குள் கொண்டுவந்து விட்டார். அதனால், எங்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. எனவே என்னுடைய மாவட்டத் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என்று நெல்லை மாவட்ட பா.ஜ.க. தலைவரான தயாசங்கர் பகிரங்க அறிக்கையை வெளியிட்டு, ராஜினாமாவும் செய்திருக்கிறார். இதன் பின்னணியில் ஆடுமலையும் ஆனந்தனும் இருக்கிறார்கள். இதையறிந்து நயினார் டென்சனில் இருக்கிறார்.
அதுமட்டுமல்ல, மாவட்ட பா.ஜ.க. தலைவரான ஆனந்தனோ, தென்காசி மக்களவை தொகுதி யிலோ அல்லது தன்னுடைய சொந்த ஊரான வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியிலோ போட்டியிட்டு மக்கள் பிரதிநிதியாக ஆகிவிட வேண்டும் என்கிற கனவில் இருந்தார். அதனால்தான் ஆடுமலை ஆட்டுவித்தபடியெல்லாம் ஆடினார்.
ஆனால் விதி வலியது. மாநில தலைவர் பதவிக்கு கணக்குப் போட்ட ஆனந்தன், ஸ்ரீதர் வேம்புவின் பார்வையால் தென்காசி மாவட்ட பா.ஜ.க தலைவராகத் தான் வரமுடிந்தது. அதற்கு மேல் முன்னேற முடியவில்லை. இப்போது நயினார் தனது அரசியல் எதிரியாக ஆனந்தனை அடையாளம் கண்டு கொண்டிருப்பதால் இனியும் தனக்கு சறுக்கல்தான் ஏற்படும் என்று அஞ்சுகிறார்.
நயினார் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவராக நீடிக்கும் வரை, தென்காசி எம்.பி. தொகுதியோ அல்லது வாசுதேவநல்லூரின் சட்டமன்றத் தொகுதியோ தனக்குக் கிடைக்காது என்று கருதுகிற ஆனந்தன், தன்னுடைய காட் ஃபாதரான ஸ்ரீதர் வேம்பு மூலமாக, எந்த வகையிலாவது தேர்தலில் சீட் பெற்றுவிட வேண்டும் என்று காய்களை நகர்த்தி வருகிறார்.
ஆனால், நயினாரோ ஆனந்தன் சட்டமன்றத்தையோ, பாராளுமன்றத்தையோ எட்டிப்பார்த்து விடக்கூடாது என்ற நோக்கில், அவரும் காய்களை நகர்த்திவருகிறார். அதற்காக நயினார் எடப்பாடியுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றையும் போட்டிருக்கிறார்.
அதன்படி நெல்லை தொகுதியில் நயினாரும், தென்காசி மாவட்டத்தில், தென்காசி தொகுதியில் அங்கு எம்.எல்.ஏ.வாக இருந்த சரத்குமாரும் மீண்டும் களம் காணுவார்கள். அதேபோல், ஆனந்தனின் ஊரான வாசு தேவநல்லூர், அவருக்குக் கிடைக்காதபடி, அதை ஏற்கனவே வென்ற அ.தி.மு.க.வே எடுத்துக்கொள்ளும் வகையிலும் ஒப்பந்தம் செய்துகொண்டிருக் கிறார்கள்.
அங்கே அ.தி.மு.க. மாஜி அமைச்சரான சங்கரன்கோவில் ராஜலட்சுமியை நிறுத்தலாம் என்ற எதிர்பார்ப்பும் இப்போதே ஏற்பட்டிருக்கிறது. இதையறிந்ததும் ஆனந்தன் அய்யாச்சாமி தரப்பு ஆடிப்போயிருக்கிறது'' என்கிறார்கள் விரிவாகவே.
அவர்களே, அரசியலில் ஆளை அடிப்பதும் வீழ்த்துவ தெல்லாம் சாதாரணமப்பா. சொன்னாலும் புரியாது மண்ணாளும் வித்தைகள் என்கிறார்கள் அழுத்தம் திருத்தமாக.
-பி.சிவன்
படங்கள் : ப.இராம்குமார்