ஓவியர் -வடிவமைப்பாளர் -நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட பாண்டு, கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மே 6-ஆம் தேதி அதிகாலையில் மறைந்தார்.
எம்.ஜி.ஆரும் சிவாஜியும் சினிமாவில் தொழில் முறை போட்டியாளர்களாக இருந்தாலும் இருவரும் சகோதரத்துவமான நட்பைக் கடைப்பிடித்தவர்கள்.
அதற்கு நடிகர் பாண்டுவின் வாழ்க்கையிலிருந்தும் ஒரு உதாரணத்தைச் சொல்லலாம்.
1967-ஆம் ஆண்டுவாக்கில்... அந்தச் சம்பவம் நடந்தது.
ஓவியரான பாண்டு, புதுமையான முறையில் எம்.ஜி.ஆரின் முகத்தை ஓவியமாக வரைந்தார். அது பத்திரிகை ஒன்றில் வெளியாகி பரபரக்க வைத்தது.
சிவாஜியின் புகைப்படங்களை வைத்து எம்.ஜி.ஆரின் முகம் உருவாக்கப்பட்டிருந்தது.
எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்துவந்த நடிகர் "இடிச்சபுளி' செல்வராஜின் தம்பிதான் பாண்டு.
செல்வராஜ் மூலம் பாண்டுவை வரச்சொன்னார் எம்.ஜி.ஆர். "எம்.ஜி.ஆரிடமிருந்து பெரும் பரிசு கிடைக்கும்' என ஆவலாய்ச் சென்ற பாண்டுவுக்கு செம டோஸ் விட்டார் எம்.ஜி.ஆர்.
"எவ்வளவு பெரிய நடிகர் தம்பி கணேசன். அவரோட புகைப்படங்களை வச்சு, என்னோட முகத்தை வரைவதா?'' என கண்டித்தார் பாண்டுவை.
எம்.ஜி.ஆரிடம் எப்படியாவது பாராட்டுப் பெறவேண்டும் என விரும்பிய பாண்டு, எம்.ஜி.ஆருடன் கதாநாயகிகளாக நடித்த நடிகைகளின் புகைப்படங்களைக் கொண்டு எம்.ஜி.ஆரின் முக உருவ ஓவியத்தை உருவாக்கிய பாண்டு, எம்.ஜி.ஆரை சந்தித்துக் கொடுத்தார். அந்த ஓவியத்தைப் பெற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர்., இரண்டு பவுன் சங்கி-யை பரிசளித்தார்.
1973-ஆம் ஆண்டில் நடந்த சம்பவம் இது.
1972 இறுதியில் அண்ணா தி.மு.க. கட்சியைத் தொடங்கி யிருந்தார் எம்.ஜி.ஆர். அதனால் 1973-இல் "உலகம் சுற்றும் வாலிபன்' படத்தின் வெளியீட்டிற்கு ஆளும்கட்சி தரப்பில் இடைஞ்சல்கள் தரப்பட்டது. "மதுரையில் இந்தப் படம் வெளியாகி விட்டால்... நான் சேலை கட்டிக்கொள்கிறேன்' என அன்று தி.மு.க. முக்கியஸ் தர்களில் ஒருவரான மதுரை முத்து சவால்விட்டார்.
படம் வெளியாகிறது என்பதை மக்களுக்குத் தெரிவிப்பதில் வால்போஸ்டர்களுக்குத்தான் பெரும்பங்கு. ஆனால் "உலகம் சுற்றும் வாலிபன்' போஸ்டர் ஒட்ட முடியாத சூழல். ஒட்டினால் உடனே கிழித்துவிட தி.மு.க. தொண்டர்கள் தயாராக இருந்ததால்... இந்தச் சிக்கல்.
இந்தச் சமயத்தில்தான் ஸ்டிக்கர் மூலம் விளம்பரப்படுத்தும் தொழில் நுட்பம் வெளிநாடுகளில் பிரபலமாகியிருந்தது.
இதுபற்றி எம்.ஜி.ஆரிடம் பாண்டு சொல்ல... உடனடியாக ஸ்டிக்கர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தச் சொன்னார் எம்.ஜி.ஆர். "உலகம் சுற்றும் வா-பன்' வெளியீட்டிற்கு ஸ்டிக்கர் பப்ளிஸிட்டியே பயன்படுத்தப்பட்டது.
1973 திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் முதன்முதலாக அ.தி.மு.க. தேர்தல் களத்தில் இறங்கியது. அப்போது அது புதிய கட்சி என்பதால் அன்றைய தேர்தல் அதிகாரியான மதுரை மாவட்ட கலெக்டர் ஒதுக்கிய சின்னங்களில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.மாயத்தேவர் "இரட்டை இலை' சின்னத்தைத் தேர்ந்தெடுத்தார். சுவர்களில் எளிதில் வரையும் படியாக இரட்டை இலை சின்னத்தை மாடல் வரைந்து தரும்படி பாண்டு விடம் எம்.ஜி.ஆர். கேட்டுக்கொண் டார்.
மட்டன் கடை ஒன்றில் ஆட்டின் நுûûயீரல் தொங்கவிடப்பட்டி ருப்பதைப் பார்த்து... அதையே நிமிர்த் திப் போட்டு... இலைக்குள் நரம்புகளை வரிகளாக மாற்றி, எளிய வடிவில் ஓவியமாக வரைந்து தந்தார் பாண்டு.
தமாஷ் நடிகர் என அறியப்பட்ட பாண்டுவுக்குள்இப்படி ஒரு மாஸ் இருப்பது இந்த தலைமுறைக்கு வியப்பாகத்தான் இருக்கும்.
-இரா.த.சக்திவேல்
________________
கொடி!
1972-ல் அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது கருப்பு-சிவப்பு நடுவில் அண்ணா உருவம் கொண்ட கொடியை பாண்டு வரைந்ததாகச் சொன்னாலும்... சினிமாவிலும் அரசியலிலும் எம்.ஜி.ஆருடன் பல்லாண்டுகளாக பயணித்த பிரபல திரைப்பட ஆர்ட் டைரக்டர் பா.அங்கமுத்து "அ.தி.மு.க. கொடியை போட்டோகிராபர் சுபாசுந்தரம் கொடுத்த அண்ணாவின் புகைப்படத்தை வைத்து உருவாக்கியதாக'வும் சொல்லப்படுகிறது.