Skip to main content

கூத்து

அமைச்சரின் டாஸ்மாக் சபதம்!

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேக வேகமாகத் திறந்து கொண்டிருக்கிறது இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அரசு.
dindugalsrinivsan
திண்டுக்கல் மாவட்டத்தில், மூடப்பட்ட 35 டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு அனுமதி கேட்டு, மாவட்ட ஆட்சியர் வினய்க்கும் மாநகராட்சி ஆணையர் மனோகரனுக்கும் டாஸ்மாக் மேலாளர் சஞ்சய் சாய் கடிதம் அனுப்பினார்.

""திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் செயல்பட்ட மூன்று கடைகளும், நேருஜி நகரில் செயல்பட்ட ஒரு கடையும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தன. அந்த 4 கடைகளுக்கும் அனுமதி தர இயலாது. எஞ்சிய 31 கடைகளை திறக்கலாம்'' என்றனர் ஆட்சியரும் ஆணையரும்.

தடைவிதித்த நான்கு கடைகளும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் ஆதரவாளர்கள் நடத்தக்கூடிய கடைகள். அதனால் டென்ஷனான அமைச்சர், ""அந்த 4 கடைகளுக்கும் சேர்த்து அனுமதி கொடுத்தால் மற்ற 31 கடைகளும் செயல்படும். இல்லையேல் மொத்தக் கடைகளும் பூட்டியே கிடக்கும்'' ஆட்சியரிடமும் ஆணையரிடமும் உரக்கச் சொன்னாராம்.

அமைச்சர் சொன்னபடி அத்தனை கடைகளும் அடைபட்டிருக்கின்றன.

-சக்தி

போலீஸிடம் பிடிபட்ட கள்ள லாட்டரி!

ஆன்லைன் லாட்டரி விற்பனை கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் தாராளமாக விற்பனையாகிறது என எஸ்.பி. விஜயகுமாருக்கு புகார்கள் வந்தன. நடவடிக்கை பொறுப்பை தாலுகா ஆய்வாளர் அம்பேத்கரிடம் கொடுத்தார் எஸ்.பி.

இரண்டு நாட்கள் ரகசியமாய் கண்காணித்த ஆய்வாளர் அம்பேத்கர், மூன்றாம்நாள் தலைக்கவசம், டீ சர்ட்டுடன் சிதம்பரத்தில் உள்ள கஞ்சித் தொட்டிமுனை கடையொன்றிற்குச் சென்றார். லாட்டரி சீட்டை வாங்கினார். அடுத்து விற்பனை செய்த கோவிந்தராஜ், ரகுமான், ராமமூர்த்தி மூவரையும் கைது செய்தார். கடையின் உரிமையாளர் ஜம்புபாய் தலைமறைவாகிவிட்டார்.

""லாட்டரி சீட்டு விற்கிறவர்களைப் பிடித்துப் பிடித்து நாங்களும் வழக்குப் போட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். இப்ப தாலுகா இன்ஸ்பெக்டரும் பிடித்திருக்கிறார். மேலிட நடவடிக்கை எப்படி இருக்கிறதென பார்ப்போம்'' என்கிறார்கள் சிதம்பரம் நகரப் போலீஸார்.

-காளிதாஸ்

அய்யாகண்ணுவை விரட்டும் பா.ஜ.க. டீம்!

ayyakannu

தென்னிந்திய நதிகள் இணைப்பு மற்றும் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணுவும் அவரது சகாக்களும், அரக்கோணம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வசிக்கின்ற பாரதிய கிசான் கரும்பு விவசாயிகள் சங்க முனுசாமியை சந்திப்பதற்காகச் சென்றனர். இதையறிந்த பா.ஜ.க. வழக்கறிஞர் ஒருவர் பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு தகவலைக் கொடுத்தார்.

இரவு 9 மணிக்கு அந்த இடத்துக்கு பா.ஜ.க. முன்னாள் ந.செ. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வந்த 20 பேர் அய்யாகண்ணு தரப்பினர் மீது எதிர்ப்புக் கோஷங்களையும் சரளைக் கற்களையும் வீசினர். திருச்சி மண்ணச்சநல்லூர் பெரியசாமி என்கிற விவசாயி காயம்பட்டார். அய்யாகண்ணு தரப்பினரின் கார் கண்ணாடிகள் நொறுங்கின. இந்தப் புகாரில் பா.ஜ.க. ந.செ. கிருஷ்ணமூர்த்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்த நான்காம் நாள், வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த அய்யாகண்ணுவை சக்திசேனா இந்து மக்கள் இயக்கம் தாக்க முயன்றது. போலீசார் பாதுகாத்தனர். அடுத்த மூன்றாம் நாள் வந்தவாசி சாலையில் விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகித்துக் கொண்டிருந்த அய்யாகண்ணுவோடு அந்த ஊர் பா.ஜ.க.வினர் தகராறு செய்தனர். தொடர் எதிர்ப்பால் அய்யாகண்ணு துவண்டு போயுள்ளார்.

-து.ராஜா
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்