ஆட்சியரை சந்திக்க வந்த ஆடுமாடுகள்!

kuthoo

காவிரி பாயும் திருச்சி மாவட்டம் பாவப்பட்ட பூமியாகிவிட்டது. ஆற்றில் நீருமில்லை, மணலுமில்லை. நிலத்தடி நீர் வற்றிவிட்டதால், கால்நடைகளின் தாகம் தணிக்கவும் வகையில்லை. இந்நிலையில்தான் காவிரிக்காக போராடிய மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

Advertisment

அடைக்கப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டு வந்தார்கள் சமூகநீதிப் பேரவையினர். ஆடுமாடுகளின் கழுத்தில் "தண்ணீரின்றித் தவிக்கும் எங்களை வாழவிடுங்கள்' என்ற வாசக அட்டைகளைத் தொங்கவிட்டிருந்தனர். ஆடுமாடுகளை அலுவலக வளாகத்திற்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர் போலீசார். நீண்டநேர வாக்குவாதங்களுக்குப் பிறகு, ஆடுமாடுகளின் கழுத்தில் தொங்கிய கோரிக்கை அட்டைகளோடு போய் உள்ளே ஆட்சியரிடம் மனுக் கொடுத்தனர் சமூகநீதிப் பேரவையினர்.

-ஜெ.டி.ஆர்.

மாற்றான் தோட்டத்து மல்லிகை!

Advertisment

அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட அடுக்கம்பாறையில் உள்ளது வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இதில் 20-04-18 அன்று குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு, தாய்ப்பால் சேமிப்பு வங்கி தொடக்கவிழா நடந்தது.

அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வீரமணி, நிலோபர் கபில் கலந்துகொண்ட இவ்விழாவுக்கு ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களை மட்டுமே, மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறையும் அழைத்திருந்தது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான அணைக்கட்டு நந்தகுமாரும், வேலூர் கார்த்திகேயனும் அழையா விருந்தாளிகளாக வந்திருந்தனர்.

விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மட்டுமே பேசுவார் என்று அறிவித்ததால், தானும் பேசியாக வேண்டும் என்று போராடி அனுமதி வாங்கிப் பேசிய அணைக்கட்டு எம்.எல்.ஏ.வும், வேலூர் மத்திய மாவட்டச் செயலாளருமான நந்தகுமார்... ""இது என் தொகுதி. இந்தத் தொகுதி மக்களின் பிரதிநிதி நான். இது அரசு நிகழ்ச்சி. ஆனாலும் என்னை அதிகாரிகள் அழைக்கவில்லை. என் தொகுதி மக்களின் குறைகளை நான்தானே சொல்லவேண்டும். இந்த மருத்துவமனையில் குடிநீர் வசதியில்லை, கழிப்பறை வசதியில்லை'' குறைகளைக் கொட்டிவிட்டு அமர்ந்தார். எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு அமைச்சர்கள் யாரும் பதில் சொல்லவில்லை.

-து.ராஜா

நர்ஸ் மரணம் - டாக்டர் கைது!

kuthoo

புதுக்கோட்டை மாவட்ட முத்துக்குடா என்ற மீனவர் கிராமத்தில் பிறந்து, செவிலியர் பட்டயப் படிப்பு முடித்து மணல்மேல்குடி விஜய் மருத்துவமனையில் மூன்று ஆண்டுகளாகப் பணிபுரிந்தார் தாயம்மாள் (24). அவருடன் அவர் சித்திமகள் துரோபதையும் பணியாற்றினார்.

28-03-18 அன்று, ""மருத்துவமனை ஓய்வறையில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுவிட்டார் தாயம்மாள்'' என்று, வீட்டில் இருந்த துரோபதைக்கு சக செவிலியர் தகவல் தந்தார்கள். பதறியபடி ஓடினார்கள் தாயம்மாளின் தந்தை முத்துராஜும் குடும்ப நண்பர்களும்.

விஜய் மருத்துவமனையில் தாயம்மாளின் உடல் இல்லை. "அரசு மருத்துவமனைக்கு கொண்டுபோய்விட்டார்கள்' என்று ரகசியமாகச் சொன்னார் ஒரு நர்ஸ். அங்கே ஓடினார்கள். "அப்படி ஏதும் சடலம் வரலையே' என்றார் அரசு மருத்துவமனை ட்யூட்டி டாக்டர் ஜெகன். அந்த டாக்டருக்குத் தெரியாமலே பிணவறையில் போட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள் விஜய் மருத்துவமனை டாக்டர் முத்துவும் மகன் டாக்டர் விஜய்ஆனந்த்தும்.

சாலை மறியல், போராட்டம், கல்வீச்சு எல்லாவற்றுக்கும் பிறகு டாக்டர் முத்துவையும் இன்னும் இருவரையும் கைது செய்திருக்கிறது போலீஸ். தாயம்மாளின் சாவுக்குக் காரணம் என்று சந்தேகப்படும் விஜய்ஆனந்த் பெயரை வழக்கில் சேர்க்கவில்லையே என்கிறார்கள் தாயம்மாள் தரப்பினர்.

-செம்பருத்தி

அரம்போலும் கூர்மையர்!

அரியலூர் மாவட்டம் விளாங்குடி ஏரி தூர்ந்து போய்விட்டது. பல ஆண்டுகளாக விவசாயம் நடக்கவில்லை. குடிநீருக்கும் தட்டுப்பாடு. நிலத்தடி நீரும் ஆழத்திற்குச் சென்றுவிட்டது.

""ஆறு லட்ச ரூபாய் இருந்தால், 64 ஏக்கர் பரப்பளவுள்ள நம்ம ஏரியை தூர்வாரி ஆழப்படுத்திவிடலாம். நீர்தேங்கினால் 44 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்வார்கள். ஆடு, மாடு, மனிதர்களுக்கு குடிநீர் பஞ்சம் தீரும். உங்களால் ஏதாகினும் உதவ முடியுமா?'' அமெரிக்காவில் வசிக்கும் தனது மகள் ஆனந்தவள்ளியிடமும் மருமகன் அம்பலவாணனிடமும் உதவி கோரினார் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் தியாகராஜன்.

அவர்கள் 4 லட்சம் அனுப்பினார்கள். அமெரிக்காவில் உள்ள "எய்ம்ஸ் இந்தியா பவுண்டேஷ'னிடம் 1 லட்சத்து 80 ஆயிரம் நன்கொடை பெற்றுக் கொடுத்தார்கள். விளாங்குடி ஏரியைத் தூர்வாரி, கரையையும் உயர்த்தினார். மழை குறைவாகப் பெய்தாலும், ஏரி நிரம்பியது. ஒருபோக விவசாயம் அருமையாக நடந்தது. விளாங்குடி மக்களின் குடிநீர்ப் பஞ்சமும் தீர்ந்தது.

"இந்த ஆண்டு அருகிலுள்ள பிள்ளையார்குளத்தையும், வீரப்பிள்ளை குளத்தையும் தூர்வாரி, சீர்செய்யும் பணியைத் தொடங்கிவிட்டார் தியாகராஜன்.

வள்ளல்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

-எஸ்.பி.சேகர்

காவலில் தவறிய காவல்துறை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இப்போது அதிகம் நடப்பது தாலிச்செயின் அறுப்புத் திருட்டுகள்தான். இரவுகளில் கதவுகளைத் திறந்துபோட்டோ, திண்ணைகளிலோ தூங்கும் தாய்மார்களின் செயின்களை, நகைகளைத் திருடிச் செல்கிறார்கள்.

காவல்நிலையங்களில் புகார் செய்தால் சி.எஸ்.ஆர். கூடப் போடுவதில்லை. இதனால் பல கிராமங்களில் உள்ளூர் இளைஞர்களே பாதுகாப்புக் குழு அமைத்து இரவு 9 மணி முதல் விடியும்வரை ரவுண்ட்ஸ் போவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.

21-04-18 இரவு 11:30 மணி. வெம்பாக்கத்தில் கேட்டரிங் வேலைக்குச் சென்ற தங்கள் நண்பன் ஆனந்தனை அழைத்து வருவதற்காக, தென்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த சதாசிவம், மாதவன், யுவராஜ் ஆகிய மூன்று இளைஞர்களும், செய்யாறு வட்டம் சுமங்கலி கிராமம் வழியாக ஒரே டூவீலரில் சென்றார்கள்.

சுமங்கலி கிராம ரவுண்ட்ஸ் இளைஞர் படை நிறுத்தியும், டூவீலர் நிற்காமல் சென்றதால் "திருடர்கள்... திருடர்கள்...' என்று கூச்சலிட்டபடி துரத்தியதோடு, கற்களையும் எறிந்துள்ளனர். கல்லடிபட்டு டூவீலரில் இருந்து விழுந்த இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர் சதாசிவம் ஸ்பாட்டிலேயே இறந்துவிட்டார். சுமங்கலி கிராம இளைஞர்கள் ஏழுபேர் கைதாகி இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். காவல் பணியை காவல்துறை சரியாகச் செய்திருந்தால் அநியாயமாக ஒரு இளைஞர் இறந்திருக்கமாட்டார், எழுவர் சிறை சென்றிருக்கமாட்டார்கள்.

-கிங்