தான்யா ரொம்ப கரெக்ட்யா!
மறைந்த பழம்பெரும் நடிகர் "ஊமைவிழிகள்'’ரவிச்சந்திரனின் மகன் வயிற்றுப் பேத்தி தான்யா ரவிச்சந்திரன். 2016-ல் ரிலீசான "பலே வெள்ளையத்தேவா'’படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக கோலிவுட்டில் அறிமுகமானார். அதன் பின் ராதாமோகனின் "பிருந்தாவனம்'’படத்தி ல் அருள்நிதிக்கு ஜோடி போட்டார். மூன்றாவது படமாக இவருக்கு கிடைத்தது விஜய்சேதுபதியுடன் நடித்த "கருப்பன்'.
முதல் படம் வில்லேஜ், இரண்டாவது படம் சிட்டி, மூன்றாவது படம் வில்லேஜ் என இவரது கேரக்டர்கள் அமைந்தாலும் மூன்று படங்களிலும் தனது துறுதுறு நடிப்பை வெளிப்படுத்தினார். எந்த கேரக்டருக்கும் பொருந்திப் போகும் முகலட்சணமும் தான்யாவுக்கு இருந்தும்... "கருப்பன்'’ரிசல்ட் காலை வாரியதால் இரண்டு வருடங்களாக தமிழில் எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்தார்.
தளர்ந்துவிடாத தான்யா, தெலுங்கில் கார்த்திகேயா கும்மரஹொண்டாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் கடந்த மாதம் கமிட்டாகி, ஹைதரபாத்தில் ஷுட்டிங்கும் விறுவிறுப்பாக போய்க் கொண்டி ருக்கிறது. இந்த சந்தோஷத்தில் தான்யா இருந்த போதுதான் தமிழ்ப்பட சான்ஸ் வந்து மேலும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது.
"சுந்தரபாண்டியன்', "கொம்புவச்ச சிங்கம்டா'’படங்களின் டைரக்டர் எஸ்.ஆர்.பிரபா கரன், பங்கஜம் ட்ரீம்ஸ் புரொடக்ஷன் கம்பெனியை கடந்தவாரம் ஆரம்பித்து, இன்னும் பெயரிடப்படாத முதல் படத்திற்கு பூஜையும் போட்டுவிட்டார். ஜெயப்பிரகாஷ், ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் இப்படத்தில் ஹீரோவும் ஹீரோயினும் தான்யா ரவிச் சந்திரன்தான்.
""ஹீரோக்களுக்காக கதை எழுதிவிட்டு அவர்களின் கால்ஷீட்டை வாங்குவது பெரும்பாடாக இருக்கிறது. அதனால்தான் இந்தக் கதையை எழுதி தான்யாவை ஹீரோயினாக்கிவிட்டேன். நான் கற்பனை பண்ணிய ஸ்மார்ட் போலீஸ் அதிகாரி கேரக்டருக்கு தான்யாதான் செம மேட்ச்சாக இருந்தார். இதற்காக ஸ்பெஷல் ட்ரெயினிங்கும் எடுத்துள்ளார். இந்தக் கதை மேல் உள்ள நம்பிக்கையால் நானே தயாரித்து, டைரக்ட் பண்ணவும் முடிவு பண்ணிட் டேன்''’என்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன்.
சரண்யா ரொம்ப பெர்ஃபெக்ட்யா!
தமிழில் அனேகமாக எல்லா இளம் ஹீரோக்களுக்கும் அம்மாவாக, அக்காவாக, அண்ணியாக நடித்து முடித்துவிட்டார் சரண்யா பொன்வண்ணன். தெலுங்கிலும் செம பிஸியான அம்மா ஆர்ட்டிஸ்ட்டாக கலக்கிவருகிறார். "குணச்சித்திர கேரக்டரா கூப்பிடுங்கய்யா சரண்யா மேடத்தை' என்னும் அளவுக்கு வருடத்தின் முக்கால்வாசி மாதங்கள் கால்ஷீட் டைரி ஃபுல்லாகும் அளவுக்கு பரபரப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார். அதேபோல் பெரிய கம்பெனி, சின்ன கம்பெனி, பெரிய டைரக்டர்கள், சின்ன டைரக்டர்கள் என்ற பேதமெல்லாம் சரண்யாவுக்கு கிடையாது. நடிப்பதற்கு நல்ல ஸ்கோப் உள்ளதாக அவருடைய கேரக்டர் இருந்தால் ஓ.கே.தான்.
சரண்யா பொன்வண்ணனின் நடிப்பைப் பார்த்து சமீபத்தில் கண்கலங்கியவர், தயாரிப்பாளரும் ஹீரோவுமான வி.ராஜா. "சிலந்தி'’படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஆதிராஜன், இப்போது "அருவா சண்ட'’என்ற படத்தை டைரக்ட்பண்ணி முடித்துள்ளார். நாட்டில் இப்போது தலைவிரித்தாடும் சாதிய வன்கொடுமைகளுக்கு சரியான சவுக்கடி கொடுக்கும் இந்தக் கதையில் நடிக்க சில இளம் ஹீரோக்களை அணுகியபோது நோ சொல்லிவிட்டார்களாம். அதனால் தயாரிப்பாளர் வி.ராஜாவே ஹீரோவாக களத்தில் இறங்கிவிட்டார்.
சரண்யா பொன்வண்ணனோ, ""விஜய்சேதுபதியுடன் "தென்மேற்குப் பருவக்காற்று'’படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவத்தை இந்தப் படத்தில் உணர்ந்தேன். என்னைப் போன்ற கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு இதுபோன்ற படம் அமைவது அரிது. டப்பிங் பேசும்போது பல இடங்களில் என்னை அறியாமலேயே அழுதுவிட்டேன்''’என உணர்ச்சி மேலிடப் பேசினார் சரண்யா பொன்வண்ணன்.
அதுல்யா ரொம்ப ஃபீலிங்யா!
"காதல் கண்கட்டுதே'’படம் மூலம் 2017-ல் தமிழ் சினிமாவிற்குள் எண்ட்ரியானவர் அதுல்யா ரவி. மூன்று வருடத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதனால் அதுல்யாவின் மார்க்கெட்டும் டல்லடித்துவிட்டது. இப்போது அதுல்யா ரவியின் கைவசம், சாந்தனுக்கு ஜோடியாக நடிக்கும் "முருங்கைக்காய் சிப்ஸ்'’படம் மட்டும்தான். இதனால் ரொம்பவே ஃபீலிங்கில் இருக்கும் அதுல்யா, "இங்கேயே இருந்து பொழப்பு தழப்ப பார்க்கலாமா... இல்ல தெலுங்குப் பக்கம் போகலாமா' என யோசிக்கிறாராம்.
-பரமு
_____________
அது அவர் இல்லை!
அக். 14-16 நக்கீரன் இதழில், "இரண்டாம் குத்து'’திரைப்படம் குறித்த கட்டுரையில், "பல்லு படாம பார்த்து செய்யுங்க'’என்ற படம் பாதியில் கைவிடப்பட்டு, அந்தக் கதையை மாற்றம் செய்துதான் "இரண்டாம் குத்து' படம் உருவாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. "பல்லு படாம பாத்துக்க'’ என்பது "டெம்பிள் மங்கிஸ்' புகழ் விஜய்வரதராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம். ரிலீசுக்கு தயாராக இருக்கும் இந்தப் படம், ஊரடங்கின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் வெளியாகாமல் இருக்கிறது. இதற்கும் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் "இரண்டாம் குத்து' படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.