கவிஞர் வீட்டுத் திருமணக் கூட்டணி!

மு.க.ஸ்டாலின் கட்சித் தலைவரான பிறகு தலைமையேற்று நடத்தி வைத்த முதல் திருமணம் என்ற பெருமை தி.மு.க.வின் வர்த்தகர்அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் வீட்டாருக்கு கிடைத்துள்ளது. கவிஞரின் மகளான இன்ஜினியர் சசிகலா, மணமகன் இன்ஜினியர் முத்துவீரப்பன் திருமண விழாவில் கி.வீரமணி, குமரி அனந்தன், திருமாவளவன், கவிஞர் வைரமுத்து எனப் பலரும் பங்கேற்று வாழ்த்தினர். அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடந்த விழாவுக்கு பா.ஜ.க.வின் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வருகை தந்ததும் அவர்களைத் தி.மு.க. பிரமுகர்கள் வரவேற்றதும் அரசியல் பண்பாட்டை வெளிப்படுத்த, காங்கிரசின் திருநாவுக்கரசர், தங்கபாலு, கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பல தரப்பினரும் காசிமுத்துமாணிக்கத்துடன் ஒன்றாக உட்கார்ந்து கலகலப்பாக பேசியதும் கூடுதல் சுவாரஸ்யம்.

-கீரன்

போட்டிக் கூட்டம் நடத்தும் அமைச்சர்!

Advertisment

புதுக்கோட்டையில் அ.ம.மு.க. பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்தும் பொறுப்பை மா.செ.க்கள் பரணி கார்த்திகேயனிடமும் குழ.சண்முகநாதனிடமும் ஒப்படைத்தார் டி.டி.வி.தினகரன்.

காவல்துறை அனுமதி மறுத்ததால், நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று 15-ஆம் தேதியன்று கட்டியாவயலில் கூட்டத்தை நடத்தியது அ.ம.மு.க. ""புதுக்கோட்டை மண், இந்தியாவின் முதல் பெண் மருத்துவரை உருவாக்கிய மண். இந்த மண்ணில்தான் இன்றைக்கு இந்திய மருத்துவர்களுக்கே இழுக்கை ஏற்படுத்தும் ஒரு மருத்துவர் அமைச்சராக இருக்கிறார்'' என்று அமைச்சர் விஜயபாஸ்கரை சொன்னார்.

மறுநாள் புதுக்கோட்டைக்கு வந்த அமைச்சர் விஜயபாஸ்கர், ""இன்னும் ஒருவாரத்தில் தினகரனுக்குப் போட்டியாக இதைவிடப் பன்மடங்கு பிரமாண்ட கூட்டத்தை நாம் நடத்தியாக வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். அக்கூட்டத்திற்கு இ.பி.எஸ்.ஸையும், ஓ.பி.எஸ்.ஸையும் நான் கூட்டி வருகிறேன்'' என்று சபதம் எடுத்திருக்கிறார்.

Advertisment

-இரா.பகத்சிங்

கலவரத்தை தடுத்த முன்னாள் எம்.பி!

mpdurai

இந்துக்கள், முஸ்லிம்கள், சம அளவில் வசிக்கின்ற நகரம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி. சில வருடங்களாகவே இங்கே விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் பதற்றம் தொற்றிக்கொண்டிருந்தது.

இந்த ஆண்டும் பதற்றத்தில்தான் அந்தநாள் விடிந்தது. தங்கள் கடைகளை, வீடுகளைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஐநூறுக்கும் அதிகமான முஸ்லிம்கள் கோட்டைப் பகுதியில் நின்றிருந்தனர். மருவத்தூர் சாலையில், சில பிரச்சினையால் ஏற்பட்ட சலசலப்பில் இருவரை இழுத்துக்கொண்டு போனது எஸ்.பி. சிபிச்சக்கரவர்த்தி தலைமையிலான போலீஸ்.

கோட்டைப் பகுதியில் தடியடி நடத்தவேண்டிய அளவுக்குப் போய்விட்டது. கற்களை வீசியதால் 10 போலீசாருக்கு காயம். பா.ம.க. முன்னாள் எம்.பி. துரையும், வி.ஐ.பி.கள் சிலரும் இரு தரப்பிலும் மாறி மாறிப் பேசி வாக்குறுதிகளை அளித்து அமைதிப்படுத்தி, இரவு 10 மணிக்கு ஊர்வலத்தை நடத்தி முடிக்க வைத்தனர்.

-து.ராஜா

போலி கையெழுத்தில் 8 பேருக்கு வேலை?

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருமங்கலம் உறுப்புக் கல்லூரியில், முன்னாள் துணைவேந்தர் செல்லதுரையின் பழைய கையெழுத்தைப் பயன்படுத்தி, எட்டுப்பேருக்கு பணி நியமனம் நடைபெற்றுள்ளது.

கிளார்க்காக சிவநேசன், அட்டெண்டராக சிவக்குமார், மார்க்கராக முகேஷ், தமிழ்த்துறையில் கார்த்திக், ஆங்கிலத் துறையில் ரஞ்சித், காமர்ஸ் பிரிவில் சிவரஞ்சனி, ஸ்வீப்பராக மேனகா காந்தி, வாட்ச்மேனாக லோகநாதனும் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். புகார் கிளம்பியதும் சட்டத்துறை செயலாளர் பூவழகன் தலைமையிலான கன்வீனர் குழு ஆய்வு நடத்தி, முறைகேடான நியமனம் என கண்டறிந்தது. இவர்களில் ஐவரின் பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டன. இம்முறைகேடு நடக்க காரணமானவர், நிர்மலாதேவி வழக்கில் விசாரணைக்காக நீதிமன்றம் சென்றுவரும் கருப்பையா என்பவர்தான். இவர் சின்னையாவின் பயிற்சி மாணவர்.

-மதி

kuthoo

உயிர்பெற்ற கற்பழிப்பு வழக்கு!

எட்டாண்டுகளுக்கு முன்பு திருச்சியைப் பரபரப்பிற்கு உள்ளாக்கிய ஒரு பாலியல் வழக்கு.

கன்னியாஸ்திரி பிளாரன்ஸ் மேரி என்பவர், புனித வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார், கர்ப்பமுற்றதும் கட்டாயப்படுத்தி கருக்கலைக்க வைத்தார், அதன்பிறகும் தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் செய்தார் என புகார் கொடுத்தார்.

திருச்சி மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. தலைமறைவான முதல்வர் ராஜரத்தினம் முன்ஜாமீன் பெற்றார்.

கருக்கலைப்பு செய்த காவிரி மருத்துவமனை டாக்டர் சுஜித்ரா, அந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டு, மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். ஆறு வருடமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் சுவாமிநாதன் ""வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது, ஆனால் ஆஜராவதிலிருந்து விலக்களிக்கிறேன். இது முக்கிய வழக்கு, இதை 6 மாதத்திற்குள் கீழ்நீதிமன்றம் முடிக்கவேண்டும்'' என உத்தரவிட்டார்.

-ஜெ.டி.ஆர்.

இது மோசடியின்றி வேறென்ன?

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை 138 ஆண்டு பழமையானது. ஆனால் இதுவரை இங்கே சி.டி. ஸ்கேன் எந்திரம் இல்லை. பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் பயனாக இப்போதுதான் ஒன்றரைக்கோடி மதிப்புள்ளது என்று ஒரு சி.டி.ஸ்கேனை கொண்டு வந்து மயிலாடுதுறை மருத்துவமனையில் வைத்து திறப்புவிழா நடத்திக்கொண்டாடினர். மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமாரும், அமைச்சர் ஓ.பி.எஸ். மணியனும், எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணனும். போதாக்குறைக்கு ""இதைக் கொண்டுவருவதற்காக ராப்பகலா பாடுபட்டோம்'' என்று தாங்களே புகழ்ந்துகொண்டார்கள்.

சி.டி.ஸ்கேன் திறப்புவிழா ஆரம்பித்ததும், அதை இயக்கியதும் தெரிந்துவிட்டது.

""ஒன்றரைக்கோடிக்கு புதிதாய் வாங்கிய சி.டி.ஸ்கேன் எந்திரத்தை நாகை மருத்துவமனையில் வைத்துவிட்டு, அங்கே பல ஆண்டுகளாக பழுதாகிக் கிடந்ததை இங்கே கொண்டுவந்து நாடகமாடிவிட்டார்கள். காறித்துப்பியிருக்கிறார்கள் மருத்துவர்களும், பொதுமக்களும்.

-செல்வகுமார்