பதவியேற்கும் முன் ராஜினாமா?
ஒவ்வொரு மாவட்டத்திலும் புகார்களுக்குரிய நிர்வாகிகளை களையெடுத்துவிட்டு, புதிய நிர்வாகிகளை நியமித்துக் கொண்டிருக்கிறார் தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
கோவை மாநகர பெரியகடைவீதிப் பகுதிக் கழகச் செயலாளராக இருந்தவர் கோவை இராமநாதனின் மகன் செல்வராஜ். கள ஆய்வில் இராம.செல்வராஜ் மீது கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டதால், இவரை நீக்கிவிட்டு மார்க்கெட் மனோகரனை அப்பதவியில் அமர்த்தினார் செயல் தலைவர்.
அடுத்த சில நாட்களில் ""சொந்த வேலைகள் தலைக்கு மேல் இருப்பதால் எனக்கு இந்தப் பொறுப்பு வேண்டாம். என்னால் செயல்பட முடியாது. ஆகவே ராஜினாமா செய்கிறேன்'' என்று எழுதிய கடிதத்தை, சென்னை சென்று அறிவாலயத்தில் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் மார்க்கெட் மனோகரன். பகுதி கழகச் செயலாளர் பதவி என்பது ஒரு எம்.எல்.ஏ. பதவிக்கு இணையானது என்பது அவருக்குத் தெரியாதோ?
-ஜீவாதங்கவேல்
சவாலில் தோற்ற எம்.எல்.ஏ.!
பெரம்பலூர் எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன், மாவட்ட ஊரக வாழ்வாதாரத்துறையின் துணை இயக்குநர் தேவநாதனுக்கு போன் போட்டார். ""யோவ்... அம்மா ஸ்கூட்டர் பயனாளிகள் லிஸ்ட் ஒண்ணை நான் அனுப்பினேன். அந்த லிஸ்ட்படி கொடுக்காம உங்க நோக்கத்துக்கு ஒரு லிஸ்டை ரெடி பண்ணியிருக்கீங்க... என்ன?'' கோபமாகக் கேட்டார்.
""சார், கலெக்டர் நியமிச்ச ஒரு குழுதான் செலக்ட் பண்ணுச்சு. நான் மட்டுமில்லை'' பதில் சொன்னார் தேவநாதன். எம்.எல்.ஏ.வின் கொந்தளிப்பு அதிகமானது. ""பார்க்கலாம், பார்க்கலாம் நீயா நானா?'' சவால் விட்டார் எம்.எல்.ஏ.
இரண்டே மாதத்தில் தேவநாதனுக்கு பணியிட மாறுதல் வந்தது. மாறுதல் கடிதம் அதிகாரி தேவநாதனுக்கு வருமுன் எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வனின் நிழல்களுக்கு கிடைத்துவிட்டது. அதைக் கொண்டு அதிகாரியின் முகத்தில் எறிந்து ""எங்க எம்.எல்.ஏ.வை பகைத்தால் என்னாகும்னு தெரிஞ்சுக்கோ'' என்றார்கள். எரிச்சலான தேவநாதன் உயர்நீதிமன்றத்தை நாடினார். இப்போது உயர்நீதிமன்றம் தேவநாதனின் பணியிட மாறுதலுக்கு தடையுத்தரவு வழங்கியுள்ளது.
-எஸ்.பி.சேகர்
நக்கீரன் செய்தி எதிரொலி! விருதுநகர் டி.ஆர்.ஓ. இடமாற்றம்!
கடந்த ஜூலை 7-10 இதழில் ‘"பிஸ்கோத்து கணக்கு! பட்டாசு லஞ்சம்! கலெக்டர் - டி.ஆர்.ஓ. மோதல்!'’ என்னும் தலைப்பில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானத்துக்கும், டி.ஆர்.ஓ. ஆனந்தகுமாருக்கும் இடையிலான உரசல் குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம். ஜூலை 11-13 இதழில் "அமைச்சர் பறக்கவிட்ட சமாதானக்கொடி'’என்னும் தலைப்பில், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இருவரையும் அழைத்து, “"விருதுநகர் நிகழ்ச்சியில் முதல்வர் கலந்துகொள்கிறார். அதுவரையிலும் பொறுமையாக இருக்க வேண்டும்'’என்று சமரசம் செய்து வைத்ததையும் குறிப்பிட்டிருந்தோம். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காமராஜர் விழாவுக்காக விருதுநகர் வந்து சென்றார்.
ஒரு குழு அமைத்து, ஆண்டுக்கு ரூ. 1 கோடி என்பதை இலக்காக வைத்து, பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகளில், டி.ஆர்.ஓ. அலுவலகம் மாமூலாக வாங்குகின்ற லஞ்சம் குறித்து நாம் செய்தி வெளியிட்டிருந்த நிலையில்... ஆட்சியர் சிவஞானத்துடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த டி.ஆர்.ஓ. ஆனந்தகுமார், சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
-சி.என்.இராமகிருஷ்ணன்
கட்சி வளர்க்க புது டெக்னிக்!
கட்சியை வளர்க்க புதிய டெக்னிக்கை கையாண்டிருக்கிறார் அ.ம.மு.க.வின் திருவாரூர் நகரச் செயலாளரான கடலைக்கடை பாண்டியன். ஜெ.வுக்கு புகழ் சேர்த்த அம்மா உணவகம் போல, திருவாரூர் ஐயனார் கோயில் தெருவில் "அம்மா மெஸ்'’என்ற பெயரில் மலிவுவிலை அசைவ உணவு விடுதியைத் திறந்திருக்கிறார். அங்கே அன்லிமிடெட் அசைவ சாப்பாடு வெறும் 40 ரூபாய்க்குக் கிடைக்கிறது. மட்டன், சிக்கன், ஈரல் என சகலமும் தலா 30 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. ""பெண்களைக் கொண்டே நிர்வகிக்கப்படும் இந்த அசைவ உணவு விடுதியில் வணிக லாபத்தை நான் எதிர்பார்க்கவில்லை. அரசியல் லாபத்தை மட்டுமே எதிர்பார்க்கிறேன்''’ என்கிறார் பாண்டியன். அண்மையில் தன் சொந்த செலவில் கட்சிக்குக் கட்டடம் கட்டி, தினகரனைக் கொண்டு திறந்து வைத்திருக்கிறார்.
-நாடன்
வனவிலங்குகளைச் சாகடிக்காதீர்!
பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில்தான் ஒன்பது மலைக்கிராமங்கள் உள்ள பாலமலை உள்ளது. காட்டு யானைகள், காட்டு பன்றிகள், சிறுத்தைப் புலிகள் வாழக்கூடிய இங்குதான் புகழ்பெற்ற அரங்கநாதர் கோயில் உள்ளது.
இந்தக் கோயிலுக்கு சுற்றுலாவாசிகளின் வருகை அதிகரித்துக் கொண்டே இருந்த சூழலில், அமாவாசை, பவுர்ணமி நீங்கலான மற்ற நாட்களில் பாலமலைக்குச் செல்லத் தடைவிதித்திருக்கிறார் வனச்சரக அதிகாரி மனோகர்.
ஏன்? எதற்கிந்தத் தடை?
""கணவன் மனைவியென்று சொல்லிக்கொண்டு வர்றவங்ககூட காதல் ஜோடிகளுக்கு இணையாக ஆட்டம் போடுகிறார்கள். வன விலங்குகளைப் பாதுகாக்க வேண்டிய பாலமலைப் பகுதியில் உடைந்த மதுபாட்டில்களும், நொறுக்குத்தீனி கொண்டுவரும் பிளாஸ்டிக் பைகளும், காண்டம் உறைகளும் கண்டபடி கிடக்கின்றன. அதனால்தான் அமாவாசை, பவுர்ணமி தவிர மற்ற நாட்களில் மேலே செல்லத் தடைவிதித்திருக்கிறோம். திருட்டுத்தனமாகச் செல்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்'' என்கிறார் வனச்சரக அதிகாரி மனோகர்.
-அ.அருள்குமார்
அமைச்சர் மருமகனின் அதிகாரம்!
நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் கிராம நிர்வாக உதவியாளர் பணியிடங்கள் பல காலியாக இருந்தன.
விருப்பம் உள்ளவர்களிடம் விண்ணப்பம் பெற்றார் வேதாரண்யம் வட்டாட்சியர். விண்ணப்பித்த 183 பேரில் 147 பேர் நேர்காணலில் கலந்து கொண்டனர். பெண்களும் வந்திருந்தனர். எல்லாரிடம் கேட்கப்பட்ட முக்கியமான கேள்விகளில் ஒன்று ""மீனியல் வேலைன்னா என்னனு தெரியுமா? இன்றைய வி.ஏ.ஓ.க்கள் பெரும்பாலோர் டாஸ்மாக் வாடிக்கையாளர்கள். அவங்க சரக்கும் சைட்டிஸ்சும் கேட்டால் முகம் சுழிக்காமல் வாங்கி வந்து குடுப்பீங்களா?'' என்பது.
கலந்து கொண்டவர்கள் 10 பேருக்கு வேலை கிடைத்தது. அவர்களில் 7 பேர் வேதாரண்யம் தொகுதியில் வாழ்பவர்கள். மூன்று பேர் வேறு தாலுகாக்களைச் சேர்ந்தவர்கள். அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மருமகன் சிபாரிசு. அந்த மூவரும் சில லட்சங்கள் மதிப்புடையவர்கள்.
-க.செல்வகுமார்
ஆளாளுக்கு புடுங்கிச் சுருட்டுறாக!
அ.தி.மு.க. தொழில்நுட்பப் பிரிவு திருச்சி மா.ù.ச. பாலக்கரை படையாச்சி தெரு ரவிச்சந்திரனை, திண்டுக்கல் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
""நடப்பது எங்கள் ஆட்சி. அத்தனை தெர்மாக்கோல்களும் என் பாக்கெட்டில். கையில் கரன்ஸி, அடுத்த மாதம் வேலை'' என்று சொல்லி, 2015-ஆம் ஆண்டு நத்தம் பகுதியைச் சேர்ந்த 11 பேரிடம், 63 லட்ச ரூபாயை வாங்கியிருக்கிறார் இந்தத் தொழில்நுட்பப் பிரிவு மா.செ. ரவிச்சந்திரன்.
இதோ இன்றைக்கு... நாளைக்கு என்று மூன்று வருடங்களை ஓட்டியவரை இன்னும் நம்பத் தயாராக இல்லை நத்தம்வாசிகள். திண்டுக்கல்லில் புகார் கொடுத்துவிட்டார்கள்.
திருச்சி எம்.பி. குமாரும், அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் என்னைக் காப்பாற்ற இருக்கிறார்கள் என்று அளந்துவிட்டுக் கொண்டிருந்தாராம். 65 லட்சத்தில் 60-ஐ கொடுத்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்'' வெறுங்கையில் முழம்போட முடியுமா?
-ஜெ.டி.ஆர்.